இந்திய ஜம்மு விமானப்படைத் தளத்தில் 2 குண்டு வெடிப்பு!

ஜம்மு விமானப்படைத் தளத்தின் தொழில்நுட்ப பகுதியில் ஞாயிறு அதிகாலை இரண்டு குறைந்த சக்தியுடைய வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

இந்த வெடிப்பு சம்பவங்கள் இன்று அதிகாலை 2 மணி அளவில் நிகழ்ந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதில் எவருக்கேனும் உயிரிழப்பு அல்லது காயம் ஏற்பட்டதா என்பது குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

ஒரு வெடிப்பு சம்பவத்தால் கட்டடம் ஒன்றின் மேற்கூரைக்கு சிறிய சேதாரம் ஏற்பட்டதாகவும், இன்னொரு வெடிப்புச் சம்பவம் திறந்த வெளியில் நிகழ்ந்ததாகவும் இந்திய விமானப்படை தெரிவிக்கிறது.

இந்த வெடிப்பு சம்பவங்களால் எந்தக் கருவிக்கும் சேதாரம் நிகழவில்லை என்று தெரிவித்துள்ள இந்திய விமானப்படை, குடிமை முகமைகளுடன் சேர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.

இந்த வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக இந்திய விமானப் படையில் துணைத் தளபதி ஏர் மார்சல் ஹெச்.எஸ். ஆரோராவுடன், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜம்முவில் என்ன நிலைமை என்பதை ஆராய்வதற்காக விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் விக்ரம் சிங் இன்று ஜம்மு செல்ல உள்ளதாகவும் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜம்மு விமானப்படைத் தளத்தில் வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்த பிறகு வெடிகுண்டு சோதனை மற்றும் தடயவியல் நிபுணர்கள் அடங்கிய குழுக்கள் ஜம்மு விமான நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன.

ஜம்மு விமான நிலையத்தின் ஓடுதளம் மற்றும் தரைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இந்திய விமானப் படையின் கீழ் இருப்பதாக ஜம்முவில் இருக்கும் பிபிசி செய்தியாளர் மோஹித் காந்தாரி தெரிவிக்கிறார்.

இங்கு பயணிகள் விமானம், பாதுகாப்புப் படைகளின் விமானங்கள் ஆகிய இரண்டுமே இயக்கப்படுகின்றன.

ஜம்மு தாக்குதல் – கவலைப்பட வேண்டுமா?
ஜுஹல் புரோஹித் பிபிசி செய்தியாளர்

ஜம்மு தாக்குதல் குறித்து இப்போதே கருத்து வெளியிட முடியாது. ஆனால் இந்திய விமானப்படையே தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து தெரிவித்துள்ளதால் இது நிச்சயமாக கவலைக்குரிய ஒன்று.

ஒவ்வொரு விமானப்படைத் தளத்திலும் இரண்டு முக்கியப் பகுதிகள் இருக்கும் ஒன்று தொழில்நுட்ப பகுதி; இன்னொன்று நிர்வாகப் பகுதி.

தொழில்நுட்ப பகுதிதான் ஒரு விமானப்படை தளத்தில் மிகவும் முக்கியமான பகுதியாகும். இங்குதான் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றின் பாகங்கள் வைக்கப்படும். விமானப்படையின் கருவிகள் வைக்கப்பட்டிருக்கும் இடமும் இதுதான்.

இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது இந்த தாக்குதல் மிகவும் தீவிரமானது. இந்த இரண்டு தாக்குதல்களையும் வெறும் சிறு குண்டுவெடிப்பு என்று புறந்தள்ளிவிட முடியாது.

இது ஒரு ட்ரோன் தாக்குதல் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது உண்மையாக இருந்தால் நிச்சயம் தீவிரமான ஒன்றாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *