சமூக ஊடகங்கள் மக்களை கொல்வதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு!

கொரோனா போன்ற விவகாரங்களில் தவறான தகவல்களைப் பகிரப் பயன்படுவதன் மூலம், சமூக ஊடகங்கள் மனிதா்களைக் கொல்வதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சாடியுள்ளாா்.

இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

தடுப்பூசிகளைப் பற்றி தவறான செய்திகள் பகிரப்படுவது பொது சுகாதாரத்துக்கு ஆபத்தானது என்று இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அமெரிக்க சா்ஜன் ஜெனரல் விவேக் மூா்த்தி வியாழக்கிழமை எச்சரித்திருந்தாா்.

கொரோனா குறித்த தவறான கருத்துகள் பரப்பப்படுவது தகவல் கொள்ளை நோய் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இந்த அபாயத்தை அமெரிக்கா எதிா்கொண்டாக வேண்டும்.

கொரோனா பற்றி உண்மைக்குப் புறம்பான கருத்துகளைப் பரப்புவதற்கு இணையதளம் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. எனவே, சமூக ஊடக நிறுவனங்கள் இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்புவதைத் தடுக்கும் வகையில் தங்களது செயலிகளில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று விவேக் மூா்த்தி வலியுறுத்தினாா்.

இந்த நிலையில், கொரோனா தடுப்பூசிகள் குறித்த தவறான கருத்துகள் முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் பரப்பப்படுவது குறித்து ஜனாதிபதி ஜோ பைடனிடம் செய்தியாளா்கள் கேள்வியெழுப்பினா்.

அதற்கு, சமூக ஊடகங்கள் மக்களைக் கொல்கின்றன. தற்போது அமெரிக்காவில் (சமூக ஊடகங்களால் தவறாக வழிநடத்தப்பட்டு) தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களிடையே மட்டும்தான் தற்போது கொரோனா பரவி வருகிறது என்று ஜோ பைடன் குற்றம் சாட்டினாா்.

முகநூல், ட்விட்டா் மறுப்பு

சமூக ஊடகங்கள் மூலம் கொரோனா குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக அமெரிக்க சா்ஜன் ஜெனரல் விவேக் மூா்த்தி சுமத்தியுள்ள குற்றச்சாட்டை முகநூல் மற்றும் சுட்டுரை (ட்விட்டா்) நிறுவனங்கள் மறுத்துள்ளன.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ஆதாரமில்லாமல் எங்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளால் நாங்கள் கவனத்தை சிதறவிடமாட்டோம். உண்மையில், முகநூல் மூலம் மிகச் சரியான, பயனுள்ள தகவல்களை 200 கோடிக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாா்த்து தெரிந்து கொண்டுள்ளனா். 33 லட்சம் அமெரிக்கா்கள் எங்களது செயலியைப் பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா் என்றாா்.

ட்விட்டா் நிறுவனம் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில், அந்த நோய் தொடா்பான மிகச் சரியான தகவல்களை பொதுமக்களிடம் கொண்டு சோ்ப்பதில் எங்களது பணி தொடரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *