கூகுள் நிறுவனத்திற்கு 500 மில்லியன் யூரோ அபராதம் விதித்தது பிரான்ஸ்!

கூகுள் நிறுவனத்துக்கு பிரான்ஸ் நாடு 500 மில்லியன் யூரோ அபராதம் விதித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் செய்தி நிறுவனங்கள் அளித்த புகாரின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சந்தைப் போட்டி விதிமுறைகளை கண்காணித்து வரும் அமைப்பு இந்த அபராதத்தை வித்துள்ளது.

இந்த அபராதத் தொகையை எப்படிச் செலுத்தப் போகிறது என்பதைப் பற்றி கூகுள் நிறுவனம் இரண்டு மாதங்களுக்குள் தெரிவிக்காவிட்டால் நாள் ஒன்றுக்கு 900,000 யூரோ வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கூகுள் பிரான்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த முடிவு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. எங்களின் தளத்தின் செய்திகளை கையாள்வதற்கு நாங்கள் அளித்த முக்கியத்துவத்தை, அதன் பின்னணியில் உள்ள எங்களின் உழைப்பைப் பிரதிபலிப்பதாக இல்லை. சில செய்தி நிறுவனங்களுடன் கிட்டத்தட்ட சமரசம் எட்டிவிட்டோம். எல்லாம் முடிந்து முறைப்படி ஒப்பந்தம் கையெழுத்தாகும் சூழலில் இப்படி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

கூகுள் நிறுவனம் தனது தளத்தில் மற்ற செய்தி ஊடகங்களின் செய்திகளைப் பயன்படுத்தும்போது அந்த செய்தி நிறுவனங்களுக்கு உரிய இழப்பீடு அளிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்த சர்ச்சை உருவாகியுள்ளது.

பிரான்ஸின் ஏஎஃப்பி, ஏபிக், எஸ்இபிஎம் ஆகிய செய்தி நிறுவனங்கள் கூகுள் மீது புகார் தெரிவித்தன. அந்நிறுவனங்கள் தங்களின் செய்திகளை கூகுள் நிறுவனம் பயன்படுத்தும்போது நெய்பரிங் ரைட்ஸ் “neighbouring rights” என்பதன் அடிப்படையில் உரிய பணப்பலன் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. அதற்காக வெளிப்படையான பேச்சுவார்த்தைக்கும் அழைப்புவிடுத்தன.ஆனால், அதற்கு கூகுள் நிறுவனம் ஒத்துழைக்காத நிலையிலேயே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *