குத்துச் சண்டையில் முகமது அலி பரம்பரை!

இருபதாம் நூற்றாண்டில் உலகையே கிடுகிடுக்க வைத்த குத்துச் சண்டை வீரர் முகமது அலி.

தான் பங்கேற்ற 61 குத்துச்சண்டை போட்டிகளில் 56 போட்டிகளில் வெற்றிகளைக் குவித்தவர். இதில் 37 போட்டிகளில் எதிராளிகளை நாக் அவுட் செய்து வாகை சூடினார்.

குத்துச்சண்டை களத்தில் வெல்ல முடியாத மாவீரனாகத் திகழ்ந்த இவர், ஒலிம்பிக்கிலும் அமெரிக்காவுக்கு தங்கப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்தார்.

ஆனால் பதக்கம் வென்ற பிறகும் நிற வேற்றுமையால், ஓட்டலில் தனக்கு வெள்ளைக்கார சர்வர் உணவை சப்ளை செய்ய மறுத்ததால், கோபத்தில் ஒலிம்பிக் பதக்கத்தை ஓஹியோ ஆற்றில் வீசினார்.

இதைத்தொடர்ந்து இஸ்லாமியராக மதம் மாறி தனது பழைய பெயரான ‘காஸியஸ் க்ளே’வையும் முகமது அலி என மாற்றிக் கொண்டார்.

இனவெறிக்கு எதிராக போராட்டக் களத்தில் குதித்தார்.

அதெல்லாம் சரி… இப்போது எதற்கு முகமது அலி புராணம் என்கிறீர்களா?… அதற்கும் காரணம் இருக்கிறது.

குத்துச்சண்டை களத்தில் முகமது அலி விட்டுச் சென்ற பாதையில் இருந்து பயணத்தைத் தொடர, இப்போது அவர் பேரன் களத்தில் குதித்திருக்கிறார்.

அமெரிக்காவின் ஒகலஹாமா நகரில் சனிக்கிழமை நடந்த தொழில்முறை குத்துச் சண்டை போட்டியில் முகமது அலியின் பேரனான நிகோ அலி வால்ஷ், தனக்கு எதிராக போட்டியிட்ட ஜார்டன் வீக்ஸை 4 சுற்றுகளில் வென்று வாகை சூடியுள்ளார்.

இப்போட்டியின்போது, முகமது அலி 1960-களில் குத்துச்சண்டை போட்டிகளில் ஆடும்போது அணிந்த அவரது பழைய கால்சட்டையையே நிகோ அலி வால்ஷ் அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முகமது அலியின் மகள் ரசீதா அலியின் மகனான நிகோ அலி, லாஸ் வேகாஸ் நகரில் வளர்ந்து வருகிறார்.

தாத்தாவால் ஈர்க்கப்பட்ட அவர், தனது 4 வயது முதல் குத்துச்சண்டை போட்டிகளில் பயிற்சி பெற்று வந்துள்ளார்.

இந்த வெற்றியைப் பற்றி கருத்து தெரிவித்துள்ள நிகோ அலி, “சிறு வயதில் இருந்து குத்துச்சண்டைப் போட்டியின் நுணுக்கங்கள் பலவற்றை எனது தாத்தா முகமது அலி எனக்கு கற்றுத் தந்திருக்கிறார்.

தொழில் முறை குத்துச் சண்டை போட்டியில், எனது முதல் வெற்றியைக் காண அவர் இல்லை என்பது கொஞ்சம் வருத்தமாக உள்ளது.

அவரது பெருமைகளுக்கு பங்கம் வராமல் நான் பார்த்துக் கொள்வேன்.

அதே நேரத்தில் அவருடன் என்னை யாரும் ஒப்பிட வேண்டாம். அவரது சாதனைகளுக்கு முன்னால் நான் ஒன்றுமே இல்லை” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *