மொட்டு கட்சியில் இருந்து விலகுகிறது கை!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் பிரதான பங்காளிகளின் ஒன்றான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, அரசாங்கத்திலிருந்து வெளியேறுவது தொடர்பில் கலந்தாலோசித்து வருகிறதென தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏனைய பங்காளிகளில், அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோருக்கும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினருக்கும் இடையில் கடுமையான கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன.

இந்நிலையில், அரசாங்கத்திலிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை ஓரங்கட்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக, சுதந்திரக் கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதனிடையே, இளம் உறுப்பினர்களுக்கு இடமளிக்கும் வகையில், முழுமையான அமைச்சரவை மாற்றமொன்றை விரைவில் மேற்கொள்வதற்கு அரசாங்கம் கலந்தாலோசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த மாற்றத்தின் போது, தாமரை மொட்டுவைச் சின்னமாகக் கொண்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதிக்கத்தை அமைச்சரவைக்குள் அதிகரித்துக் கொள்ளும் வகையிலேயே மாற்றங்கள் செய்யப்படும் எனவும், கையை சின்னமாகக் கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் ஓரங்கட்டப்படக் கூடுமெனவும் உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், அவ்வாறு ஓரம் கட்டப்படுவதற்கு முன்னர், தாங்களாகவே அரசாங்கத்திலிருந்து விலகிக்கொள்வதே உசித்தமானதாக இருக்குமென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் கதைகள் அடிபடுகின்றனவென அறியமுடிகின்றது.

அதனோர் அங்கமாகவே, கட்சியின் தலைமை தன்னை விலகுமாறு கேட்டால், கட்சியின் மத்தியக்குழு விலகவேண்டுமென தீர்மானித்தால், தன்னுடைய பதவியை எந்நேரத்தில் துறப்பதற்குத் தயாராக இருப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கத்தையும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவையும் ஆட்சியதிகாரத்துக்கு கொண்டுவருவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியே பெரும்பாடுபட்டது என்பதை நினைவுப்படுத்திய தயாசிறி ஜயசேகர, பழையவற்றை மறந்துவிடக்கூடாது என்றார்.

இதனடிடையே, கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழுக்கூட்டம் நேற்று முன்தினம் (08) கட்சியின் தலைமையகத்தில் கூடியது.

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் நிலைமைகளின் அடிப்படையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இருக்கவேண்டுமா என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அரசாங்கத்திலிருந்து விலக வேண்டுமென மத்தியக் குழு உறுப்பினர்கள் பலரும் வலியுறுத்தியுள்ளனர். எனினும், நெருக்கடியான நிலைமையில், தேர்தலொன்று இல்லாத சூழ்நிலையில், அரசாங்கத்திலிருந்து விலகவும் உசிதமானதல்ல என மற்றுமொரு பிரிவினர் எடுத்துரைத்துள்ளனர்.

எவ்வாறான நிலைமைகள் ஏற்படினும், கட்சியைப் பலப்படுத்தி, மக்களிடத்தில் செல்லவேண்டுமென சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

இதற்கிடையே, கடமைகளையும் பொறுப்புகளையும் முறையாக முன்னெடுக்காத அமைச்சர்களை, அவ்வமைச்சிலிருந்து நீக்கிவிட்டு புதிய முகங்களுக்கு அதுவும் இளம் உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கு கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாகவும் அறியமுடிகின்றது.

குறுகிய காலப்பகுதியில் திறமைகளை வெளிப்படுத்திய, முன்னேற்றத்தை காண்பித்த இராஜாங்க அல்லது பிரதியமைச்சர்களுக்கு இதன்போது முன்னுரிமை கொடுப்பது தொடர்பிலும் அரசாங்கம் ஆலோசித்துள்ளதாக அறியமுடிகின்றது. 

அவ்வாறாதொரு நிலைமை ஏற்படுமாயின் அரசாங்கத்துடன் முட்டிமோடிதிக் கொண்டிருக்கும் பங்காளிகள், ஓரங்கட்டப்படக்கூடும் அல்லது பெயரளவில் ஏதாவது பொறுப்புகள் வழங்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, நிதியமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதன் பின்னர், தன்னுடைய அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட பெசில் ராஜபக்‌ஷ, “கசப்பான தீர்மானங்களை எடுப்பேன்” என பகிரங்கமாக அறிவித்துள்ளார். ஆகையால், அரசாங்கத்துக்குள் தற்போது ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகளை களையும் வகையிலும் தீர்மானங்கள் எதிர்காலத்தில் எடுக்கப்படலாமென அறியமுடிகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *