இஷாலினி விவகாரத்தில் உண்மை கண்டறியப்பட வேண்டும்!

இஷாலினி மரணம் குறித்த விவகாரத்தில் உண்மைத் தன்மை கண்டறியப்பட வேண்டும் என்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் உண்மைத் தன்மை கண்டறியப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது என்பதுடன், நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய நாளிதழ் ஒன்றின் டிஜிட்டல் பிரிவிற்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் வீட்டில் 16 வயது சிறுமி உயிரிழந்த விவாகரம் குறித்து கேட்டபோது ரவூப் ஹக்கீம் கூறியதாவது,

இந்த விவகாரத்தில் உண்மைத் தன்மை கண்டறியப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து கிடையாது. ஏதாவது தவறு நடந்திருந்தால் அது சரிவர, தீர விசாரிக்கப்பட வேண்டும். அதேநேரம், மரத்தால் விழுந்தவனை மாடு ஏறி மிதிக்கின்ற நிலையிலும் யாரும் அவர்களுக்காக பட்சாதாபம் கூட படமுடியாது என்ற ஒரு நிலைமையும் கவலைக்குரியது. இதுதான் இங்குள்ள பிரச்சினை. நீதி நிலைநாட்டப்பட வேண்டும். நியாயம் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும்.

அதேநேரம், நீண்டகாலமாக தடுப்புக் காவலில் இருக்கின்ற ரிஷாட் பதியூதீனுக்கு இப்படியொரு கதி நேர்ந்துவிட்டது என்பதும் உண்மையில் வேதனையாகத் தான் இருக்கிறது. சக நாடாளுமன்ற உறுப்பினர், ஒரு கட்சியின் தலைவர், அவருக்கு மீது வருகின்ற விமர்சனங்கள், அறிந்தோ அறியாமலோ சமூகத்தின் மீதும் வரும் விமர்சனங்களாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இந்த நிலையில், நான் யாரையும் குறைகூற வரவில்லை. யாருக்கும் இங்கு விழுந்தடித்து கருத்துச் சொல்லப் போனால், யாரும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. சட்டத்தின் ஆட்சி நடக்கும் நாட்டில் நிறுவன ரீதியான சுயாதீனம் தேவை. அதில் தலையீடுகள் இருக்கக் கூடாது. இதைத் தான் ஒவ்வொரு அரசியலமைப்புத் திருத்தத்தின் போதும் நாங்கள் தாராளமாக கேட்டு வருகிறோம். இவற்றை எல்லாம் பலவீனப்படுத்திவிட்டு, அரசியல் காரங்களுக்காக இப்படியாக நடக்கும்போது, இதில் யாரும் குளிர்காய முயற்சிக்கக் கூடாது. என்பதுதான் என்னுடைய அபிப்பிராயம்.

இந்த தீக்காயங்களுக்கு உள்ளாகி மரணித்த சிறுமி இஷாலினியின் குடும்பத்தாரின் வேதனையில் நாங்கள் பங்குகொள்கிறோம். மலையக மக்களின் வேதனைகளிலும் நாங்கள் பங்கு கொள்கிறோம். அதேநேரம், நீண்டகாலமாக தடுப்புக் காவலில் இருக்கின்ற ரிஷாட் பதியூதீனுக்கு இப்படியொரு கதி நேர்ந்துவிட்டது என்பதும் உண்மையில் வேதனையாகத் தான் இருக்கிறது. சக நாடாளுமன்ற உறுப்பினர், ஒரு கட்சியின் தலைவர், அவருக்கு மீது வருகின்ற விமர்சனங்கள், அறிந்தோ அறியாமலோ சமூகத்தின் மீதும் வரும் விமர்சனங்களாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. போதாகுறைக்கு மனைவி, பிள்ளைகள் படுகின்ற அவஸ்தைகள் பற்றியும், ஒரு கவலை ஏற்படாமல் இல்லை. எனவே, இந்த வேதனை ஏதே ஒரு வகையில் ஒரு முடிவுக்கு வர வேண்டும். எல்லாத் தரப்புக்களும் சாந்தமடைய வேண்டும். மரணித்த உயிர்கள் மீண்டு வரப் போவதில்லை. ஆனால் அதேநேரம், துன்புறுத்தல் அல்லது பெண்களுக்கு எதிரான வன்முறைகள் சம்பந்தமான விவகாரங்களில், அது வெறும் என்.ஜி.ஓ கலாசாரமாக மாத்திரம் இருந்துவிட்டுப் போக வேண்டும். இறுக்கமான சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும். அந்த சட்டங்கள் நடைமுறைப்படுத்துவது அதில் தலையீடுகள் இல்லாத நிர்வாக நடைமுறைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இவை தான் முக்கியமானவை.” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *