விமானத்திலிருந்து விழுந்தவரில் ஒருவர் வைத்தியர்!

தலிபான்களுக்கு பயந்து கடந்த 16-ம் திகதி ஆப்கன் மக்கள் பலர் காபூல் விமான நிலையத்திற்கு ஓடினார்கள். அங்கிருந்து புறப்பட்ட அமெரிக்க விமானப் படை விமானத்தில் சிலர் தொற்றிக்கொண்டு சென்றனர். அதில் இருவர் நடுவானிலிருந்து விழுந்து இறந்தனர். அவர்களின் அடையாளங்கள் தெரிய வந்துள்ளது. அதில் ஒருவர் 30 வயது டாக்டர் எனத் தெரியவந்துள்ளது.

கடந்த திங்களன்று காபூலிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட அமெரிக்க விமானத்துடன் பல ஆப்கானியர்கள் ஓடிய காட்சி உலகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விமானத்திற்குள் ஏற முடியாத சிலர் பக்கவாட்டில் தொற்றிக்கொண்டு சென்றனர். டேக் ஆப் ஆகி விமானம் நான்கு கிலோ மீட்டர் கடந்த நிலையில் விமானத்திலிருந்து இருவர் கீழே விழுந்தனர்.

அந்த காட்சிகளும் வெளியாகி உலகை உலுக்கியது. அவர்கள் இருவரும் ஒரு வீட்டின் மேல் விழுந்து உடல் சிதறி உயிரிழந்துள்ளனர்.

அந்த வீட்டின் உரிமையாளர் வாலி சலேக் கூறுகையில்,

“ கடந்த திங்களன்று குடும்பத்தினருடன் வீட்டிலிருந்த போது மாடியில் பலத்த சத்தம் கேட்டது. லாரி டயர் வெடித்தது போல் இருந்தது. மாடிக்கு ஓடிச்சென்று பார்த்த போது 2 உடல்கள் மோசமான நிலையில் கிடந்தது. தலை சிதறி, வயிறு கிழிந்த நிலையில் இருந்தனர். என் மனைவி அதை கண்டு மயங்கி விழுந்தார்.

பக்கத்து வீட்டு நபர் விமானத்திலிருந்து இருவர் விழுந்ததை டிவியில் பார்த்ததாக தெரிவித்தார். அந்த உடல்களை துணியால் மூடி நானும், என் உறவினர்களும் மசூதிக்கு கொண்டு சென்றோம். அவர்களது பாக்கெட்டுகளில் அடையாள அட்டைகள் இருந்தன. ஒருவர் சபியுல்லாஹ் ஹோதக், டாக்டர். மற்றொருவர் பிடா முஹம்மது என்பது தெரிந்தது. 30 வயதுக்குட்பட்டவர்கள்” என்று தெரிவித்துள்ளார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *