டெல்டா வைரஸ் முதல் தடவையாக சமூக மட்டத்தில் அடையாளம்!

இந்தியாவில் வேகமாக பரவிவரும் டெல்டா வகை கொவிட் வைரஸ் சமூக மட்டத்தில் முதற்தடவையாக அடையாங் காணப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல்துறை பீடத்தின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர  இதனை தெரிவித்துள்ளார்

குறித்த வகை வைரஸ் தொற்றுக்குள்ளான ஐவர்  கொழும்பு தெமட்டகொட பகுதியில்    இவ்வாறு அடையாளங் காணப்பட்டுள்ளனர்

கொழும்பு நகரில்  மேற்கொள்ளப்பட்ட  பரிசோதனை மாதிரிகளின் ஊடாக இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த வைரஸ் தொற்று,  பிரித்தானியாவின் அல்பா வகை தொற்றை விட, இரண்டு மடங்கு பரவும் வேகம் கொண்டுள்ளதாக வைத்தியர் சந்திம ஜீவந்தர சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்து, தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ஒருவருக்கு,  டெல்டா வகை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை அண்மையில் கண்டறியப்பட்டிருந்தது

இதன்படி, குறித்த தொற்று சமூக மட்டத்தில் பரவுவதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் தரப்பு தெரிவித்திருந்தது.

இந்த பின்னிணியிலேயே, தெம்மட்டகொடை பகுதியில் ஐந்து பேருக்கு, குறித்த தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்திய மீனவர்களினால் டெல்டா வகை தொற்று நாட்டில் பரவக் கூடும் என இலங்கை வைத்திய சங்கம் அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தது

இந்த நிலையில், இந்திய மீனவர்களுக்கு சொந்தமானது என கருதப்படும் இரண்டு படகுகள் சின்னபாடு கடற்கரை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உடப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த இரு படகுகளும் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டவை என சின்னபாடு மீனவர் சங்கத்தின் தலைவர் ஜேம்ஸன் பெர்ணான்டோ கூறியுள்ளார்.
50 அடி நீளமும் 6 அடி அகலமும் கொண்ட குறித்த படகுகள் இலங்கை மீனவர்களினால் பயன்படுத்தப்படுவதில்லை எனவும், தென்னிந்திய மீனவர்களினாலேயே குறித்த படகுகள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இரண்டு எஞ்ஜின்களைக் கொண்ட குறித்த படகுகளில் 10 பேர் பயணிக்க முடியும் என்பதுடன், பல நாட்கள் கடலில் மீன்பிடியில் ஈடுபடக்கூடியது எனவும் சின்னபாடு மீனவர் சங்கத்தின் தலைவர் ஜேம்ஸன் பெர்ணான்டோ கூறியுள்ளார்.

மேலும், குறித்த மீன்பிடி படகுகளின் எஞ்சின்கள் அண்மையிலேயே அகற்றப்பட்டுள்ளது என்பதனை காண முடிவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இலங்கை கடற்படை மற்றும் உடப்பு பொலிஸார் ஆகியோர் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *