பிரதமர் மஹிந்த ஓரங்கட்டப்பட்டுள்ளார் விரைவில் ஆட்சி மாற்றம்?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் பசில் ராஜபக்சவும் வெவ்வேறு திசைகளில் பயணிக்க நினைக்கின்றனர். இவர்களுக்கு இடையிலான முரண்பாடுகளினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஓரங்கட்டப்பட்டுள்ளார் என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பசில் ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு நாம் எதிர்ப்பில்லை. அவர் முன்னைய ராஜபக்ச ஆட்சியிலும் நன்றாக பணியாற்றியவர்.

ஆனால் இன்றுள்ள நிலைமையில் அவர் வருவதால் என்ன செய்துவிட முடியும். அவரால் சரியான தீர்மானங்களை எடுக்க முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை.

நாட்டின் நெருக்கடி நிலைமைகளில் அரசாங்கம் ஒன்றிணைந்து செயற்படுவதனால் எவராலும் நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியாது.

பசில் ராஜபக்சவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் வெவ்வேறு திசைகளில் பயணிக்க நினைக்கின்றனர். மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து ஏனைய இருவரும் பயணித்தால் மாற்றம் ஒன்றை எதிர்பார்க்கலாம்.

ஆனால் இவர்கள் இருவரும் தனித்தனி பயணத்தை முன்னெடுக்க நினைக்கின்றனர் என தோன்றுகின்றது. இன்று அரசாங்கத்திற்குள் முரண்பாடுகள் எழுந்துள்ளன.

இங்கு வருபவர்களும் அதனையே கூறிக்கொண்டுள்ளனர். ஆகவே அரசாங்கத்தில் உறுதியான நிலைப்பாட்டில் எவரும் இல்லை என்பது வெளிப்படுகின்றது.

இந்த முரண்பாடுகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஏன் கவனத்தில் கொள்ளவில்லை என்பது எனக்கு விளங்கவில்லை. ஏன் மஹிந்த ராஜபக்ச அமைதியாக உள்ளார் என நானும் கேள்வி எழுப்புகின்றேன். அவர் ஓரங்கட்டப்பட்டுள்ளார் என்றே தெரிகிறது.

சுற்றியுள்ள நபர்களின் மூலமாகவே ஜனாதிபதி தவறான தீர்மானங்களை எடுக்கின்றார். ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டிய இடத்தில் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளாது தவறான தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன.

மஹிந்த ராஜபக்சவை புறக்கணித்து செயற்படுகின்றனர் என்பதும் தென்படுகின்றது. இதுவே ஜனாதிபதி தவறிழைக்கும் இடமாகும். அரசாங்கத்திற்குள் முரண்பாடுகள் எழவும் இதுவே காரணமாகியுள்ளது. இவர்களின் முரண்பாடுகள் காரணமாக நாட்டை நாசமாக்க இடமளிக்க முடியாது.

அரசாங்கத்திற்குள் பல குறைபாடுகள் உள்ளன. அதனை திருத்திக்கொள்ள வேண்டும் என்பதை தொடர்ச்சியாக நாம் வலியுறுத்தி வருகின்றோம். இதற்கு அரசாங்கம் செவிமடுக்கவில்லை என்றால் அரசாங்கத்தை எதிர்த்து வீதிக்கு இறங்க நேரிடும். அதேபோல் ஆட்சி மாற்றத்தை உருவாக்கவும் நேரிடும். அதற்கு தேவை வந்துள்ளதாக உணர்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *