இருத்தலுக்கான போட்டிகளுக்குள் மருத்துவத்துறையும் மாட்டிக்கொள்ளுமா?

மருத்துவ உலகம் மதங்களின் மடியில் விழுந்து மன்றாடுமளவுக்கு கொரோனாவின் கொடூரம் தலைவிரித்தாடும் சூழலிது. அதற்காக மதங்களால் இந்தக் கொரோனாவை முடிக்க முடியும் என்ற முடிவுக்கு் வர முடியாதுதான். முயன்று முடியாமல் போனால், ஆண்டவனின் தலையில் கட்டிவிட்டு நாம் ஆறுதலாக இருப்பதில்லையா? அப்படித்தானிது.எப்படியும் ஒழித்து விடுவோம் என்று வரிந்துகட்டி நின்ற விஞ்ஞானம், ஏற்கனவே அது வழங்கியிருந்த கால எல்லையையும் விஞ்சி நிற்கிறது இந்தக் கொரோனா.

இனி எஞ்சப்போவது எதுவென்ற அச்சத்துடன் அஞ்சும் நிலைக்கு இதன் அழிவுகள் எல்லை தாண்டியும் வருகின்றன. அதனால்தான் ஆறுதலுக்கு ஒரு வழி தேடுகிறான் இந்த மானிடன். ஆரம்பத்தில், கொரோனா என்று அறிமுகமான இது, இப்போது டெல்ற்றா மற்றும் டெல்ற்றா பீ இன்னும் அல்பா என வீரியமடைந்து, ‘இயலுமென்றால் நெருங்கி வா’ என்று விஞ்ஞானத்தை வம்புக்கிழுக்கிறதோ தெரியாது.

இத்தனைக்கும், எத்தனையோ மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டாலும் அடங்குவதாகவோ அல்லது அழிவதாகவோ இல்லை இந்தக் கொரோனா. சீனாவின் சினோபார்ம், சினோவெக்ஸ், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி, அமெரிக்காவின் பைசர், மொடோனா, பிரித்தானியாவின் அஸ்ட்ராசெனிகா, இந்தியாவின் கொவிக்ஸ், கொவிஷீல்ட் இவைகளால், எதிர்பார்த்த வெற்றி இந்த உலகுக்கு கிடைக்காதிருக்கிறது. இந்தத் தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்ட எத்தனை உறவுகளின் உயிர்கள் இன்று எம்மைப்பிரிந்து சென்றுவிட்டன. லண்டன் மருத்துவமனையில் ஒரேநாளில் இருநூறு பேர், இத்தனைக்கும் இவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றியவர்கள்தான், இவர்களையும் மறு உலகுக்கு அனுப்பிவிட்டது இந்தக் கொரோனா.

எந்தத் தடுப்பூசியை இவர்கள் ஏற்றினர் என்பதை மாத்திரம் கேட்டுவிடாதீர்கள். ஏனென்றால், இதுதான் இன்று பிரச்சினைக்குள்ளாகி வருகிறது. ஐரோப்பாவின் செல்வாக்கிற்குள் உலக சுகாதார ஸ்தாபனம் இருக்கும் வரைக்கும் சினோபார்ம், சினோவெக்ஸ், ஸ்புட்னிக் வி என்பவற்றின் பெறுமானங்கள் வெளியில் வரப்போவதில்லை என்பதுதான், இதன் கண்டுபிடிப்பாளர்களின் ஆதங்கம். இதனால்தான், இந்த நாடுகள் முந்திக்கொண்டு அள்ளி வழங்கி அணிகளைப் பலப்படுத்துகின்றன. வாழ்க்கைக்கு விலங்கிட்டு, கமியுனிசத்தின் மடியில் முதலாளித்துவத்தை வீழ்த்த புறப்பட்ட சக்திகளுக்கு, ஐரோப்பா அடிபணிந்ததில்லையே. இந்த உலகிடம் இயற்கையாகவே இருக்கின்ற அரசியல், இராணுவ, பொருளாதாரப் போட்டிகள் மருத்துவத்திலும் இல்லாமலா விடும்? இருப்பதால்தான், தடுப்பூசிகளிலும் பாகுபாடுகள். மருந்துகள் இலவசமாகத்தானே வழங்கப்படுகின்றன. இதற்குள் என்ன போட்டி, பொறாமை என்றும் சிலர் சிந்திக்கலாம். இதில், ஆதாயங்களை விடவும் பிரபல்யங்கள்தான் இந்த நாடுகளுக்கு அவசியம்.

ஒருவேளை நமது பிரார்த்தனைகள் அங்கீகாரமாகி கொரோனா ஒழிந்துவிட்டால், மருந்துகளை விநியோகித்த நாடுகளுக்குத்தானே நல்ல பெயர். பிறகென்ன, இந்தப் பெயர் மட்டும் போதுமே, எல்லாவற்றையும் அள்ளிக்கொள்ள அல்லது அள்ளிச்செல்ல.

ஆனாலும், சில நாடுகளின் நிலைமைகள்,அணிகளையோ அல்லது அரசியலையோ சிந்திக்காமல், வருவதையெல்லாம் வாங்கிக்கொண்டு மக்களை வாழ வைக்கப்பார்க்கின்றன. எமது இலங்கை போன்ற நாடுகள்தான் இதற்கு நல்ல உதாரணம். இந்த விடயத்தில் அரசாங்கம் எடுக்கும் அத்தனை நகர்வுகளும் நமது நலன் சார்ந்தவைதான். இதற்காகத்தான் உலகளவில் இதுவரை வழங்கப்பட்டுள்ள 4.5 பில்லியன் தடுப்பூசிகளில் எமது அரசாங்கம் 19மில்லியன் தடுப்பூசிகளை தருவித்திருக்கின்றது. இதனால், இதற்கு ஒத்துழைப்பதைத் தவிர எமக்கு வேறு தர்மம் இருக்க இயலாது.

சீனா சார்பில் மட்டும் சிந்திப்பதாக இருந்தால் பைஸர், மொடோனா தடுப்பூசிகளை அரசாங்கம் நாட்டுக்குள் அனுமதித்திருக்காதே. மருத்துவத்தின் சகல வழிகளுக்கும் வாசலைத் திறந்துள்ள இந்த அரசாங்கம், மக்களை வாழ வைக்கத்தான் புறப்பட்டிருக்கிறது. இதில், அரசியல் சாயங்களைப் பூசி அல்லது ஆதிக்க சக்திகளைத் தூக்கிப்பிடித்து ஆதாயம் காண்பதற்கு எவரும் முயற்சிக்கவும் கூடாது. அரசியலுக்கு நல்லதாகத் தென்படும் இந்த முயற்சிகள், மக்களின் உயிரோடு விளையாடும் அபாண்டச் செயலாகவே கருதப்படும். எதுவும் அறியாத எமது அப்பாவிகள் எந்த ஊசிகளையும் ஏற்றிகொள்ள, ஏற்றுக் கொள்ளாவிட்டால், நிலைமைகளின் விபரீதங்களையும் இந்த ஆதாயம் தேடிகள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

எனவே, நாட்டை முடக்கி மக்களைக் கட்டுப்படுத்தும் நிலைமை ஏற்படாதிருக்க மக்களாகிய நாம்தான் ஒத்துழைக்க வேண்டுமே தவிர, அரசின் பொறுப்புள்ள தீர்மானங்களை ஒற்றைக் காரணங்களுக்காக விமர்சிக்கும் மனோபாவங்களிலிருந்து நாம் மாறுபட வேண்டியுள்ளது.

மேலும் எந்த நாடுகளும் முடக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் இவ்வாண்டின் செப்டம்பர் இறுதிக்குள் உலகின் எல்லா நாடுகளும்10 சத வீதமும் 2022 செப்டம்பருக்குள் 70 சத வீதமும் தடுப்பூசிகளை ஏற்ற வேண்டுமென உலக சுகாதார தாபனம் அறிவுறுத்துகிறது. ( சுஐப் எம் காசிம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *