ஆப்கானிஸ்தான் அரசு தலிபான்களிடம் வீழ்ந்தது எப்படி?

இந்த உலகின் ஒட்டுமொத்த கவனமும் இப்போது ஆப்கானிஸ்தான் மீதுதான் இருக்கிறது.

ஒரே நாளில் தலைநகர் காபூலைப் பிடித்த தலிபான்கள், அவர்களின் பிடியில் இருந்து தப்பி ஓடுவதற்காக விமானத்தின் இறக்கைகளிலும் சக்கரங்களிலும் ரன்னிங்கில் ஏறிய அப்பாவி மக்கள்,

பெட்டி பெட்டியாக பணத்துடன் தப்பி ஓடியதாக கூறப்படும் ஆப்கானின் அதிபர் அஷ்ரப் கனி,

விட்டால் போதும் என்று ஆப்கானிஸ்தானைக் கைவிட்டுச் சென்ற அமெரிக்கா என்று அந்நாட்டைச் சுற்றி பல்வேறு தலைப்புகளில் உலகெங்கிலும் விவாதங்கள் நடந்து வருகின்றன.

தலிபான்களின் வரலாறு

இந்த விவாதங்களுக்கு எல்லாம் மூல காரணமாக விளங்குபவர்கள் தலிபான்கள். முதலில் யார் இந்த தலிபான்கள் என்பதைத் தெரிந்து கொள்வோம். ஆப்கானிஸ்தானின் மொழியான பாஷ்டோவில் தலிபான் என்றால் மாணவர்கள் என்று அர்த்தம்.

1979-ல் அப்போதைய சோவியத் யூனியன் படைகள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றி தங்களுக்கு சாதகமான அரசை அங்கு நிறுவியது.

இந்நிலையில் அந்த அரசை எதிர்த்து அமெரிக்காவின் ஆதரவுடன் முஜாகிதீன் அமைப்பினர் உள்நாட்டு போரில் ஈடுபட்டனர்.

ஒரு பக்கம் சோவியத் யூனியன் மறுபக்கம் அமெரிக்கா என்று 2 பெரிய வல்லரசுகளின் இடையிலான பனிப்போர் ஆப்கானிஸ்தானில் 1989-ம் ஆண்டுவரை நடைபெற்றது.

1989 முதல் சோவியத் யூனியன் (ரஷ்யா) படைகள் பின்வாங்க, அவர்களின் ஆதரவு பெற்ற ஆப்கான் அரசு தடுமாறத் தொடங்கியது.

1990-களின் தொடக்கத்தில் ஆப்கான் அரசு சரிவைச் சந்திக்க முஜாகிதீன்கள் ஆட்சியைப் பிடித்தனர்.

ஆனால் பல குழுக்களாக இருந்த அவர்களுக்குள் நாட்டுக்கு யார் தலைமை வகிப்பது என்பதில் மோதல் ஏற்பட்டது.

இந்தச் சூழலில்தான் ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதியில் உள்ள காந்தகார் பகுதியில் 1994-ம் ஆண்டு தலிபான் அமைப்பு தோன்றியது.

உண்மையில் அப்போதைய காலகட்டத்தில் அமெரிக்காவின் ஆதரவுடன் செயல்பட்டு வந்த ‘முஜாகிதீன்’ அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் இந்த அமைப்பில் பெருவாரியாகச் சேர்ந்தனர்.

முகமது உமர், அப்துல் கனி பரதார் ஆகியோரால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு மிக வேகமாக ஆப்கானிஸ்தானில் வளர்ந்தது.

கடுமையான தண்டனைகள்

தொடங்கிய இரண்டே ஆண்டுகளில், அதாவது 1996-ம் ஆண்டிலேயே சர்வ வல்லமை பெற்ற அமைப்பாக மாறிய தலிபான், ஆப்கானிஸ்தானின் ஆட்சியைப் பிடித்தது.

மத கோட்பாடுகளை தீவிரமாக கடைபிடிக்கப்போவதாக அறிவித்த தலிபான் அரசு, பெண்கள் படிப்பதற்கும், ஆண் துணை இல்லாமல் வெளியே செல்வதற்கும் தடை விதித்தது.

அத்துடன் பெண்கள் தங்கள் உடலை முழுமையாக மறைக்கும் வகையில் உடை அணிய வேண்டும், ஆண்கள் கட்டாயமாக தாடி வளர்க்க வேண்டும் என்பதுபோன்ற சட்டங்களை அமல்படுத்தியது. திருட்டு போன்ற சிறிய குற்றங்களைச் செய்தவர்களின் கைகால்கள் வெட்டப்பட்டன.

ஒசாமா பின்லேடன்

இப்படி பல அதிரடி சட்டங்களைக் கொண்ட தலிபான் அரசுக்கு அல் கொய்தாவின் அப்போதைய தலைவரான ஒசாமா பின்லேடன் அதிக அளவில் நிதி உதவிகளைச் செய்துள்ளார். தனது வீட்டையும் அவர் ஆப்கானிஸ்தானுக்கு மாற்றிக்கொண்டார்.

ஆனால் அவருடன் ஏற்பட்ட நெருக்கமே, தலிபான்களின் வீழ்ச்சிக்கும் காரணமானது.

அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது அல் கொய்தா கடும் தாக்குதலை நடத்த, அதற்கு பதிலடியாக பின் லேடனை பிடிக்க ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்தது அமெரிக்கா. நவீன ஆயுதங்களைக் கொண்ட அமெரிக்காவின் முன்னால், தலிபான்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

அவர்களிடம் தோல்வியைத் தழுவிய தலிபான்கள், பழங்கால ராஜாக்களைப் போல் காடுகளுக்கு சென்று தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தனர்.

சோர்ந்துபோன அமெரிக்கா

காடுகளுக்கு தப்பிச் சென்றாலும், ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க வீரர்களுக்கு அடிக்கடி தொந்தரவு கொடுத்து வந்தனர் தலிபான்கள். அதனால் நாட்டில் அடிக்கடி குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன.

தலிபான்களிடம் இருந்து ஆப்கானை காப்பாற்ற, அமெரிக்க அரசு கோடிக்கணக்கில் டாலர்களை செலவழிக்க வேண்டிவந்தது. இருப்பினும் தலிபான்களை வேரோடு அழிக்க முடியாததால் அமெரிக்காவுக்கு சோர்வு ஏற்பட்டது.

ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுக்க முக்கிய காரணமே பின் லேடனும், அப்போதைய தலிபான் தலைவர் முகமது உமரும்தான். அவர்கள் இருவரையும் கொன்றுவிட்ட நிலையில், இன்னும் எதற்காக ஆப்கானிஸ்தான் மண்ணில் பணத்தைக் கொட்ட வேண்டும் என்ற மனநிலை அமெரிக்க மக்களுக்கு ஏற்பட்டது.

இப்போரில் ஏராளமான அமெரிக்க வீரர்களும் கொல்லப்பட, ‘சீ.. சீ.. இந்தப் பழம் புளிக்கும்’ என்ற மனநிலைக்கு வந்தது அமெரிக்கா. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ஜோ பிடன், வரும் செப்டம்பர் மாதத்துடன் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் முழுவதுமாக வாபஸ் வாங்கும் என்று அறிவித்து, அதற்கான நடவடிக்கைகளையும் எடுக்கத் தொடங்கினார்.

பல ஆண்டுகள் நடத்திய போரால் ஏற்கெனவே துவண்டு போயிருந்த ஆப்கான் படைகளை பிடனின் அறிவிப்பு மேலும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த கட்டத்தில் புத்துணர்ச்சியுடன் போரிட்ட தலிபான்கள், கடந்த 10 நாட்கள் நடந்த உக்கிரமான போரில் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளனர்.

புதிய ஆட்சியாளர் யார்?

தலிபான்கள் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில் தலிபான் அமைப்பின் தலைமை தளபதியான முல்லா அப்துல் கனி பர்தார், அந்நாட்டின் புதிய தலைவராக பொறுப்பேற்பார் என்று கூறப்படுகிறது.

தலிபான்கள் தோன்றிய காந்தகார் நகரில் பிறந்தவரான அப்துல் கனி பர்தார், சோவியத் யூனியனுக்கு எதிராக போர் புரிந்தவர்.

கடந்த 2010-ம் ஆண்டில் பாகிஸ்தானின் கராச்சி நகரில் கைது செய்யப்பட்ட பர்தார், 2018-ம் ஆண்டுவரை அங்கு சிறை வைக்கப்பட்டார்.

பின்னர் கத்தார் நாட்டுக்கு நாடுகடத்தப்பட்டார். இப்போது ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்த நிலையில் அவர் அதிபர் ஆவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன.

அவர் அதிபர் ஆகாத பட்சத்தில் தலிபான் அமைப்பின் முக்கிய தலைவர்களான ஹைபத்துல்லா அகுன்சாதா, சிராஜுதீன் ஹைக்கைனி, முல்லா யாகூப் ஆகியோரில் யாராவது ஒருவர் அதிபராவார் என்று கருதப்படுகிறது.

நிலைமை மாறுமா

ஆப்கானிஸ்தானில் ஆட்சியை அமைத்துள்ள தலிபான்கள், முதல் கட்டமாக அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படும், மக்கள் அமைதியாக வாழ தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் என்று அறிவித்துள்ளனர்.

கடந்த முறை நடந்ததைப் போல் உலகின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் பெறாமல் நல்ல பிள்ளைத்தனமாய் ஆட்சி நடத்த விரும்புவதாக அவர்களின் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதெல்லாம் நடந்து ஆப்கான் மக்களுக்கு அமைதியான வாழ்க்கை கிடைக்குமா அல்லது மீண்டும் ஆப்கானில் நிம்மதியற்ற நிலை தொடருமா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *