கடல் சூழலில் ஏற்பட்ட பாதிப்பு இன்னும் 20 வருடங்களுக்கு நீடிக்கும்!

எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ல் என்ற கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் இலங்கையின் கடல் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு இன்னும் 20 வருடங்களுக்கு நீடிக்குமென சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்
இதன்படி ,குறித்த சேதங்களை டொலர்களிலும் மதிப்பிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மஹிந்த அமரவீர இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நாங்கள் ஏற்கனவே நாடு முழுவதும் கரை ஒதுங்கியுள்ள பிளாஸ்டிக் துகள்களின், பெரிய குவியல்களை சேகரித்திருக்கிறோம்.

அதில் ,எத்தனை மில்லியன் துகள்களை மீன்கள் சாப்பிட்டுள்ளன என்பது எங்களுக்குத் தெரியாது.

கடற்கரைகளில் குவிந்துள்ள பிளாஸ்டிக் துகள்கள் சேகரிக்கப்பட்டு, 40 கொள்கலன்களில் சேமிக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் நாட்டிற்கு எவ்வளவு அதிகமான பிளாஸ்டிக் இறக்குமதி செய்யப்படுகிறது என்பதை நாம் இப்போது கற்பனை செய்து கொள்ளலாம். 10% க்கும் குறைவான பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யப்பட்டு மீதமுள்ளவை சுற்றுச்சூழலுக்கு வெளியிடப்படுகின்றன.

ஆகவே எக்ஸ் பிரஸ் கப்பல் மூழ்கியதால் ஏற்பட்ட சேதம், ஈடு செய்யப்பட வேண்டும் என்பதுடன் பொறுப்பான அனைவரையும் அடையாளம் கண்டு தண்டிக்க வேண்டும்.

மேலும் ,சி.ஐ.டி, ஜனாதிபதி மற்றும் நீதி அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் இது குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஏற்கனவே இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *