‘I Love You’ பிரான்ஸ் நாட்டவர்கள் அதிகம் பயன்படுத்துவதில்லையாம்!

ஐ லவ் யூ என்ற வார்த்தைகளை பிரான்ஸ் நாட்டவர்கள் அதிகம் பயன்படுத்துவதில்லையாம், உங்களுக்குத் தெரியுமா? தங்கள் துணைக்கு மலர்ச் செண்டுகளையும் பரிசுகளையும் அள்ளி வழங்கும் பிரான்ஸ் நாட்டு ஆண்கள், பிரித்தானியர்கள் அல்லது அமெரிக்கர்களைப்போல மூச்சுக்கு முன்னூறு முறை ஐ லவ் யூ சொல்வதில்லையாம்.

ஆனால், ஐ லவ் யூ சொல்லவில்லை என்பதற்காக அவர்களுக்கு தன் துணை மீது அன்பில்லை என்று பொருள் இல்லை. அப்படியானால், அவர்கள் ஏன் அந்த வார்த்தைகளை அபூர்வமாக பயன்படுத்துகிறார்கள்? அதற்கு காரணம், பிரெஞ்சு மொழியில் காதல் என்பதற்கு தனியாக வார்த்தை இல்லையாம். like என்பதற்கும், love என்பதற்கும் அவர்களுக்கு ஒரே பதம்தான் உள்ளதாம்.

ஆகவே, தனக்கு கால்பந்து பிடிக்கும் என்பதற்கும் குழந்தையைப் பிடித்திருக்கிறது என்பதற்கும் ஒரே வார்த்தையைத்தான் அவர்கள் பயன்படுத்தவேண்டியுள்ளது.

எனவேதான், வெறும் வார்த்தைகளால் மட்டும் அன்பைக் காட்டாமல் செயல்களால் அன்பைக் காட்டுவதுண்டாம் அவர்கள். தன் துணைவியின் சூட்கேசை வாங்கி சுமப்பதிலிருந்து அவர்களுக்கு சாக்லேட் கொடுப்பது வரையிலான செயல்களால் தங்கள் அன்பைக் காட்டுகிறார்களாம் அவர்கள்.

அத்துடன், அணைத்துக்கொள்ளுதல், முத்தமிடுதல் ஆகிய செயல்களாலும் பிரான்ஸ் நாட்டவர்கள் தங்கள் அன்பைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

பாரீஸுக்குப் போனால், சுற்றி நின்று சுற்றுலாப்பயணிகள் கரவொலி எழுப்பினாலும், கண்டுகொள்ளாமல் முத்தமிடும் பிரெஞ்சு மக்களின் பிரெஞ்சு முத்தம் உலக அளவில் எவ்வளவு பிரபலம் என்பதை அறியாதவர்கள் இருக்க முடியுமா என்ன!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *