தனியார் பாடசாலைகளில் கல்வி கற்ற 12.50 இலட்சம் மாணவர்கள் எங்கே?

அரியானா மாநிலத்தில் 14,500 அரசுப் பள்ளிகளும், 8,900 தனியார் பள்ளிகளும் உள்ளன. தற்போது கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் பள்ளிகள் திறப்பதற்கான செயல்முறைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தனியார் பள்ளிகளில் படிக்கும் 12.51 லட்சம் மாணவர்களின் தகவல் எம்.ஐ.எஸ்-யில் (மேலாண்மை தகவல் அமைப்பு) புதுப்பிக்கப்படவில்லை என்று பள்ளிக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை 29.83 லட்சமாக இருந்த நிலையில், இந்தாண்டு ஜூன் 28ம் தேதி வரை (2021-22 கல்வியாண்டு) 17.31 லட்சமாக உள்ளது.
அதாவது 12.5 லட்சம் மாணவர்கள் அரசு அல்லது தனியார் பள்ளிகளில் சேரவில்லை என்று கூறப்படுகிறது. கொரோனா மற்றும் ஆன்லைன் படிப்புக்கான வசதிகள் இல்லாததால், மாணவர்கள் பள்ளிப் படிப்பை விட்டு வெளியேறினார்களா? என்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கவலையடைந்து வருகின்றனர். இதுகுறித்து அரியானா கல்வி அமைச்சர் கன்வர் பால் குர்ஜார் கூறுகையில், ‘இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கும், கடந்தாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கும் அதிக வித்தியாசம் காணப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துவோம்’ என்றார்.
இதுகுறித்து பதேஹாபாத் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் நிர்வாக உறுப்பினரான ராம் மெஹர் கூறுகையில், ‘கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டும் பள்ளிகள் திறக்கப்படாது என்று மக்கள் நம்புகிறார்கள். இந்தச் சூழ்நிலையில், சில தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறவில்லை. அதனால், புள்ளிவிபரங்கள் அப்டேட் செய்யப்படாமல் உள்ளன’ என்றார்….