ஆசியாவின் பிறிதொரு சிரியாவைப் போன்று மாறப்போகும் இலங்கை!

நல்லாட்சி அரசாங்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட விலை சூத்திரத்தை தொடர்ச்சியாக பின்பற்றியிருந்தால் எரிபொருள் விவகாரத்தில் சர்ச்சைகள் ஏற்பட்டிருக்காது.

சுதந்திரத்தின் பின்னர் நாடு பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் இலங்கையர்கள் என்ற ரீதியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படாவிட்டால் இலங்கை ஆசியாவின் பிறிதொரு சிரியாவைப் போன்று மாறிவிடும் என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

கொழும்பில் சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

நான் நிதியமைச்சராக பதவி வகித்த போது அறிமுகப்படுத்திய எரிபொருள் விலை சூத்திரத்தை தொடர்ச்சியாக பின்பற்றியிருந்தால் பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களை உபயோகிக்கும் சகல மக்களுக்கும் 2 பில்லியன் டொலர் வரை நன்மையைப் பெற்றிருக்கக் கூடும்.

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கும் போது உள்நாட்டில் அதன் விலையை அதிகரிப்பதற்கும் , உலக சந்தையில் குறைவடையும் போது உள்நாட்டில் மீண்டும் விலையைக் குறைப்பதற்கும் ஏற்ற வகையில் உலகின் பல நாடுகளும் பின்பற்றும் வகையிலேயே இந்த விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இன்றும் இதனைப் பின்பற்றி வருகின்றன. இந்நாடுகளில் நாளாந்தம் இந்த சூத்திரத்திற்கு ஏற்ப எரிபொருள் விலை முகாமை செய்யப்படுகிறது. இலங்கையில் ஆரம்பகட்டமாக மாதாந்தம் இதனை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நான் நிதி அமைச்சு பதிவியிலிருந்து விலகும் போது எரிபொருள் விலை உலக சந்தையில் 63 டொலராகக் காணப்பட்டது. அதன் பின்னர் 2020 இல் முழுநாடும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் எரிபொருள் விலையானது உலக சந்தையில் 23 டொலராக குறைவடைந்தது. எனினும் இதன் பயனை அரசாங்கம் மக்களுக்கு வழங்கவில்லை.

கடந்த ஆண்டு உலக சந்தையில் இவ்வாறு பாரியளவில் எரிபொருள் விலை குறைவடைந்தமையால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 400 பில்லியன் ரூபா வருமானம் கிடைக்கப் பெற்றது.

அதன் பின்னர் கடந்த 3 மாதங்களாகவே எரிபொருள் விலை மீண்டும் அதிகரித்தது. இன்று நாடு பாரதூரமான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.

சுதந்திரத்தின் பின்னர் நாடு பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் எதிர்கட்சி அல்ல. ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் சட்ட விதிகளையும் பாதுகாக்கும் பாரிய சக்தியே அவசியமாகும். அவ்வாறான நிலைக்கு சென்றால் மாத்திரமே நாட்டை பாதுகாக்க முடியும். அவ்வாறில்லை என்றால் எதிர்காலத்தில் இலங்கை ஆசியாவில் பிரிதொரு சிரியாவைப் போன்று ஆகிவிடும் என்ற அச்சம் எழுகிறது.

எனவே இது குறித்து சிந்தித்து கட்சி பேதமின்றி செயற்பட வேண்டும். முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்திற்கு செல்வது சிறந்த தீர்மானமாகும்.

ஆனால் அவரால் தனித்து இந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. எனவே நாம் அனைவரும் இலங்கையர்கள் என்ற ரீதியில் ஒன்றிணைந்து நாட்டை பாதுகாப்பதற்கு இலங்கை இன்னொரு சிரியாவாக உருவாகிவிடாமல் தடுக்க வேண்டும் என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *