யுத்தம் என்பது விதி அல்ல விதி விலக்கு!

– பஸ்றி ஸீ. ஹனியா
சட்டத்துறை மாணவி
யாழ். பல்கலைக்கழகம்.

யுத்தங்களால் ஆண்டாண்டு காலங்களாக அக்கிரமங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் நாம் இவ்வாறான குற்றங்களைத் தடுத்து மனித வாழ்வை சமாதானமான முறையில் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்பதனை அறிவது மிக முக்கியமானதாகும்.

அந்தவகையிலேயே முந்தைய காலங்களில் இருந்து சட்டத்துக்கமைய யுத்தத்துக்கான முறைகள் பல பின்பற்றப்பட்டு வந்திருக்கின்றன. அதாவது யுத்தம் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பது தொடர்பானதாகும். இருந்தபோதிலும் இவை அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து சர்வதேச ரீதியான யுத்தச் சட்டமானது 1864ஆம் ஆண்டு முதலாவது ஜெனிவா உடன்படிக்கையின்போது உருவாக்கப்பட்டு 12 ஐரோப்பிய நாடுகளினால் பின்பற்றப்பட்டது. பின்னர் சுமார் 85 ஆண்டுகளின் பின்னர் – இரண்டாவது மகா யுத்தத்தின் மிலேச்சத்தனமான அழிவுகளின் பின்னர் 1949ஆம் ஆண்டு முன்னைய உடன்படிக்கையில் இந்தக் காலத்துக்கு ஏற்றால்போல் பரந்து விரிந்த நோக்கங்களுடன் புதிய பரிணாமத்தில் ஜெனிவா உடன்படிக்கை நிறைவேற்றப்பட்டது. அதில் புதிய சட்ட விதிகள் உள்ளடக்கப்பட்டன. இதனை இற்றை வரைக்கும் 196 அரசுகள் அங்கீகாரம் செய்துள்ளன. அவை மோதலில் சண்டையிடாத மக்களைப் பாதுகாக்கின்ற மற்றும் பயன்படுத்தக்கூடிய ஆயுதங்கள் தந்திரோபாயங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. எடுத்துக்காட்டாக 2014ஆம் ஆண்டில் தென் சூடானில் உள்ள பொதுமக்கள் வன்முறையிலிருந்து தப்பித்துப் பாதுகாப்பாகச் செல்ல உத்தரவாதம் அளிக்க இந்த விதிகள் உதவின.
ஓர் அரசு அல்லது அரசு சாரா போராளிக்குழு ஒரு போர்க்குற்றத்தில் குற்றவாளி என்பதை தீர்மானிக்க உள்நாட்டு மற்றும் சர்வதேச நீதிமன்றங்களிலும் யுத்தச் சட்டமானது பயன்படுத்தப்படுகின்றன. போரிடும் தரப்பு சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டால் (தனிநபர், குழு, நாடு அல்லது பார்வையாளரால் ) நாடுகள் விசாரிக்கக் கடமைப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஆனது, 1990ஆம் ஆண்டில் போஸ்னியப் போரின்போது வெகுஜன அட்டூழியங்களைச் செய்த போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்க உதவியது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் செயலகம் ஆனது சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவதற்காக மற்றும் சர்வதேச யுத்த விதிகளுடன் இணங்கி நடப்பதற்காக  பயணத் தடை அல்லது ஆயுதத் தடை போன்ற பொருளாதாரத் தடைகளையும் விதிக்கலாம்.

மாநாடுகளால் கட்டளையிடப்பட்டபடி, இந்தச் சட்டங்களின் பாதுகாவலராக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (ஐ.சி.ஆர்.சி.) சிறப்புப் பங்கு உள்ளது.  ஐ.சி.ஆர்.சி. யுத்தத்தின் பரிணாமத்தை கண்காணித்து அதற்கேற்ப விதிகளைப் புதுப்பிப்பதற்கான பரிந்துரைகளைச் செய்கின்றது.  விதிகள் உறுதிப்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக நெருக்கடிகள் மற்றும் சாத்தியமான மீறல்கள் பற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் விவாதங்களிலும் இது பங்கேற்கின்றது.

போரின் விதிகள்

மாநாடுகளில் பல விதிகள் இருந்தாலும், நடந்துகொண்டிருக்கும் மோதல்களுக்குப் பொருத்தமான ஆறு முக்கியமான கொள்கைகளை நோக்கினோமானால்

1. பொதுமக்கள் குறிவைக்கப்படக்கூடாது

மோதலின்போது பொதுமக்களை வேண்டுமென்றே குறிவைப்பது, பள்ளிகள் அல்லது வீடுகள் போன்ற கட்டடங்கள் மற்றும் நீர் ஆதாரங்கள் அல்லது சுகாதார வசதிகள் போன்ற உட்கட்டமைப்புகளைக் குறிவைப்பது  போர்க்குற்றமாகும். சரணடைந்த அல்லது இனிப் போராட முடியாத ஒரு நபரைக் கொல்வது அல்லது காயப்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. அதேபோல் மற்றொரு நபரை – ஒரு குடும்ப உறுப்பினர் செய்த செயலுக்காக அக்குடும்பத்திலுள்ள இன்னொருவரைத் தண்டிப்பதும் தடை செய்யப்பட்டதாகும்.

தாக்குதல்கள் இராணுவ நோக்கங்களுக்காக மட்டுமே நடத்தப்பட வேண்டும். அதாவது இராணுவத் தளங்கள் மற்றும் இராணுவத்தினர் மட்டும் தங்கியிருக்கும் பகுதிகளிலே தாக்குதல்கள் நடத்தப்பட வேண்டும். மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் அல்லது அதற்கு அருகில் தாக்குதல்கள் நடத்தப்படக்கூடாது.

தாக்குதலில் எதிர்பார்க்கப்படும் ‘தற்செயலான பொதுமக்கள் சேதம்’ எதிர்பார்த்த இராணுவ சேதத்துக்கு ‘அதிகப்படியானது மற்றும் விகிதாசாரமற்றது’ என்றால், சட்டபூர்வமாகத் தாக்குதலை மேற்கொள்ள முடியாது

ஒரு சிவிலியன் கட்டமைப்புகள், எடுத்துக்காட்டாக ஒரு பள்ளி, குறிப்பிட்ட இராணுவ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டால் அது முறையான இலக்காக மாறக்கூடும்.

 2. கைதிகளுக்கு சித்திரவதை அல்லது மனிதாபிமானமற்ற சிகிச்சை வழங்க முடியாது

சித்திரவதை மற்றும் பிற வகையான கொடூரமான, இழிவான அல்லது மோசமான சிகிச்சை வெளிப்படையாகத்  தடைசெய்யப்பட்டுள்ளது.  கைதிகளின் வாழ்க்கை, உரிமைகள் மற்றும் கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும், அவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் கொடுக்கப்பட வேண்டும், வன்முறையிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் தொடர்புகொள்ள அனுமதிக்கப்பட வேண்டும்.

3. மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ உதவியாளர்களைத் தாக்குதல் தடைசெய்யப்பட்டுள்ளது

காயமடைந்தவர்களையும் நோயுற்றவர்களையும் அவர்கள் எந்த மோதலில் இருக்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் கவனித்துக்கொள்ள மருத்துவ உதவியாளர்களுக்கு உரிமை உண்டு,

ஒரு பகுதிகளில் கடமையில் இருக்கும் மருத்துவ மற்றும் உதவித் தொழிலாளர்கள் நடுநிலை வகிப்பதற்கும் மோதலின்போது இரு தரப்பினருக்கும் சேவை செய்வதற்கும் முயற்சி செய்கின்றார்கள். ஆகையால், அவர்கள் போராடும் அனைத்துத் தரப்பினராலும் பாதுகாக்கப்பட வேண்டும். மேலும் காயமடைந்தவர்களையும் நோயுற்றவர்களையும் பராமரிக்க அனுமதிக்க வேண்டும்.

செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறைச் சங்கம் என்பவற்றின் அடையாளங்களான ஒரு சிவப்பு சிலுவை அல்லது சிவப்புப் பிறையைப் போராளிகள் பார்த்தால், அந்த நபர் அல்லது இடம் தாக்குதல் நடத்தப்படக்கூடாது என்பதை அறிந்துகொள்ள வேண்டும்

ஆனால், சட்ட விதிகள் மருத்துவமனைகள் மற்றும் பிற குடிமக்கள் கட்டமைப்புகளுக்கு விதிவிலக்கு அளிக்கின்றன. குறிப்பிட்ட இராணுவ நடவடிக்கைகளுக்கு ஒரு மருத்துவமனை பயன்படுத்தப்பட்டால், அது முறையான இலக்காக மாறக்கூடும்.

 4. பொதுமக்கள் தப்பி ஓடுவதற்குப் பாதுகாப்பான வழியை வழங்குதல்

மோதலில் ஈடுபடும் தரப்புக்கள் சண்டையிடும் பகுதிகளிலிருந்து பொதுமக்களை வெளியேற்ற அனைத்து நியாயமான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். முற்றுகையிடப்பட்ட நகரங்களை விட்டு பாதுகாப்பான இடங்களுக்குப் பொதுமக்கள் தப்பி ஓடுவதை எந்தத் தரப்பும் தடுக்கக்கூடாது.

5. மனிதாபிமான அமைப்புகளை அணுகுவதற்கு இடம் வழங்குதல்

இனி மோதலில் சண்டையிடாத பொதுமக்கள் மற்றும் போராளிகளுக்கு மருத்துவ உதவி, உணவு, நீர் அல்லது தங்குமிடம் என அவர்களுக்குத் தேவையான உதவியைப் பெற உரிமை உண்டு.  இதன் பொருள் என்னவென்றால், மனிதாபிமான உதவிகளை வழங்குவதைக் கட்டுப்படுத்துவது – கடற்படை மற்றும் விமான முற்றுகைகள் மூலம் துறைமுகங்களை மூடுவது அல்லது பொருட்களைப் பறிமுதல் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.  உண்மையில் வேண்டுமென்றே பட்டினியையும் பசியையும் ஏற்படுத்துவது ஒரு போர்க்குற்றமாகும்.

 6. தேவையற்ற அல்லது அதிகப்படியான இழப்பு மற்றும் துன்பத்தை ஏற்படுத்த முடியாது

போரில் பயன்படுத்தப்படும் தந்திரோபாயங்கள் மற்றும் ஆயுதங்கள் ஒரு உறுதியான இராணுவ இலக்கை அடைய விகிதாசாரமாகவும் அவசியமாகவும் இருக்க வேண்டும்.  ஜெனிவா உடன்படிக்கைகளின்படி, இயற்கையிலேயே கண்மூடித்தனமாக இருக்கும் ஆயுதங்களைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக, கண்ணிவெடிகளின் பயன்பாடு தடைசெய்யப்படாத நிலையில் அவை மட்டுப்படுத்தப்பட்டவை. ஏனென்றால் அவை போராளிகள் மற்றும் பொதுமக்கள் இருவரையும் கண்மூடித்தனமாகக் கொலை செய்து பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *