அமெரிக்காவில் உள்ள இராணுவ ஆய்வகத்தை சோதனை செய்ய சீனா வலியுறுத்தல்!

கோவிட் தோற்றம் குறித்து வூஹான் ஆய்வகத்தில் சோதனை நடத்துவதற்கு முன்னர் அமெரிக்காவிலுள்ள ஃபோர்ட் டெட்ரிக் இராணுவ ஆய்வகத்தை முதலில் சோதனை செய்ய வேண்டும் என்றும், அதில் பல உண்மைகள் வெளிவரும் என்றும் சீனா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

வூஹான் ஆய்வகத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் உலக சுகாதார அமைப்பின் ஆய்வாளர்கள் முதற்கட்ட ஆய்வுகளை மேற்கொண்ட நிலையில், 2 ஆம் கட்ட ஆய்வுகளை மேற்கொள்ள வூஹான் நகருக்கு ஆராய்ச்சியாளர்களை அனுப்பத்திட்டமிட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் அறிவித்திருந்தது.

இதற்கு பதிலளித்த சீனா உலக சுகாதார அமைப்பின் ஆய்வாளர்களை வூஹான் ஆய்வகத்திற்குள் அனுமதிக்க மாட்டோம் என்றும் அறிவித்திருந்தது.

இந்நிலையில், இது குறித்து சீனா வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியாங் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில்,

கோவிட் தோற்றம் குறித்து ஆய்வகங்களில் விசாரணை செய்ய வேண்டும் என்றால், உலக சுகாதார அமைப்பின் வல்லுநர்கள் முதலில் அமெரிக்காவிலுள்ள ஃபோர்ட் டெட்ரிக் ஆய்வகத்தில் ஆய்வு நடத்த வேண்டும்.

ஃபோர்ட் டெட்ரிக் ஆய்வகத்தில் உயிரியல் ஆயுதங்கள் உள்ளதாக எழுந்துள்ள சந்தேகங்களுக்கு அமெரிக்கா உரிய விளக்கத்தைத் தர வேண்டும். இதற்காக 1.3 கோடி சீனர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இன்னும் கூட அமெரிக்க மவுனம் சாதிப்பது ஏன்?

இந்த பிரச்சினையில் தெளிவற்ற தன்மை நிலவுவது ஏன்? இப்போது வெளிப்படைத்தன்மை என்ன ஆயிற்று?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியிருந்தார்.

அமெரிக்கா பொறுப்பான முறையில் உலக சுகாதார அமைப்பின் ஆய்வாளர்களை அழைத்து ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும். அப்போது தான் உண்மைகள் உலகிற்குத் தெரிய வரும்” என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

வூஹான் ஆய்வகத்திலிருந்து கோவிட் பரவியிருக்கலாம் என்பதால் அதனை ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று உலக நாடுகள் கோரி வரும் நிலையில், சீனா அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஃபோர்ட் டெட்ரிக் ராணுவ ஆய்வகத்தை காரணம் காட்டியுள்ளது.

அமெரிக்காவின் ஃபோர்ட் டெட்ரிக் ஆய்வகத்தில் சோதனை செய்ய வேண்டும் என்று சுமார் 1.3 கோடி சீன மக்கள் கையெழுத்திட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *