யுத்தத்தால் இழப்பது அதிகம்; கிடைப்பது குறைவு!

– பஸ்றி ஸீ. ஹனியா
சட்டத்துறை மாணவி
யாழ். பல்கலைக்கழகம்.

லகின் முதல் மனிதன் தோன்றி இரண்டாவது மனிதன் தோன்றிய உடனே யுத்தம் என்ற விடயம் ஆரம்பமாகிவிட்டது. மனிதகுல வரலாற்றில் யுத்தம் இல்லாத காலப்பகுதியே இல்லை என்று கூறலாம்.

எண்ணற்றோரின்  வாழ்க்கையை  அழித்தொழித்து சாதாரண வாழ்க்கையைக்கூட சாத்தியமற்றதாக்கி மனித வாழ்க்கையையே ஆபத்தான நிலைக்கு உள்ளாக்குவதில் இந்த யுத்தம் பெரும் பங்கு வகிக்கின்றது. இவ்வாறான யுத்தங்கள் நாட்டுக்குள்ளே ஏற்படுவதை விட சர்வதேச மட்டத்தில் ஏற்படுவது சர்வதேச சமூகத்துக்கு ஒரு சாபக்கேடாகும். உலகையே கதிகலங்க வைக்கின்ற ஒரு செயற்பாடாகவே மாறுகின்றது.

இதற்கு ஆதாரமாக நாம் இரண்டு உலக மகா யுத்தங்களை அனுபவித்து இருக்கின்றோம். அவ்வாறான யுத்தங்களின் பின்னர் உலகில் ஏற்பட்ட அழிவுகளைப் பார்த்து யுத்த சூழ்நிலையானது உலகளாவிய ரீதியில் குறைந்து அல்லது இல்லாமலே போய் இருக்க வேண்டும். ஆனால், நிலைமை தலைகீழானது.

யுத்தம் என்றால் என்ன?

யுத்தம் என்றால் என்ன என்பதற்குப் பல அறிஞர்கள் பலவிதமான கருத்துக்களைக் கூறி இருந்தபோதும் நாம் இலகுவாக யுத்தமானது பகைமை உணர்வுச் செயற்பாடு எனலாம். எல்லாப் பகைமை உணர்வு செயற்பாடுகளும் யுத்தமாக மாறுவதில்லை. ஆனால், ஒரு யுத்தத்தின் அடிப்படை பகைமை உணர்வு செயற்பாடுகளாக இருக்கும் அதாவது பகைமை உணர்ச்சிகள் இன்றி யுத்தங்கள் ஏற்படாது.

இரு குழுக்களுக்கிடையில் ஏற்படும் பகைமை உணர்வு ஆனது சமாதானமாக தீர்க்காமல் தவறும் பட்சத்தில் அவை யுத்தமாக மாறும் நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகின்றது. பொதுவாக யுத்தம் என்பது நம் அனைவரினதும் மனதிலும் ஆயுத மோதல் என்ற வடிவிலேயே பதிந்து இருக்கின்றது. ஆனால், இது தவிர பொருளாதார யுத்தங்கள், கெடுபிடி யுத்தங்கள், பரம்பரை யுத்தங்கள் என்று பல இருக்கின்றன.

ஒருதலைப்பட்சமாக ஒரு அரசின் மீது பகைமை உணர்வு கொண்டு தாக்குவது யுத்தமாகக் கருத முடியாது. மாறாக இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட அரசுகள் பகைமை உணர்வோடு கொண்ட தாக்குதல்களை யுத்தங்கள் என்று சட்டரீதியான அந்தஸ்து பெறுகின்றது.

யுத்தத்துக்கான காரணங்கள்

யுத்தமானது ஏதாவது ஓர் அதிரடிக் காரணத்தாலேயே உடன் நிகழ்கின்றது. ஆனால், அந்த அதிரடிக் காரணமே ஒட்டுமொத்த காரணங்களாக இருப்பது குறைவு.

மேலும், ஒரு சில காரணங்களுக்காக அன்றி பல காரணங்களின் பின் விளைவாகவே யுத்தங்கள் ஏற்படுகின்றன.

யுத்தங்கள் ஏற்படப் பல காரணங்கள் செல்வாக்குச் செலுத்தி இருந்தபோதும் அடிப்படைக் காரணங்களை உற்று நோக்குவது அவசியமாகும்.

உளவியல் காரணிகள்

இயல்பாகவே ஒவ்வொரு மனிதனும் தன்னைப் பற்றி யோசிப்பது அதிகம். இவ்வாறான யோசனையானது ஒரு சில நேரங்களில் பிறரோடு பகைமையைத் தூண்டி விடுகின்றது. இவ்வாறு அடிப்படை இயல்பிலேயே சண்டையிடும் உள்ளுணர்வைக் கொண்டவனாக மனிதன் இருக்கின்றான். இவ்வாறான உணர்வானது யுத்த நடத்தையில் பெரிதும் செல்வாக்குச் செலுத்துகின்றது.

மேலும், நாம் அதிகம் ஈடுபாடு கொண்டிருக்கும் ஆட்சியாளர், பரம்பரை அல்லது பிடித்தமான நபருக்கு ஏற்படும் பகைமை உணர்வுகூட என் மேல் செல்வாக்குச் செலுத்தி யுத்தம் உருவாவதற்கான கட்டாய சூழ்நிலையை வழங்கி வருகின்றது.

பொருளாதாரக் காரணங்கள்

பெருமளவான யுத்தங்களுக்கு அடிப்படைக் காரணமாகவே பொருளாதார காரணங்கள் காணப்படுகின்றன.

பொருளாதார ஏற்றத்தாழ்வு ஏற்பட்ட வர்க்கங்களின் யுத்தங்களாலேயே அரசு உருவானதாக இன்றைக்கு வரைக்கும் மார்க்சியவாதிகள் நம்புகின்றனர்.

கைத்தொழில் துறையில் அரசுகள் முன்னேறி  பொருளாதார வளர்ச்சி அடைந்து தமது அதிகாரங்களை வலுப்படுத்தி பிற அரசுகளுக்கு அச்சுறுத்தலை விடுக்கின்றன.

நாடுகளுக்கிடையிலான பகைமை உணர்வானது பொருளாதாரக் காரணிகளால் ஏற்படும். ஆனால், அவைகளால் மாறக்கூடியவை மாறாது நிலைத்து நிற்கும் காரணங்கள் பாரிய பொருளாதார மற்றும் மனித அழிவு சேதங்களை உருவாக்கி விடுகின்றன.

கலாசார சித்தாந்தக் காரணிகள்

கலாசாரங்களை அடிப்படையாகக் கொண்டு ஏற்படுகின்ற யுத்தங்கள் பொதுவாக நீண்டகால வீச்சைக் கொண்டவையாகக் காணப்படுகின்றன. உதாரணமாக இந்திய – பாகிஸ்தான் யுத்தமானது  இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான மோதலாகக் காணப்படுகின்றது. மேலும் அரபு – இஸ்ரேல் யுத்தமானது முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையிலான மோதலாகக் கருதப்படுகின்றது.

மேலும், சித்தாந்த காரணங்களாக முதலாம், இரண்டாம் உலகப் போர்களையும் நாம் எடுக்கலாம். இவை ஜனநாயக சித்தாந்தத்துக்கும் சர்வாதிகார சித்தாந்தத்துக்கும் ஏற்பட்ட போர்களாகும். மேலும் சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையிலான பனிப்போர் சித்தாந்தங்களால் உருவாக்கப்பட்ட யுத்தமாகவே பார்க்கப்படுகின்றது.

அரசியல் காரணங்கள்

அரசுகளுக்கிடையில் அரசியல் இலாபங்களுக்காக அரசியல் யுத்தங்கள் இடம்பெறுகின்றன. தேசிய நலனில் அதிகம் உந்தப்பட்டு இவ்வாறான மோதல்கள் ஏற்படுகின்றன.

இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பிரச்சினைகளில்கூட அரசியல் காரணங்கள் இணைந்திருக்கின்றன.

இலங்கையில் ஏற்பட்டிருந்த உள்நாட்டு யுத்தத்தில்கூட அரசியல் காரணங்கள் இணைந்திருக்கின்றன. ஆகவேதான் யுத்தத்துக்கு வழிவகுக்கும் பல காரணங்களில்  அரசியல் காரணமானது இன்றியமையாத இடத்தைப் பெறுகின்றது.

சர்வதேச முறைமை

சர்வதேச முறைமையானது பெருமளவில் யுத்தத்தை விரும்புவதில்லை. யுத்தத்தைத் தடுப்பதில் சர்வதேச முறைமையானது வெற்றியும் தோல்வியும் கண்டுள்ளது.

யுத்தத்தை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதற்கான மனிதாபிமானச் சட்டத்தையும் சர்வதேச முறைமை உருவாக்கி இருக்கின்றது. அவ்வாறான மனிதாபிமானச் சட்டத்திலேயே யுத்தமொன்று எவ்வாறு நடைபெற வேண்டும், எத்தனை முறை தாக்க முடியும், எவ்வாறான ஆயுதங்களைப் பயன்படுத்த முடியும் போன்ற விடயங்கள் தெளிவாகக்  குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

இதற்கு மேலதிகமாக அவ்வாறு மனிதாபிமானச் சட்டம் பின்பற்றப்படவில்லையெனில் அதைத் தண்டிக்கும் அதிகாரம் ஐக்கிய நாடுகள் சபையின் சபையின் சர்வதேச நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. உதாரணமாக இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தத்துக்கு சர்வதேச நீதிமன்றத்தின் முன் அரசு பதில் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பலஸ்தீன் – இஸ்ரேல் இடையிலான யுத்தத்தில்கூட பலமுறை சர்வதேச சமூகம் தலையிட்டு ஒப்பந்தங்கள் மூலம் யுத்தத்தை நிறுத்துவதற்கு முயற்சிசெய்து கொண்டேதான் இருக்கின்றது.

யுத்தத்தின் வகைகள்

வரலாற்றில் ஏற்பட்ட பல்வேறு யுத்த முறைகளை வைத்து யுத்தங்கள் வகைப்படுத்தப்படுகின்றன.

முழு யுத்தம்

நவீன யுத்தமானது முழு யுத்தம் என்றே அழைக்கப்படுகின்றது. அதாவது ஆயுதப்படையுடன் நின்று விடாது மக்களும் சேர்ந்து அழிக்கப்படும் யுத்தமே இது. ஒரு அரசிலிருந்து இன்னொரு அரசைத் தாக்கும்போது சர்வதேச சட்டங்களுக்கு அப்பால் மக்களையும் இலக்குவைத்து தாக்குவது முழு யுத்தம் ஆகும்.

அணு யுத்தம்

அணு யுத்தம் மட்டுப்படுத்தப்பட்டவையாகவும் சிலவேளை மட்டுப்படுத்தப்படாதவையாகவும் இடம்பெறுகின்றன. இந்த யுத்தங்கள் எதிரிகளைப் பூரணமாக அளிப்பதை நோக்கமாகக் கொண்டு நடந்து வருகின்றன. இதனால் ஏற்படும் தாக்கம் மிகப்பெரியது  என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. மேலும் அணு ஆயுதங்கள் சர்வதேச சட்டத்தால் முற்றுமுழுதாகத் தடுக்கப்பட்ட யுத்தமாகும்.

கொரில்லா யுத்தம்

வரலாற்றுக் காலத்தில் ஒழுங்குபடுத்தப்படாத இராணுவத்தைக் கொண்டும் போதிய அளவு பலம் எதுவும் இன்றி இரகசிய இடங்களில் பதுங்கி இருந்து தாக்கும் இடங்கள் கொரில்லா யுத்தம் எனப்படுகின்றது. இது தந்திரத்தின் மூலமே நடத்தப்படுகின்றது.

சிவில் யுத்தம்


சிவில் யுத்தம் என்பது ஓர் அரசுக்குள் இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட எதிரான குழுக்கள் நடத்தும் யுத்தமாகும். இது சட்டரீதியான அரசு ஒன்றை எதிர்த்துப் போராடி அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சியாக அமைகின்றது. உலகில் இருக்கும் நாடுகளில் அதிகமான நாடுகள் இந்த யுத்தத்தைத் சந்தித்தான் இருக்கின்றது. இலங்கைகூட இதில் பெருமளவு அனுபவங்களைக் கொண்டிருக்கின்றது.

யுத்தம் என்பன காலாகாலமாக அரங்கேறிக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்வாகத்தான் காணப்படுகின்றது. ஆனால், அதனால் ஏற்படும் விளைவுதான் இன்று வரைக்கும் நிகர் செய்யப்படாமல் இருக்கின்றது.

யுத்தங்களில் ஆயுதப் படைகள் மட்டும்தான் நின்று போராடுகின்றன என்றால்கூட ஆயுதப்படைகள்  கூட மனிதர்கள்தானே . பகை உணர்வு என்ற விடயம் எளிதில் தோன்றி விடலாம். ஆனால், அதனால் ஏற்படும் அழிவுகள் என்றைக்குமே  நிரப்ப முடியாதவை. எந்தவொரு பிரச்சினைக்கும் யுத்தங்கள் தீர்வாக அமைந்து விடாது. யுத்தங்கள் மூலம் சேதங்கள் மட்டுமே வருமே தவிர நிரந்தர தீர்வுகள் வந்துவிடாது. ஓர் அரசின் கடமை தமது மக்களுக்கு நல்வாழ்வை அமைத்துக்கொடுப்பதாகும். அதைவிடுத்து உயிரை மாய்த்து அமைக்கப்படும் வாழ்வானது எற்றைக்கும் பலன் தராத ஒன்றாகும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *