உலகின்  3-வது பெரிய கிரிக்கெட் மைதானம் ஜெய்ப்பூரில் உருவாகிறது!

பிங்க் சிட்டி எனப் பெருமையுடன் அழைக்கப்படும் ஜெய்ப்பூரில் உலகின் மூன்றாவது பெரிய கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமானப் பணிகள் விரைவில் நிறைவடையவுள்ளன.

ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தின் ஆணையர் கெளரவ் கோயல் நிலத்திற்கான ஆவணங்களை அச்சங்கத்தின் தலைவர் வைபவ் கெலாட்டிடம் ஒப்படைத்துள்ளார். ஜெய்ப்பூரில் உள்ள டெல்லி சாலையில் உள்ள சான்ப் கிராமத்தில்தான் அந்த கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படவுள்ளது.

இந்த புதிய மைதானத்தில் 75 ஆயிரம் பேர் அமர்ந்து விளையாட்டை ரசிக்கக் கூடிய அளவுக்கு பிரம்மாண்டமாக உருவாக்கப்படுகிறது. இரண்டு தளங்களாக அமைக்கப்படுகிறது. முதல் தளத்தில் 45 ஆயிரம் பேர் உட்கார முடியும். அடுத்த தளத்தில் 30 ஆயிரம் அமரலாம் என்ற தகவலைத் தருகிறார் கெலாட்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த கிரிக்கெட் மைதானம் 100 ஏக்கரில் இரண்டு, மூன்று ஆண்டுகளில் ரூ. 650 கோடி செலவில் நிர்மாணிக்கப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் வாரியம் 100 கோடி ரூபாய் கடனும் 100 ரூபாய் மானியமும் கொடுத்துள்ளது. 90 கோடி ரூபாயை ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கமும் மற்றும் மற்றவர்களும் வசூலிப்பார்கள்.

மைதானத்தின் முதல் தளத்திற்கான முதலீடு 400 கோடி ரூபாய். ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் கடனாக 100 கோடி ரூபாய் எடுத்துக் கொள்ளும். 90 கோடி ரூபாயை கார்ப்பரேட் நிறுவனங்களின்  மூலம் கிடைக்கும்.

உலகின் மூன்றாவது பெரிய கிரிக்கெட் மைதானத்தின் உள்ளே இரண்டு பயிற்சி மைதானங்கள், அகாடமி, கிளப் ஹவுஸ், ஹோட்டல் மற்றும் பல வசதிகளைக் கொண்டதாக இருக்கும்.

ஜோத்பூரில் உள்ள மைதானத்தின் தரத்தையும் உயர்த்த ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் கவனம் எடுத்துக் கொள்வதாக முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். இங்கு ஐபிஎல் போட்டியை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

உலகின் முதல் மிகப்பெரிய மைதானம் அகமதாபாத் நகரில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தது. இரண்டாவது மிகப்பெரிய மைதானம் ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ன் நகரில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *