காய்ச்சலை கொரோனா என நினைத்து தம்பதிகள் தற்கொலை!

சாதாரண காய்ச்சலை கொரோனா என நினைத்து தம்பதிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே உள்ள சித்ராப்புராவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ஆர்யா சுவர்ணா. இவரது மனைவி குணா சுவர்ணா.

இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆன நிலையில், குழந்தை இல்லை. இந்த நிலையில், அவர்கள் மங்களூரு போலீஸ் கமிஷ்னருக்கு வாட்சப் ஆடியோ ஒன்றை அனுப்பியிருந்தனர்.

அந்த ஆடியோவில், தங்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும் அதனால் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் தெரிவித்தனர். இந்த ஆடியோவை கேட்டு அதிர்ச்சியடைந்த கமிஷனர் அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது பதில் எதுவும் அளிக்கபடாத நிலையில், அவர்களின் முகவரியை கண்டுபிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, உடனடியாக போலீசார் அந்த தம்பதியின் முகவரியை கண்டுபிடித்து அங்கு சென்றபோது அவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

அதன் பின்னர் போலீசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் தம்பதிகள் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதமும், ரூ.1 லட்சம் பணமும் வீட்டில் இருந்தது.

அந்த கடிதத்தில், கொரோனா தொற்றால் நாங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக கருதுகிறோம். எனவே நாங்கள் உயிருடன் வாழ விரும்பவில்லை. நாங்கள் தற்கொலை செய்து கொள்கிறோம். எங்களது உடல்களை இறுதிச்சடங்கு நடத்தி அடக்கம் செய்ய ரூ. ஒரு லட்சம் பணம் வைத்துள்ளோம். தங்களின் சொத்துகளை ஆதரவற்றோர் இல்லங்களுக்கு வழங்குமாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், பிரேதப் பரிசோதனைக்கு முன்னதாக இருவரின் உடல்களில் இருந்து ரத்தம், சளி மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியாகி உள்ளது. கொரோனா பீதியில் தம்பதி தங்களது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *