குழந்தைக்கு 46 ஆண்டுகளுக்குப் பின்னர் தந்தையை அடையாளம் காட்டிய தாய்!

தான் பெற்ற பெண் குழந்தைக்கு தந்தை இவர்தான் என்று 46 ஆண்டு சட்டப்போராட்டத்துக்கு பிறகு வெளியுலகிற்கு கொண்டு வந்துள்ளார் ஒரு பெண். 1984ம் ஆண்டு வெளியான திரைப்படம் விதி. இதில் பூர்ணிமாவை விரட்டி விரட்டி காதலிக்கும் மோகன், அவரை வெளியில் அழைத்து சென்று, திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசம் அனுபவிப்பார். இதில், பூர்ணிமா கர்ப்பமானதும் அவரை திருமணம் செய்ய மறுப்பார். பூர்ணிமாவுக்கு பிறக்கும் குழந்தைக்கு தான் அப்பா இல்லை என்று தெரிவிப்பார். இதையடுத்து, பெண் வழக்கறிஞர் உதவியுடன் நீதிமன்றத்தை நாடும் பூர்ணிமா, பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு, தனது குழந்தைக்கு அப்பா மோகன் தான் என நிரூபிப்பார். இதேபோன்ற ஒரு சம்பவம் சென்னையில் நடந்து, பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  கொளத்தூர் முருகன் நகரை சேர்ந்தவர் இளவரசி (65). இவருக்கும், சென்னையில் பணிபுரிந்த விஜயகோபாலன் என்பவருக்கும் கடந்த 1975ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது, இளவரசியை விஜயகோபாலன் விரட்டி விரட்டி காதலித்துள்ளார். பின்னர், பெங்களூருவில் இவர்கள் ரகசிய திருமணம் செய்துகொண்டனர். அதன்பிறகு சென்னைக்கு அழைத்து வந்து மயிலாப்பூர், வால்டாக்ஸ் ரோடு, கெல்லீஸ், கீழ்ப்பாக்கம் ஆகிய பகுதிகளில் வாடகைக்கு வீடு எடுத்து 7 மாதம் குடும்பம் நடத்தியுள்ளனர்.  பின்னர், தனக்கு ஐதராபாத்தில் வேலை கிடைத்து இருப்பதாக பொய்யான காரணம் கூறி, விஜயகோபாலன் தலைமறைவாகிவிட்டார். இதற்கிடையில் இருவரின் நெருக்கத்தின் சாட்சியாக, இளவரசிக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தை, மனைவியை பார்க்க விஜயகோபாலன் வரவில்லை.

இந்நிலையில், 1985ம் ஆண்டு விஜயகோபாலனுக்கு சென்னை காவல் துறையில் வேலை கிடைத்ததும், அவர் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டதும் இளவரசிக்கு தெரியவந்தது. இதுகுறித்து அதே ஆண்டு இளவரசி செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுபற்றி விஜயகோபாலனிடம் போலீசார் விசாரித்தபோது, இளவரசியை யார் என்றே தெரியாது. அந்த குழந்தைக்கு எனக்கு பிறக்கவில்லை. குழந்தை என்னுடையது என நிரூபித்தால் இளவரசியை ஏற்றுக்கொள்ளகிறேன் என கூறியுள்ளார். விஜயகோபாலன் காவலராக பணிபுரிவதால் இளவரசியின் புகார் குப்பை தொட்டிக்கு போனது.

 இதையடுத்து, 2010ம் ஆண்டு நீதிமன்றத்தில் இளவரசி வழக்கு தொடர்ந்தார். மேலும் குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்து விஜயகோபாலன்தான் தனது குழந்தையின் தந்தை என நிரூபிக்க சட்டத்தின் துணையை நாடினார். இதனிடையே விஜயகோபாலன் எஸ்ஐயாக பதவி உயர்வு பெற்று, பின்னர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். போலீஸ், கோர்ட் உத்தரவு என்று 10 ஆண்டு கழித்து 2020ம் ஆண்டு தான் டிஎன்ஏ ரிசல்ட் வெளியானது. அதில், இளவரசிக்கு பிறந்த தேவி என்ற பெண் குழந்தைக்கு விஜயகோபாலன் தான் தந்தை என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்பிறகு, கொரோனா தொற்று காரணமாக இளவரசி கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது.

  இதையடுத்து, இளவரசி மீண்டும் காவல்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து முறையிட்டார். பின்னர், என்னையும் எனக்கு பிறந்த குழந்தையின் பிறப்பையும் காவல்நிலையத்தில் வைத்து தவறாக பேசிய விஜயகோபாலன் மீது நடவடிக்கை எடுக்கும்படி தலைமை செயலக அனைத்து மகளிர் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து விஜயகோபாலனை  பிடித்து விாசரித்து வருகின்றனர். விதி திரைப்பட பாணியில் தன்னை ஏமாற்றிவிட்டு தலைமறைவான கணவருக்கு தண்டனை பெற்றுத்தர 46 ஆண்டுகளாக போராடி வரும் மூதாட்டியின் சம்பவம் அயனாவரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி. முதல்வராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் என்.டி.திவாரியும், இதேபோல ஒரு பெண்ணை திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தி குழந்தை பெற்றார் அவரது மகன் வளர்ந்து, பெரியவனான பிறகு வழக்குத் தொடர்ந்தார்.  அவருக்கும் இதேபோல டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர் திவாரியின் மகன்தான் என்பது உறுதியானது. இதேபோல் ஒரு சாதாரண பெண்ணும், 46 ஆண்டுகள் போராடி தனது கணவர், மாஜி எஸ்.ஐ.தான் என்பதை நிரூபித்துள்ளார்.

தன்னை ஏமாற்றிவிட்டு தலைமறைவான கணவருக்கு தண்டனை பெற்றுதர 46 ஆண்டுகளாக போராடி வரும் மூதாட்டியின் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *