தமிழ் பேசும் சமூகத்தினரின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறு ஹக்கீம் கோரிக்கை!

இலங்கையில் தமிழ் பேசும் சமூகத்தினரின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளார். அரசாங்கம் தவறுகளைத் திருத்திக் கொள்ளாவிட்டால் நாட்டின் நிலைமை மோசமாகும் என்று அவர் நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது குறிப்பிட்டுள்ளார். ஆட்சி செய்வதில் சீர்திருத்தங்களை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் அத்துடன் அரசாங்கம் இழைத்துவரும் தவறுகளையும் திருத்திக் கொள்ள வேண்டும். தமிழ் பேசும் சமூகத்தினரின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதும் அவசியமாகும். தற்போது நாட்டின் நிலைமை கவலைக்கிடமானது என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்துக்களை வெளியிட்ட அவர்,

அரசாங்கம் , நிதியமைச்சின் முகாமைத்துவ அறிக்கையில் 2020, 2021 திறைசேரி செயற்பாடு மற்றும் நீதிப் பிரிவின் கீழ் எளிதான வெளிப்படையான திறமையான வரித் திட்டத்தின்படி 2019 இறுதிப் பகுதியிலும், 2020 ஆரம்பத்திலும் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அது பின்னர் 2020 நவம்பர் மாதத்தில் அத்தாட்சிப்படுத்தப்பட்டது. கோவிட் – 19 வைரஸ் தொற்று பொதுவாக உலகம் முழுவதிலும் குறிப்பாக, இலங்கையில் மிகவும் தீவிரமாகப் பரவிக் கொண்டிருக்கும் வேளையில் , நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது.

நிதி முகாமைத்துவமானது உறுதியான நிதி சார்ந்த தீர்மானங்கள் பொருளாதார யதார்த்தங்கள், பாரிய பொருளியல் அடிப்படைகளை ஆகியவற்றை அனுசரித்தே மேற்கொள்ளப்பட வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போதைய அரசியல் நிகழ்ச்சி நிரலானது எதிர்காலத்தை முன்னோக்கித் தீர்மானங்களை எடுப்பதில் திட்டவட்டமற்ற நிலைமையைக் காண்பிக்கின்றது. ஐரோப்பிய ஒன்றியம் அதன் நாடாளுமன்றத்தில் இலங்கைக்கான ஜிஎஸ்பி பிளஸ் (GSP Plus)சலுகையை மீளப் பெறுவதை வற்புறுத்துவதெனத் தீர்மானித்துள்ளது.

எனினும் நிதி இராஜாங்க அமைச்சர் இங்கு உரையாற்றுகையில், ஜிஎஸ்பி பிளஸ் விவகாரத்தில் அரசாங்கம் இராஜதந்திர வழிமுறைகளைக் கையாளுகிறது என்றும் அதேவேளையில், நிபந்தனைகளைப் பொறுத்தவரை அதற்கு நிகரான வேறு மாற்று வழிகளையும் கண்டறிய வேண்டும் என்று கூறியுள்ளார். இது ஏற்கத்தக்கக் கூற்று அல்ல என ஹக்கீம் தெரிவித்தார்.

மாற்று வழிவகைகளைத் தேடுவதற்கு முன்னர் கள நிலவரத்தின் யதார்த்தத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என ஹக்கீம் வலியுறுத்தினார். மேலும் மத்திய வங்கியின் 2020 ஆண்டறிக்கையின் பிரகாரம் ஏற்றுமதி பெறுமதி எல்லாமாக 9.8பில்லியன் ஆகும்.

அதில் ஐரோப்பிய ஒன்றியம் எங்களது மொத்த ஏற்றுமதியில் 31.6 வீதத்தைக் கொள்வனவு செய்கின்றது. அது அமெரிக்க டொலர் 3.1பில்லியன் பெறுமதியானது. ஐக்கிய அமெரிக்கா எங்களது ஏற்றுமதியில் 24.9 வீதத்தைக் கொள்வனவு செய்கின்றது. அது அமெரிக்க டொலர் 2.5 பில்லியனுக்கு சமமானது. மத்திய கிழக்கு நாடுகள் எங்களது ஏற்றுமதியில் 9.1 வீதத்தைக் கொள்வனவு செய்கின்றன.

அது 900 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியானது. இந்தியா எங்களது மொத்த ஏற்றுமதியில் 6 வீதத்தைக் கொள்வனவு செய்கின்றது. அது 606 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியானது. இவ்வாறான எல்லா நாடுகளையும் ஒன்றாகச் சேர்த்து நோக்கும் போது இலங்கை பெறுகின்ற ஏற்றுமதி வருமானம் 7.1 பில்லியன் அமெரிக்கா டொலர்களாகும். இவையனைத்தும் இப்பொழுது தடைப்படப் போகின்றன.

மனித உரிமைகள் விடயத்தில் எமது நாடு நடந்து கொள்கின்ற நிகழ்ச்சி நிரலின் விளைவாகவே இந்த நிலைமை ஏற்படுகின்றது. ஆகையால்தான், பயங்கரவாத தடைச் சட்டத்தை மீளப் பெறுமாறு அல்லது அதனை மீள் பரிசீலனை செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்துகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *