ரிஷாதின் மனைவி உட்பட நால்வர் இன்று நீதிமன்றத்தில்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் வீட்டில் தீக்காயங்களுடன் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினி தொடர்பில் கைது  செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் மனைவி  உள்ளிட்ட  நால்வரும் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்

அத்துடன், சிறுமியின் மரணம் தொடர்பில் இதுவரை 50 க்கும் அதிகமான பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்டுகிறது.

இந்த நிலையில்,  குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் பொரளை பொலிஸார், கொழும்பு தெற்கு  சிறுவர் மற்றும் மகளிர் விவகார பணியகம் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு என்பன விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் வீட்டில் தீக்காயங்களுடன் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு ரிசாட் பதியுதீனின் மனைவி மற்றும் அவரது மாமனார் ஆகியோர் பொறுப்புக்கூற வேண்டும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர்சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோகண தெரிவித்தார்.

அத்துடன் சிறுமியின் மரணம் தொடர்பில் மூன்று கட்டத்தின்  அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்படி முதலாவது கட்டத்தின் அடிப்படையில், சிறுமி எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் நீதிமன்றம் இதுவரை அறிவிக்கவில்லை எனவும் நீதிமன்றத்தின் ஊடாகவே அந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

அத்துடன் இரண்டாவது கட்டத்தின் அடிப்படையில், சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளானதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற் கொள்ளப்படுவதாக பொலிஸ்ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

மூன்றாவது கட்டத்தின் அடிப்படையில் குறித்த சிறுமி துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரோஹனமேலும் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *