இன்னும் 2 ஆண்டுகள் கொரோனாவுடன்தான் வாழ நேரிடும்!

“ இன்னும் 2 வருடங்களாவது கொரோனாவுடன்தான் வாழ வேண்டிவருமென வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் மக்களை காப்பதற்கு உள்ள ஒரே வழி தடுப்பூசிதான். அதனை வழங்கும் நடவடிக்கையை அரசு துரிதப்படுத்தியுள்ளது. எனினும், சிற்சில தவறுகளை பெரிதுப்படுத்தி மக்களை குழப்புவதற்கு எதிரணி முற்படுகின்றது. இது அரசியல் நடத்துவதற்கான நேரம் அல்லவென்பதை எதிரணி உறுப்பினர்கள் புரிந்துசெயற்பட வேண்டும்.”

இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ கொரோனா நெருக்கடி நிலைமையால் நாடு என்ற வகையில் எமக்கும் பல சவால்களை சந்திக்கவேண்டியேற்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், சீனா உட்பட உலக நாடுகளிலும் இதே நிலைமைதான் காணப்படுகின்றது. பலம் பொருந்திய நாடுகள்கூட பின்னடைவைச் சந்தித்துள்ளன. இவ்வாறான நெருக்கடி நிலைமையிலும் நாட்டு மக்களுக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்களையும், எதிர்கால வேலைத்திட்டங்களையும் செயற்படுத்திவருகின்றோம்.

கடந்த வருடம் மார்ச்சில் நாட்டை முடக்கினோம். அதன்பின்னரும் முடக்கப்பட்டது. ஆனால் அவ்வப்போது வைரஸ் தொற்று தலைதூக்கும் அபாயம் காணப்படுகின்றது. அடுத்துவரும் வாரங்கள் அல்ல அடுத்துவரும் ஒவ்வொரு நாளும் தீர்க்கமானது. வைத்திய நிபுணர்களின் கூற்றின்பிரகாரம், குறைந்தபட்சம் இன்னும் 2 வருடங்களாவது கொரோனாவுடன்தான் வாழப்பழக வேண்டிவரும்.

எதிர்ப்பாரா விதமாகத்தான் தொற்று நிலை உருவானது. ஆனாலும் நாட்டு மக்களுக்காக செய்ய வேண்டியவத்தை நாம் செய்துவருகின்றோம். தற்போதைய சூழ்நிலையில் வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசிதான் ஒரே வழி. அதனை துரிதமாக வழங்கி, மக்களை மீட்க நடவடிக்கை எடுத்துவருகின்றோம்.

கொரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து எமது நாட்டு சுகாதாரத்துறையினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருகின்றனர். பலருக்கு நித்திரைகூட இல்லை. ஆனால் ஒரு சிலரால் இழைக்கப்படும் சிறு தவறைக்கூட பெரிதுப்படுத்தி, நாட்டில் தீ மூட்டி ,மக்களை குழப்புவதற்கு எதிரணி முற்படுகின்றது. இது அரசியல் நடத்துவதற்கான நேரம் அல்ல என்பதை எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எதிரணி அரசியல் பிரமுகர்கள் புரிந்துகொள்ள வேண்டும். பிறகு அரசியல் நடத்தலாம். மக்களை குழப்ப வேண்டாமென கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *