இந்தியாவை விட இலங்கையின் மரண வீதம் 15 மடங்கு அதிகம்!

இந்தியாவை விட இலங்கையில் கோவிட் மரணங்கள் பதிவாகும் வீதம் 15 மடங்கு அதிகமாகும் என ஜோன் ஹெப்கின் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இவ்வாறான அபாயமான நிலையில் இரவில் மாத்திரம் ஊரடங்கினை நடைமுறைப்படுத்தியிருப்பது பிரயோசனமற்ற தீர்மானமாகும் என கூறியுள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு மில்லியன் சனத்தொகையில் ஒரு வாரத்திற்கு அதிகளவானோர் கோவிட் தொற்றால் உயிரிழக்கும் பட்டியலில் உலகளாவிய ரீதியில் இலங்கை நான்காவது இடத்திலுள்ளது.

தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் வேகம் அதிகரிக்கும் நாடுகள் பட்டியலில் இலங்கை முதலிடத்திலுள்ளது. இலங்கையில் நாளாந்தம் ஒரு மில்லியன் பேரில் 5.72 சதவீதமானோர் கோவிட் தொற்றால் உயிரிழப்பதாக ஜோன் ஹெப்கின் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கை அமெரிக்காவில் 1.95 வீதமாகவும், இங்கிலாந்தில் 1.33 வீதமாகவும், பிரான்ஸில் 0.76 வீதமாகவும், இந்தியாவில் 0.3 வீதமாகவும் காணப்படுகிறது. அதற்கமைய இந்தியாவை விட இலங்கையின் மரண வீதம் 15 மடங்கு அதிகமாகும்.

இவ்வாறான நிலையில் உடனடியாக ஊரடங்கினை நடைமுறைப்படுத்தினால் எதிர்வரும் 20 நாட்களில் பதிவாகக் கூடிய 1,200 மரணங்களை தவிர்க்க முடியும் என்று சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு என்பது உலக நாடுகளில் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை அரசாங்கம் கவனிக்க வேண்டும்.

இந்தியாவை விட இலங்கையில் கோவிட் மரணங்கள் பதிவாகும் வீதம் 15 மடங்கு அதிகமாகும் என்று ஜோன் ஹெப்கின் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான அபாயமான நிலையில் இரவில் மாத்திரம் ஊரடங்கினை நடைமுறைப்படுத்தியிருப்பது பிரயோசனமற்ற தீர்மானமாகும். எனவே மருத்துத்துறையினரின் ஆலோசனைக்கு ஏற்ப தீர்மானங்களை எடுக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *