கொரோனாவால் மரணிப்பவர்களுக்கு இலவச சவப்பெட்டிகள்!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உட்பட மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளில் கொரோனாத் தொற்றினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்காகப் பெட்டிகள் மற்றும் பைகள் காத்தான்குடியிலிருந்து இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் கொழும்பு மாவட்ட பள்ளிவாயல்களின் சம்மேளனத்திடம் விடுத்த வேண்டுகோளையடுத்து இப் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. அதே போன்று சடலம் வைக்கப்படும் பைகள் காத்தான்குடியிலுள்ள தனவந்தர்களினால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.

இப் பெட்டிகள் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதுடன் இது வரை 39 சடலங்களுக்கு இவ்வாறு இலவசமாக பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வழங்கலில் இன, மத , பேதமின்றி அனைத்துச் சமூகத்தவர்களும் பயனடைந்து வருகின்றனர்.

மேலும் காத்தான்குடி நகர சபை வாகனத்திலேயே சடலங்கள்; ஏற்றப்பட்டு ஓட்டமாவடி மஜ்மா நகருக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவைகளை ஒழுங்குபடுத்தி செயற்படுத்துவதற்காக காத்தான்குடி நகர தவிசாளர் எஸ்.எச்.அஸ்பரின் தலைமையிலும் மேற்பார்வையிலும் காத்தான்குடி நகர சபை உத்தியோகத்தரும் தவிசாளரின் இணைப்புச் செயலாளருமான சப்ரி பசீர் நியமிக்கப்பட்டு இப் பணியை மிகச் சிறப்பாக செய்து வருகின்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *