ஒரு வாரத்தில் 94 ஆயிரம் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு!

அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அங்கு கொரோனா நான்காவது அலை ஏற்பட்டு, குழந்தைகள் மத்தியில் பாதிப்பு தீவிரமாக பரவிவருகிறது.

உலக நாடுகளின் பட்டியலில், அதிகப்படியான கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நாடாக அமெரிக்கா இருக்கிறது. அமெரிக்காவில், 12 – 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஏறத்தாழ 60% 12 – 18 வயது குழந்தைகள் இரு டோஸை பெற்றிருக்கிறார்கள். 70% பேர், முதல் டோஸை பெற்றிருக்கிறார்கள். இருப்பினும் அங்கு குழந்தைகள் மத்தியில் பாதிப்பு அதிகரிப்பது, பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில்மட்டும், அமெரிக்காவில் ஏறத்தாழ 94,000 குழந்தைகளுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டிருப்பதாக நேற்றைய தரவொன்று சொல்கிறது. தினந்தோறும் லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதிசெய்யப்படும் அமெரிக்காவின் மொத்த கொரோனா பாதிப்பில், 15% குழந்தைகளே இருப்பதாக, அமெரிக்க குழந்தைகள் நல கழகம் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது. அதேபோல பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு தீவிர பாதிப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்படும் நிலை ஏற்படுவதாகவும், இறப்பு மட்டுமே ஓரளவு தடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. குழந்தைகள் மத்தியிலான இந்த கொரோனா அதிகரிப்பு, ஜூலையில்தான் நிகழ்ந்துள்ளதாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இன்றைய தினம் குழந்தைகள் மத்தியிலான கொரோனா தொடர்பாக மற்றுமொரு ஆய்வும் வெளிவந்து கூடுதல் அச்சத்தை கொடுத்துள்ளது. அமெரிக்கா வாஷிங்டனை சேர்ந்த ‘ஸைன்ஸ் அட்வான்ஸ்’ என்ற மருத்துவ இதழின் விஞ்ஞானிகள் செய்த ஆய்வின்படி, கொரோனா எதிர்காலத்தில் பருவகால நோய்போல மாறி, குழந்தைகள் மத்தியில் அவ்வபோது ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தடுப்பூசி செலுத்தாத குழந்தைகளுக்கு, அடிக்கடி கொரோனா ஏற்படலாம் என சொல்லப்பட்டுள்ளது. முடிந்தவரை எவ்வளவு சீக்கிரம் அனைவருக்கும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை பெறுகின்றனரோ, அந்தளவுக்கு நல்லது என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குழந்தைகளுக்கான பருவகால நோயாகவே இது மாறும் என ஆய்வாளர்கள் கூற காரணம், தற்போதைய நிலவரப்படி பெரியவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி கண்டறியப்பட்டுள்ளது என்பதுதான். ‘தடுப்பூசியினால், பெரியவர்கள் ஓரளவு நோய்க்கு எதிராகிவிடுவர், ஆனால் குழந்தைகளுக்கு அந்த எதிர்ப்பு திறன் இருக்காது’ எனக்கூறியுள்ளனர் ஆய்வாளர்கள். இதை முன்னிறுத்தி, குழந்தைகளுக்கும் விரைந்து தடுப்பூசி செலுத்த வேண்டுமென நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஆனால் இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயமும் உள்ளது. அது, 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி விநியோகமே உலகளவில் இன்னமும் முழுமையாக நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. அப்படியிருக்கும் நிலையில், குழந்தைகள் மத்தியில் இதை எப்படி விரைந்து சாத்தியப்படுத்துவது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகியுள்ளது. ஆனால் தடுப்பூசி மட்டுமே தீர்வென்பதால், அதை நோக்கி அரசுகள் விரைந்து செல்லவேண்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *