Calligraphy எனும் எழுத்தோவியம்!

எழுத்துக்களை சித்திர வடிவத்தில் அழகாக எழுதுவது கலிக்கிரஃபி எனப்படுகிறது. பெரும்பாலும் உலகின் அநேக மக்களால் கலிக்கிராஃபி என்றாலே அது அரபு மொழி எழுத்துக்களுக்கானது என்றே நினைக்கிறார்கள்.. ஆனால் கலிக்கிரஃபி என்பது ஒரு குறிப்பிட்ட கலை வடிவத்தின் பெயர் தானே தவிர அது அரபு மொழிக்கானது மட்டுமல்ல, அரபு கலிக்கிரஃபி ஏன் பெரும்பான்மையான மக்களால் அறியப்படுகிறது எனில் அரபுலகிலும் மத்திய தரைக்கடல் நாடுகளிலும், இரான், இராக் போன்ற வளைகுடா நாடுகளை கடந்து ஆப்கான், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிலும் அது மத்தியகாலம் தொட்டே இஸ்லாமிய பள்ளிவாசல்கள், அரண்மனைகள் மற்றும் மதரஸாக்களில் வரையப்பட்டு பரவிக்கொண்டு வந்துள்ளது. அரபு கலிக்கிரஃபிக்கு முன்னரே லத்தீன் கலிக்கிரஃபியும் முன்னர் பயன்பாட்டில் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆங்கில எழுத்துக்களை Cursive letters ல் எழுதுவது போலத்தான், கலிக்கிரஃபி ஆரம்பமானது. பின்னர் அரசுக்களிடையே ரகசிய சங்கதிகள் பரிமாறிக்கொள்ள இந்த கலிக்கிரஃபியை பயன்படுத்தினார்கள் ஐரோப்பியர்கள் ,குறிப்பாக பல்கேரிய நாட்டினர். பின்னாளில் அரபு கலிக்கிரஃபி உலகம் முழுக்க உள்ள பள்ளிவாசல்களின் அலங்கார வடிவங்களாயின, பின்னர் இப்போது ஒரு தலைசிறந்த கலை நுணுக்கமாக கலிக்கிரஃபி கருதப்படுகிறது. வரைகலையில் ஆர்வமுள்ள அல்லது வரைகலை பயின்ற ஒருவருக்கு கலிக்கிரஃபி மிக எளிதாக வந்துவிடுகிறது. அரபு எழுத்துக்களை நீட்டியும், சுருக்கியும் ஒரு கருத்து அல்லது அறிவுரை அல்லது குர்ஆனின் ஒரு ஆயத் இவற்றை ஒரு குறிப்பிட்ட வடிவத்திற்குள் கொண்டுவருவதே அதிலுள்ள சிறப்பு.

தமிழ், மலையாளத்தில் கூட இப்போது கலிக்கிரஃபி வந்துவிட்டது. உதாரணமாக “படகு” “வீடு” என்பது அதன் வடிவத்தை போலவும் “கொக்கு” “யானை” என்பதை அதன் உருவத்தை போலவும் எழுதுவது தமிழ்-மலையாள கலிக்கிரஃபியின் சிறப்பம்சம். அரபுலகில் உருவங்களை அடிப்படையாக வைத்து கலிக்கிரஃபி எழுதுவது முன்னர் தடுக்கப்பட்டிருந்தது எனினும் உருவ வழிபாட்டிற்கு வழிவகுக்காத வகையிலுள்ள உருவங்களை எழுத்தோவியத்தில் கொண்டுவர தடை நீக்கப்பட்டது. வெஸ்டர்ன் கலிக்கிரஃபியில் எப்படி லத்தீன்,ரோமன்,ஆங்கில கலிக்கிரஃபி புகழ்பெற்று இருக்கிறதோ அதேபோல ஈஸ்டர்ன் கலிக்கிரஃபியில் துருக்கி,அரபு,பெர்ஷியன் மற்றும் உருது மொழி எழுத்துக்கள் பிரபலமானவையாக உள்ளது.

மேற்குலக நேர்கோட்டு எழுத்துக்களை விட செமிதிக் குடும்பத்தின் ‘கூஃபிக்’ வடிவ எழுத்துக்களை அடிப்படையாக கொண்டு பரிணமித்த
அரபிக் கலிக்கிரஃபியை தான் உலக முழுவதிலும் உள்ள மக்கள் விரும்புகிறார்கள். முஸ்லிம்களின் வீடுகளை அலங்கரிக்கும் குர்ஆன் ஆயத், துஆ மற்றும் இஸ்லாமிய வார்த்தைகளான அல்லாஹ், முஹம்மத் போன்ற கலிக்கிரஃபி வரைபடங்களுக்கு நிகராக…தங்களது நம்பிக்கை பிரகாரம் அல்லது தங்களுக்கு பிடித்த தத்துவம் மற்றும் பொதுச்சொற்களை அரபி கலிக்கிரஃபியில் வரைந்து சுவர்களில் மாட்டிக்கொள்வதை அனைவரும் விரும்புகின்றனர். அதற்கு காரணம் அந்த அரபு எழுத்துகளின் கூஃபிக் வடிவம் தான்.

கலிக்கிரஃபி என்பதை அரபியில் “கத் அரபி” (Khatt Arabic) என்கிறார்கள். குர்ஆனை அடிப்படையாக வைத்து தான் முதன்முதலில் அரபுகளிடையே பரிணமித்தது.குறிப்பாக இராக்கின் கூஃபா பகுதியில் தான் முதன்முதலில் இந்த கலிக்கிரஃபி ஸ்டைல் உருவானது. அதனாலேயே அதன் எழுத்துவடிவங்களை கூஃபிக் என்கிறார்கள். இந்த கூஃபிக் கலிக்கிரஃபி இருவகைப்படும் , இவை இரண்டும் ஏழாம் நூற்றாண்டு காலகட்டத்தில் உருவானது தான் . இதன் மற்றொரு வகை நஷ்க் எனப்படுகிறது. இந்த நஷ்க் ஸ்டைல் முதன்முதலில் ஹிஜ்ரி நாட்காட்டியில் வடிவமைப்பானது. அரபுலகில் எழுத்துப்பூர்வ பத்திரங்கள், ஒப்பந்தங்கள் போன்ற தஸ்தாவேஷுகள் எழுத நஷ்க் முறை பயன்பட்டது.

கலிக்கிரஃபியில் வெரும் அரபு எழுத்துகள் மட்டுமல்லாது பூக்கள், இலைகள் போன்ற பசுமை சார் சித்திரங்களும் அதற்கு தோதான வர்ணபூச்சுகளும் ஒரு சித்திரத்திற்கும் மற்றொரு சித்திரத்திற்கும் இருக்கும் Pattern என்ற வரிசை தொடர்பினை இணைக்கும் Interlace , ஒரு எழுத்திற்கும் மற்றொரு எழுத்திற்குமிடையே இருக்கும் எல்லைகளை பிரித்துக்காட்டியும் ஜியோமிதி குறியீடுகளை இணைத்தும் மிக மிக நுணுக்கமாக வரைவது அரபுக்கலிக்கிரஃபியின் தனித்துவமாகும்.

அரபு நாடுகளை தவிர்த்து உலகிலுள்ள அனைத்து இஸ்லாமிய மதரஸாக்களையும் பள்ளிவாசல்களையும் கலிக்கிரஃபி கலையை கொண்டு நிறப்பியது அந்த கலைக்கு கிடைத்த மிகப்பெரிய அடையாளமாக கருதப்படுகிறது. இந்தியாவில் இஸ்லாமிய தோற்றம் உருவாகும் முன்னர் இங்கு இருந்த சிற்பக்கலை மற்றும் ஓவியக்கலைக்கு இணையாக இன்னும் கேட்பின் அதைவிட மிகைத்ததாக அனைத்து தரப்பு மகாராஜாக்களின் அரண்மனைகளை அலங்கரித்தது. தாஜ்மஹால் எனும் உலக அதிசயத்தை ஒரு ஒப்பற்ற கலைப்படைப்பாக தூக்கி நிறுத்தியது இத்தாலிய மார்பிள் மட்டுமல்ல இஸ்லாமிய அரபுக்கலையில் உதித்த கலிக்கிரஃபியும் தான் என்பது மறுக்க முடியாத உண்மை.

குர்ஆன் ஆயத்துகள், குர்ஆனில் உள்ள பிரார்த்தனைகள் மாத்திரமல்லாது, முஹம்மது நபி ஸல் அவர்களின் ஹதீஸ் உரைப்புகளும், அவர்களுடைய வாழ்வில் நடந்த சம்பவங்களும் அவரது போதனைகளும் கூட அரபி எழுத்தின் கலிக்கிரஃபியில் வடிவக்கதைகளாக வரையப்பட்டுள்ளது கலிக்கிரஃபி கலை அரபுகளின் கைகளில் உச்சம் தொட்டது எனலாம்.

அதுபோல தமிழ் மற்றும் மலையாள லிபிகள் வட்டெழுத்து வகையை சேர்ந்தவை… இவற்றில் எளிதாக கலிக்கிரஃபியை வரைந்துவிட முடியும் மாறாக இந்தி அல்லது மற்ற வடநாட்டு தேவநாகரீ எழுத்துக்களில் கலிக்கிரஃபி கொண்டுவருவது கடினம். தமிழ்நாட்டில் கலிக்கிரஃபி கற்பிக்கும் பயிற்சி நிறுவனங்கள் மிக குறைவாகவே உள்ளது . கேரளத்தில் தற்போது இக்கலை மிகவும் மிகைத்து வருகிறது. வீட்டு அலங்கார பொருட்களுக்கு எப்போதும் கேரளா தான் முன்னிலை வகிக்கும் என்பதால் இந்த கலிக்கிரஃபி ஓவியங்களும் இப்போது கேரளத்தில் தான் முதலிடம் வகித்து வருகிறது. முஸ்லிம் வீடுகளை தாண்டி மற்ற மத சகோதரர்களும் தங்களது வீட்டு சுவற்றினை அலங்கரிக்க இப்போது அரபு கலிக்கிரஃபி வரைவோரை ஆதரிக்கின்றனர். பிள்ளையார், சிவன் மற்றும் இதர கடவுளர்களின் உருவத்தை கூட அரபு எழுத்துகள்ளின் காலிக்கிராஃபியில் வரைந்திட முடியும் என்பதால் பலரும் இதனை விரும்புகின்றனர்.

இப்போதைய நவீன நாகரீக மக்களுக்கு அரபு எழுத்துக்கள் என்பவை, இஸ்லாமிய மதத்தோடு மாத்திரம் தொடர்புடையது என கருதாமல் அதையும் தாண்டி அந்த எழுத்துக்களுக்கு நம் கருத்தை உணர்த்தவும் தெரியும் என பக்குவம் வந்தடைந்துள்ளது. எனவே தான் தங்களது மதம் சார்ந்த மந்திரங்கள் அல்லது ஸ்தோத்திரங்களை கூட அரபு எழுத்தில் அழகிய ஓவியமாக தீட்டி அலங்காரமாக வைத்துக்கொள்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *