மாத்தறை மாவட்டத்தில் அமைந்துள்ள 400 வருடங்கள் பழமைவாய்ந்த ஸியாரம்!

அஸ்ஸைய்யித் ஸாதாத் முஹியித்தீன் வலீயுல்லாஹ் ( போர்வை ஸியாரம்) அவர்களின் ஸியாரம் மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸையில் அமைந்திருக்கும் கொடப்பிட்டிய என்ற ஊரில் அமைந்துள்ளது.

இவர்கள் ஈராக் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்தவர்கள் ஆவார். இவர்கள் அஷ்செய்க் முஹியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின்
வழித்தோண்றலைச் சேர்ந்தவர்கள் ஆவார்.

அஷ்செய்க் முஹியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தியானத்தில் இருந்த கூரகல தப்தர் ஜெய்லானி மற்றும் பாவதமலையைத் தரிசிக்கும் நோக்கில் இவர்கள் இலங்கைக்கு வந்திருக்கக்கூடும் என நம்பப்படுகின்றது.

ஏறத்தாள 350வருடங்களுக்கு முன்னர் நில்வளா கங்கைக்கு அண்மையில் உள்ள காட்டுப்பகுதியில் இவர்களின் ஸியாரம் கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களின் ஸியாரம் கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னரே அங்கு ஒரு பள்ளிவாசல் அமைக்கப்பட்டது.

இப் பெரியாரின் மக்பராவை ஸியாரத் செய்யவரும் மக்கள், அவர்களின் ஸியாரத்தை போர்வையினால் போர்த்தும் வழக்கம் காணப்பட்டதால், பிற்காலத்தின் இவ்ஊர் போர்வை என்று அழைக்கப்படலாயிற்று.

மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக விளங்கும் இந்த ஸியாரத்துக்கு முஸ்லிம்களைப் போலவே, அதிகமான சிங்கள மக்களும், தமிழ் மக்களும் வருகை தருகின்றனர்.

தமது தேவைகள் நிறைவேறவேண்டும் என என்னத்தில் இங்கு வருகின்ற சிங்கள மக்களுக்கு, அவர்கள் தேவைகள் நிறைவேறுவதாக தெரிவிக்கின்றனர்.

இப்பகுதியில் அமைந்திருக்கும் விகாரைகளின் பெளத்த பிக்குமார்களும் இந்த ஸியாரத்தை தரிசிக்க வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாத்தறை மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட ஒரேயொரு முஸ்லிம் தொல்பொருள் தளமாக இந்த ஸியாரம் காணப்படுகின்றது. இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் 2011ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

ஆக்கம் : இப்ஹாம் நவாஸ்

~

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *