தர்பாருக்குத் தயாராகும் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’!

கடந்த 2006-ல் சிம்புத்தேவன் இயக்கத்தில், வடிவேலு நடிப்பில் வெளியான ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ மாபெரும் வெற்றி பெற்றதுடன் வசூலில் சாதனை புரிந்தது.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ என்ற பெயரில் தொடங்கி, சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தபோது, படக்குழுவினருடன் மோதல் ஏற்பட்டு படத்திலிருந்து வடிவேல் விலகினார்.

இதனால் வடிவேலிடம் நஷ்ட ஈடு கேட்டு படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் ஷங்கர் பட அதிபர் சங்கத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து வடிவேலுவை புதிய படங்களில் ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் சங்கம் தடைவிதித்தது. இதனால் பல வருடங்களாக வடிவேல் படங்களில் நடிக்கவில்லை.

இதனிடையே சமீபத்தில் வடிவேலுவின் நேசமணி கதாபாத்திரம் உலக அளவில் டிரெண்டிங் ஆனது. அப்போது அளித்த பேட்டியில் ஷங்கரையும், சிம்புதேவனையும் கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில், இம்சை அரசன் 24-ம் புலிகேசி படம் முடங்கியதால் ரூ.10 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று கூறிவரும் ஷங்கர், நீதிமன்றத்தில் வடிவேலு மீது வழக்கு தொடர முயற்சித்து வருவதாகக் கூறப்பட்டது.
இதனிடையே வடிவேல், இயக்குனர் ஷங்கர் இடையே ஏற்பட்டுள்ள மோதலைத் தீர்க்க மீண்டும் சமரச பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன.

இந்தச் சூழலில் தற்போது வடிவேல் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படலாம் என்றும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *