28 ஆண்டுகளுக்குப் பின் சாம்பியன் பட்டத்தை வென்றது அர்ஜென்டினா!

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் பிரேசிலை வீழ்த்தி அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் வென்றது. பரபரப்பாக நடந்த இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அமெரிக்க நாடுகளுக்கு இடையேயான கோபா அமெரிக்காவின் இறுதிப்போட்டி பிரேசிலில் நடைபெற்றது. விறுவிறுப்பான இறுதி ஆட்டத்தில் இரு அணிகளும் தொடக்கம் முதலே கடுமையாக மோதிக்கொண்டன. மெஸ்ஸி, ஏஞ்சல் டி மரியா ஆகியோர் பிரேசிலின் தற்காப்பு அரணை உடைக்க கடுமையாக போராடினர்.

அதன் பயனாக போட்டியின் 22-வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணி வீரர் ஏஞ்சல் டி மரியா வெற்றிக்கு காரணமான கொலை அடித்தார். 105 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோபா அமெரிக்கா கால்பந்து தொடரை அர்ஜெண்டினா அணி 15 முறை வென்றுள்ளது. கோபா அமெரிக்காவை அதிக முறை வென்ற அணி என்ற உருகுவேவின் சாதனையை அர்ஜென்டினா சமன் செய்தது. 1993-ம் ஆண்டுக்கு பிறகு கோபா அமெரிக்கா தொடரை கைப்பற்றி மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி சாதனை படைத்துள்ளது.

17 ஆண்டுகளாக அர்ஜென்டினா அணிக்காக ஆடிவரும் மெஸ்ஸி முதல் முறையாக சரவதேச கோப்பையை வென்றுள்ளார். சொந்த மண்ணில் தோல்வியால் பிரேசில் வீரர்கள் கடும் சோகத்தில் மூழ்கினர். நட்சத்திர வீரர் நெய்மர் ஒரு கோலும் அடிக்க முடியாத விரத்தியில் கண்ணீருடன் அரங்கில் இருந்து விலகினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *