44 நாட்களில் உலகை தனியாக வலம் வந்த 18 வயது இளைஞனின் கின்னஸ் சாதனை!

44 நாட்களில் சுமார் 13 நாடுகள் தாண்டி தனியாக தனது சிறிய விமானத்தில் பறத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளான் பிரித்தானியாவைச் சேர்ந்த இளைஞன். முன்னதாக, 18 ஆண்டுகள் 163 நாட்கள் வயதுடைய அமெரிக்க இளைஞன் படைத்த சாதனையை, 18 ஆண்டுகள் 149 வயதுடைய ட்ரவிஸ் லுட்லோ முறியடித்திருக்கிறான்.

கடந்த மே மாதம் 29 ஆம் திகதி நெதர்லாந்திலிருந்து தனது சாதனை பறப்பினை ஆரம்பித்த ட்ரவிஸ், ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் பறப்பில் ஈடுபட்டு, ஒவ்வொரு இடங்களில் தங்கி, 44 நாட்களில் சுமார் 24 ஆயிரத்து 972 மைல்கள் பறப்பில் ஈடுபட்டு, இன்று தனது சாதனையை நிறைவுசெய்திருக்கிறான்.

தனது வாழ்நாளில் மறக்கமுடியாத அனுபவத்தையும் காட்சிகளையும் தரிசித்த அற்புதப்பயணமாக இந்த 44 நாட்கள் அமைந்தன என்று புளகாங்கிதம் அடையும் ட்ரவிஸ், தனது பறப்பின் இடைவெளியில் அமெரிக்காவின் டெக்ஸஸ் மாநிலத்தில் இறங்கி, இரண்டாவது கொரோனா தடுப்பூசியையும் போட்டுக்கொண்டான் என்பது குறிப்பிடத்தக்கது.

இவனது பயணம் மிகவும் சுலபமானதாக அமையவில்லை என்றும் நெதர்லாந்தில் ஆரம்பித்து போலந்து, ரஷ்யா, அமெரிக்கா, கனடா, கிறீன்லாந்து, ஐஸ்லாந்து, லண்டன், அயர்லாந்து, ஸ்பெய்ன், மொரோக்கோ, ப்ரான்ஸ் மற்றும் பெல்ஜியம் ஈறாக, பல நேரங்களில் பனிப்பொழிவுகள், இடிமுழக்கங்கள் என்று சவால்களை சந்திக்கவேண்டியதாக இருந்தது என்றும் மலைக்காற்று ஒரு இடத்தில் ஐந்து செக்கன்களில் விமானத்தை இரண்டாயிரம் அடிகளுக்கு இழுத்துச்சென்றது என்றும் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *