இலங்கையில் சீனாவின் குடியேற்றத்தால் இந்தியாவுக்கு பாரிய அச்சுறுத்தல்!

இலங்கை கடற்கரை பகுதியில் உள்கட்டமைப்பை சீனா வலுப்படுத்தி வருவதால் இந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுமோ என அச்சம் எழுந்துள்ளது.

இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இலங்கையில் குட்டி தீவையே வாங்கிவிட்டது சீனா என்று செய்திகள் வெளியானது முதல் இந்திய பெருங்கடல் பகுதிகளில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இலங்கையில் உள்நாட்டு போர் முடிந்தவுடன் முதலீடுகளை அதிகரித்து வரும் சீனா, தற்போது இலங்கை சம்மதத்துடன் பல இடங்களில் அதிக முதலீடு செய்துள்ளது.

குறிப்பாக, BELT AND ROAD INITIATIVE என்ற திட்டத்தை கொண்டு வந்து பல நாடுகளில் சாலைகள், ரயில் பாதைகள், துறைமுகங்களை கட்டி வருகிறது சீனா.

இதன் ஒரு முயற்சியாக கொழும்பு பகுதியில் கடல் பரப்பில் 15 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பில் மிகப்பெரிய துறைமுக நகரத்தை உருவாக்கி வருகிறது சீனா.

இதற்கு காரணம் சீனாவின் ஷாங்காய் நகரில் தொடங்கி ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா வரை சில துறைமுகங்களை கட்டுப்பாட்டில் வைத்துள்ள சீனா, மியான்மர், இலங்கை, பாகிஸ்தானில் துறைமுகங்களை கட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்மூலம் ஐரோப்பாவிற்கு சரக்கு போக்குவரத்தை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதோடு இலங்கையில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சுற்றியுள்ள 15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை 99 வருடங்களுக்கு குத்தகைக்கு எடுத்துள்ளது சீனா.

தமிழ்நாட்டிற்கு அருகில் உள்ள நெடுந்தீவு, அனலைதீவு, நயினாத் தீவு பகுதிகளில் சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிப்பதற்காக சீனாவை சேர்ந்த நிறுவனம் குடியேறிவிட்டது.

கிளிநொச்சி, பூநகரிக்குட்பட்ட கடல் பகுதியிலும் மக்கள் எதிர்ப்பையும் மீறி கடல் அட்டை பண்ணை அமைத்து சீன நிறுவனம் தொழில் செய்து வருகிறது.

இப்படி இலங்கையில் பல பகுதிகளில் சீனா குடியேறியுள்ளது இந்திய பெருங்கடல் பகுதிகளில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் உள்ளதாக கருத்துகள் வலுத்துள்ளது.” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *