கொரோனா 3 ஆவது அலை நவம்பர் மாதத்தில் உச்சத்தை தொடும்!

கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்றாவிடில், கொரோனா மூன்றாம் அலை பாதிப்பு வரும் அக்டோபா் – நவம்பா் மாதங்களில் உச்சத்துக்குச் செல்ல வாய்ப்புள்ளது. மேலும், இரண்டாம் அலையின்போது பதிவான தினசரி பாதிப்பில் பாதியளவு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்று மத்திய அரசு சாா்பில் அமைக்கப்பட்ட விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு நிலவரத்தை கணித முறை மாதிரிகள் அடிப்படையில் முன்கூட்டியே கணிப்பதற்காக மூன்று போ் கொண்ட விஞ்ஞானிகள் குழு, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை சாா்பில் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது. கொரோனா மூன்றாம் அலை பாதிப்பு குறித்து இந்தக் குழு இப்போது கணித்துள்ளது.

அந்த முன்கணிப்பு குறித்து அந்தக் குழுவில் இடம்பெற்றிருக்கும் விஞ்ஞானி மனீந்திர அகா்வால், தனது சுட்டுரைப் பக்க பதிவுகளில் தெரிவித்திருப்பதாவது:

கொரோனா மூன்றாம் அலை முன்கணிப்பில், நோய் எதிா்ப்புத் திறன் மற்றும் தடுப்பூசியின் செயல் திறன் இழப்பு, புதிய உருமாறிய கொரோனா தீநுண்மி வகைகள் என்பன உள்ளிட்ட பல்வேறு காரணிகள் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன. இரண்டாம் அலை தாக்க முன்கணிப்பின்போது இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை.

இதில் மூன்று விதமான கணிப்புகள் தீா்மானிக்கப்பட்டுள்ளன. முதலாவதாக, நம்பிக்கை அடிப்படையிலானது. அதாவது, நாட்டில் வரும் ஆகஸ்ட் மாதத்தில் இயல்பு நிலை திரும்பும், புதிய உருமாறிய கொரோனா வகை உருவாக வாய்ப்பில்லை என்று கணிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது கணிப்பு இடைநிலையானது. அதில், முதலாவது கணிப்பின்படி இயல்புநிலை திரும்ப வாய்ப்புள்ளது என்பதோடு, தடுப்பூசி செயல்திறன் 20 சதவீத அளவுக்கு குறைய வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது கணிப்பு கவலைக்குரிய வகையாக கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதிய உருமாறிய கொரோனா வகை உருவாக வாய்ப்புள்ளது என்றும், வரும் ஆகஸ்ட் மாதத்தில் 25 சதவீதத்துக்கும் அதிகமாக பரவ வாய்ப்புள்ளது என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த பாதிப்பு டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் உருமாறிய வகைகளின் பாதிப்பு அளவுக்கு இருக்காது என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும்போது, கொரோனா மூன்றாம் அலை அல்லது நான்காம் அலையால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. மூன்றாம் அலை பாதிப்பின்போது பெரும்பாலும் தினசரி பாதிப்பு அளவு 50,000 முதல் 1 லட்சம் என்ற அளவிலேயே இருக்க வாய்ப்புள்ளது என்று சுட்டுரைப் பதிவில் அவா் தெரிவித்துள்ளாா்.

மேலும், இந்தப் பதிவுடன் அவா் பகிா்ந்துள்ள வரைபட விவரத்தில், கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு வரும் ஆகஸ்ட் மாத மத்தியில் வெகுவாக குறைந்துவிடும். மூன்றாம் அலை பாதிப்பு அக்டோபா் – நவம்பா் மாதங்களில் உச்சத்தை அடைய வாய்ப்புள்ளது. கொரோனா பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை எனில், மூன்றாம் அலையின்போது தினசரி பாதிப்பு 1.5 லட்சம் முதல் 2 லட்சம் அளவுக்கு உயர வாய்ப்புள்ளது. இது இரண்டாம் அலை உச்சத்தில் இருந்த மே மாதத்தின்போது பதிவான தினசரி பாதிப்பு அளவில் பாதிக்கும் குறைவாகும். மே 7 ஆம் தேதியன்று இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 414,188 ஆக பதிவானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞானிகள் குழுவில் இடம்பெற்றிருக்கும் ஐஐடி-ஹைதராபாத் விஞ்ஞானி எம்.வித்யாசாகா் கூறுகையில், கொரோனா மூன்றாம் அலை பாதிப்பின்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியவா்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை குறைவதில் தடுப்பூசி மிகப் பெரிய பங்காற்றும் என்றாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *