ஏ.ஆர்.ரஹ்மானைக் கவர்ந்த தப்பாட்டம்!

தமிழகத்திற்கே உரித்தான கிராமிய இசை மரபின் அதிரடி வெளிப்பாடு தான் தப்பாட்டம். இது நம் மண்ணின் இசை. இதற்கென்று சிறப்பான தாள, லயக்கட்டு எல்லாம் உண்டு.
தப்பு வாத்தியத்தை வைத்துக் கொண்டு நம் கிராமியக் கலைஞர்கள் காலில் சலங்கை துள்ள ஆடும்போது, காதுகள் விண்ணென்று அதிரும் அனுபவத்தைப் பலர் கொண்டாடியிருக்கிறார்கள்.

‘சுபமங்களா’ பத்திரிகை நடத்திய விழாவில் தப்பாட்டத்தை மேடையில் அதன் ஆசிரியர் கோமல் சுவாமிநாதனுடன் அமர்ந்து கேட்ட எழுத்தாளர் சுஜாதா சொன்னார்.

“காது சும்மா ஜிவ்வ்வுன்னு இருக்கு”

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் இதே மாதிரி தப்பாட்டக் கலைஞர் தஞ்சை ரங்கராஜனின் தப்பாட்டத்தை நேரடியாகப் பார்க்கும் அனுபவம் கிடைத்திருக்கிறது.
ஒன்றரை மணி நேர ஆட்டம் பலருடைய காதுகளையும் கட்டிப் போட்டு விட்டது. பல வெளிநாடுகளுக்கெல்லாம் தப்பாட்டத்தைக் கொண்டு சென்ற கிராமியக் கலைஞர் ரங்கராஜன்.

ரஹ்மான் ரசித்த தப்பாட்டம் அவருக்குள் இறங்கி அவருடைய திரைப்படம் வழியாகவும் வெளிப்பட்டிருக்கிறது.

இதை நம்மிடம் நேரடியாகச் சொன்னவர் தப்பிசைக் கலைஞரான ரங்கராஜன்.

சரி, ரஹ்மானின் திரையிசையில் தப்பாட்ட லயத்துடன் வெளிவந்த பாடல்கள் என்னென்ன  என்கிறீர்களா?

‘சங்கமம்’ படத்தில் இடம் பெற்ற “மழைத்துளி மழைத்துளி” என்ற பாடலும், “ஆளாள கண்டா” பாடலும் தான்!

இப்போதும் கவனித்துக் கேளுங்கள். பாடலுக்குள் துள்ளும் தப்பாட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *