வைரஸ் அதிகமாக பரவலடையும் போது அது டெல்டாவாக மாறலாம்!

திரிபடைந்த கோவிட் டெல்டா, அல்பா, பீற்றா வைரஸ்சுக்கள் இன்னொரு நாட்டிலிருந்துதான் நாட்டிற்கு வரவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எங்களுக்குள் இருக்கின்ற வைரஸ் அதிகமாக பரவலடையும் போது அது திரிபடைந்து டெல்டா, அல்பா, பீற்றா போன்ற வைரஸ்சுக்களாக மாறலாம்.

எனவே இதனைக் கட்டுப்படுத்த ஒவ்வொருவரும் பொறுப்புணர்ச்சியுடன் செயற்படவேண்டும் என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நுண்ணுயிர் நிபுணரும், கிழக்கு பல்கலைக்கழக சவுக்கிய விஞ்ஞான பராமரிப்பு பீட சிரேஷ்ட விரிவுரையாளருமான வைத்தியர் வைதேகி ரதீபன் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

திரிவடைந்து வரும் கோவிட் தொடர்பாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நுண்ணுயிர் நிபுணர் வைத்தியர் லைதேகி ரதீபன் பிரான்சிஸ் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கோவிட் வைரஸ் தாக்கம் நாட்டில் எல்லா பகுதிகளிலும் இருக்கின்றது. அது அதிகரிக்கின்றதா குறைகின்றதாக என்பதைவிட அது இருக்கின்றது என்பது உண்மை. அதன் தாக்கம் மட்டக்களப்பிலும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

திரிபடைந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த எங்களால் செய்ய வேண்டியது பரவலை எவ்வளவுக்குத் தடுத்துக் கொள்ள வேண்டுமோ அவ்வளவு தவிர்த்துக் கொள்ளவேண்டும்.

இந்த பரவலைத் தடுப்பதற்கு நாட்டை பூட்டிவைக்க வேண்டும். ஆனால் நாட்டை பூட்டிவைப்பது எவ்வளவு காலத்துக்கு என்பது நடைமுறைச்சாத்தியம் இல்லாத ஒரு விடயம்.

ஆகவே நாட்டை திறக்கத்தான் வேண்டும். அப்படித் திறக்கும் போது இன்னும் கவனமாக இந்த பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு எங்களை நாங்களே பாதுகாத்துக் கொண்டு பரவலைக் கட்டுப்படுத்துவதில் ஒரு பொறுப்புணர்ச்சியுடன் செயல்படவேண்டும்.

   இதற்கு நாங்கள் ஒவ்வொருவரும் செய்ய வேண்டியது அதிகமாகக் கூட்டங்கள் கூடும் இடங்களைத் தவிர்த்துக் கொள்வதுடன், கூட்டம் கூடுவதற்கான சந்தர்ப்பத்தை எப்போதும் உருவாக்கக் கூடாது. அது திருமண வீடாக இருக்கலாம், மரணவீடாக இருக்கலாம். வேறு தேவையற்ற கொண்டாட்டங்களாக இருக்கலாம். இவைகள் இந்த காலகட்டத்தில் தேவையற்றதாக கருதி அதனைத் தவிர்த்துக் கொள்வது நல்லது.

தொடர்ந்து நோய் அறிகுறிகளுடன் நாளாந்தம் 15 மேற்பட்ட நோயாளிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே எங்களால் முடிந்தளவிற்குப் பொறுப்புணர்ச்சியுடன் இந்த பரவலைக் கட்டுப்படுத்தி எங்களை நாங்களே காப்பாற்றிக் கொள்ளவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *