மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடு தொடர்ந்து அமுலில்!

பயணக்கட்டுப்பாடு, நாளை தளர்த்தப்படவுள்ள நிலையில்  மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன், பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படுகின்ற காலப்பகுதியில் மக்கள் செயற்பட வேண்டிய விதம் குறித்தும் அவர் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்..

அத்தியாவசிய சேவை மற்றும் விசேட காரணிகளுக்கு மாத்திரமே மாகாணங்களை கடந்து செல்ல முடியும். இது தொடர்பில் கண்காணிப்பதற்காக அனைத்து மாகாண எல்லைப் பகுதிகளிலும் பொலிஸ் சோதனைச் சாவடிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. விநோத மற்றும் விசேட சுற்றுலா பயணங்கள் , யாத்திரைகள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.மேலும் விருந்துபசாரங்கள் , கொண்டாட்ட நிகழ்வுகள் மற்றும் மக்கள் ஒன்றுக் கூடல்கள் என்பவற்றையும் நடத்த முடியாது. இதேவேளை ,பொது இடங்களில் ஒன்றுக் கூடுவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். மீண்டும் செயற்பட ஆரம்பிக்கும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் , சேவை நிலையங்கள் , வர்த்தக நிலையங்கள் சுகாதார சட்டவிதிகளுக்கு அமையவே செயற்பட வேண்டும். மேலும் நிறுவனங்கள் தமக்கு மிகவும் அவசியமான ஊழியர்களை மாத்திரவே பணிக்கு அழைக்க வேண்டும். வீட்டிலிருந்து பணிபுரியக் கூடிய வசதிகள் இருப்பின் , அதற்கமைய அதனை ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்க வேண்டும். இந்த விதிகளுக்கு புறம்பாக செயற்படும் நிறுவனங்கள் தொடர்பில் கண்காணிக்கப்படுவதுடன் , அவற்றின் உரிமையாளர் , முகாமையாளர், பணிப்பாளர் உள்ளிட்ட நிர்வாகப்பிரிவினருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும். சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படும் நபர்களை கண்காணிப்பதற்காக பொலிஸ் சோதனைச்சாவடிகள் , நடமாடும் கண்காணிப்பு பிரிவு மற்றும் மோட்டார் சைக்கிள் கண்காணிப்பு பிரிவும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் சிவில் மற்றும் சீருடையிலும் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளனர். என தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *