கொரோனா உயிரிழப்பில் இலங்கைக்கு 15 ஆவது இடம் அரசு கண்டுகொள்ளாதது கவலை தருகிறது!

கொரோனா உயிரிழப்பில் உலக அளவில் இலங்கை 15வது இடத்தில் உள்ள நிலையில் இதயம் இல்லாத ஆட்சியாளர்கள் அதனை கண்டுகொள்ளாது இருப்பதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

சுகாதார நிபுணர்கள் பலரும் எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில் அரசாங்கம் தமது தான்தோன்றித்ன அரசியல் நியாயப்பத்திரத்தை செயற்படுத்திக் கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடு முழுவதும் அல்லது குறுகிய பிரதேசத்தை மையப்படுத்தி ஊரடங்கு பிறப்பிக்கப்பட வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் யோசனை முன்வைத்துள்ள நிலையில் அதனை மீறினால் ஜனவரி மாதத்தில் கொரோனா மரணங்கள் 30,000 தாண்டக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளதை சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டு மக்களின் உயிர்கள் எமக்கு முக்கியம் என்பதால் நாட்டை முடக்குமாறு கோரிக்கை விடுத்து வந்ததாக சஜித் கூறினார்.

நாள் ஒன்றுக்கு 5000ற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்களும் 250ற்கும் அதிகமான மரணங்களும் பதிவாகுவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்ற போதும் அரசாங்கம் வழங்கும் உத்தியோகபூர்வ தகவலில் அது குறைத்து அறிவிக்கப்படுவதாக சுகாதார துறையினரே கூறுவதாக சஜித் குறிப்பிட்டுள்ளார்.

மரணங்கள் ஊடாக அரசியல் செய்ய முயற்சிக்கும் நபரை தவிர வேறு எவருக்கும் இந்த இக்கட்டான நிலையில் நாட்டை திறந்து வைத்திருக்க முடியாது என சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

கோழி இறைச்சிக்கு விலை நிர்ணயிப்பது போல நாட்டு மக்களின் உயிர்களுக்கு விலை நிர்ணயிக்க முடியாது என கூறியுள்ள சஜித் பிரேமதாஸ, அரசாங்கம் மக்களின் உயிருடன் விளையாடுவதாகவும் கொரோனாவை விட அரசாங்கத்திடம் இருந்து மக்கள் தங்களது உயிரை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும் இன்று (14) வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *