கொரோனா மூளையை சீர்குலைத்து வடிவத்தையே மாற்றி விடுகிறதாம்!


கொரோனா நுரையீரலை பாதிக்கும் நோயாக மட்டுமின்றி, உடலின் பல பாகங்களையும் சேதப்படுத்துவது அடுத்தடுத்த ஆய்வுகளில் உறுதிபடுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது கொரோனா வைரஸ் மூளை, சிறுநீரகங்களை தாக்கி, அவற்றின் வடிவத்தையே சீர்குலைப்பதாக புதிய ஆய்வில் அதிர்ச்சி  தகவல் வெளியாகி இருக்கிறது. கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களுக்கு தோல் அரிப்பு, மூளை வீக்கம், தசைக் கோளாறுகள் போன்ற பாதிப்புகள் ஏற்படும் என முந்தைய ஆய்வு முடிவுகள் கூறின. அதே சமயம், கொரோனாவின் அடுத்தடுத்த அலைகளால் மனச்சோர்வு, மன நலக் கோளாறுகள் ஏற்படும் என பல்வேறு ஆரம்பகட்ட ஆய்வுகளில் கூறப்பட்டன.

இது குறித்து உறுதிபடுத்த உளவியல் மற்றும் நரம்பியல் துறைகளைச் சேர்ந்த டாக்டர்கள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் குழுவாக இணைந்து, மூளையில் கொரோனாவின் தாக்கம் குறித்து கிடைக்கின்ற தகவல்களை திரட்டி புதிய ஆய்வு மேற்கொண்டனர். சுமார் 30 நாடுகளைச் சேர்ந்த 1 லட்சத்து 5 ஆயிரம் பேர்களின் மருத்துவ ஆவணங்களை திரட்டி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், மனச்சோர்வு மற்றும் பதற்றம் போன்ற சில முக்கியமான மன நோய்கள் கொரோனாவில் இருந்து குணமான 25 சதவீத மக்களுக்கு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வாசனை இழப்பு, சோர்வு, சுவை அறியாமல் போதல் போன்றவை பொதுவான பாதிப்புகளாக உள்ளன. இவை 30 சதவீத பேர்களுக்கு ஏற்படுகிறது.

அதேசமயம், மூளை அழற்சி, நோய் எதிர்ப்பு அமைப்பை தாக்கும் குய்லின்-பார் நோய்குறி, பக்கவாதம் ஆகியவை அரிதாகவே நிகழ்கின்றன. இவற்றை விட மிக முக்கியமானது. மூளை மற்றும் சீறுநீரகங்களை தாக்கும் கொரோனா, அவற்றின் வடிவமைப்பையே மாற்றி விடுவதாக இந்த ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. கொரோனால் கடுமையாக பாதித்து உயிர்  தப்பி வந்தவர்களிடம் இந்த பாதிப்புகள் தென்படுகின்றன. மேலும், பக்கவாதம் போன்ற நரம்பியல் பிரச்னைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் 2 சதவீதமும் பேருக்கு மட்டுமே ஏற்பட்டுள்ளது. ஆனாலும், மூளை மற்றும் மனநல பாதிப்புகள் கொரோனாவிடம் இருந்து விதிவிலக்கல்ல. பதற்றம் மற்றும் மனநல கோளாறுகளே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும்பாலும் ஏற்படும் பிரச்னையாக உள்ளது.

கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையிலோ அல்லது அவசர சிகிச்சை பிரிவுகளிலோ அனுமதிக்கப்பட்டவர்களுக்கு மன நல பாதிப்புக்கான அதிக அபாயம் உள்ளது. கொரோனா வைரஸ் நேரடியாக மூளையில் தாக்கத்தை செலுத்துவதும், பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதலான மன அழுத்தம் இருப்பதும் இதற்கான ஒருங்கிணைந்த காரணங்களாக உள்ளன. அதுமட்டுமின்றி, கொரோனாவால் எந்தளவுக்கு ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தாரோ அந்தளவுக்கு அவர்களுக்கு மனநலம் அல்லது மூளை சார்ந்த பிரச்னைகளும் ஏற்படுவதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதேசமயம் இதுதொடர்பாக இன்னும் அதிகபடியான ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதாகவும் ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் மேலும் குறைகிறது 1.20 லட்சம் பேர் பாதிப்பு
* கடந்த 58 நாட்களில் இல்லாத அளவுக்கு, நாட்டில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 529 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 2 கோடியே 86 லட்சத்து 94 ஆயிரத்து 879 ஆக அதிகரித்துள்ளது.

* கடந்த 24 மணி நேரத்தில் 3,380 பேர் பலியாகி உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 3 லட்சத்து 44 ஆயிரத்து 82 ஆக உள்ளது.
* சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 15 லட்சத்து 55 ஆயிரத்து 248 ஆக சரிந்துள்ளது.
* குணமடைவோர் விகிதம் 93.08 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியா, அமெரிக்கா, சீனாவில் 60% தடுப்பூசி விநியோகம்
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கேப்ரியேசஸ் நேற்று அளித்த பேட்டியில், ‘உலகம் முழுவதும் இதுவரை 200 கோடி தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இதில் 75 சதவீத அளவு தடுப்பூசிகள் 10 நாடுகளில் மட்டும் போடப்பட்டுள்ளன. குறிப்பாக, 60 சதவீத தடுப்பூசிகள் அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய மூன்று நாடுகளில் விநியோகிக்கப்பட்டுள்ளன. அந்நாடுகள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து பயன்படுத்தி உள்ளன. கோவாக்ஸ் திட்டம் தடுப்பூசியை உலக நாடுகளிடையே பகிர்ந்தளிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. தனி நபர் வருமானம் குறைவாக உள்ள நாடுகளில் சுமார் 0.5% தடுப்பூசிகளே சென்றடைந்துள்ளன.  இன்னும் பல நாடுகளில் சுகாதாரப் பணியாளர்களுக்கும், வயதானவர்களுக்கும் தடுப்பூசிகள் போடப்படவில்லை. எனவே, தடுப்பூசிகள் விரைவாக விநியோகம் செய்வதை நாம் அதிகரிக்க வேண்டும்,’ என கூறி உள்ளார்.

* மார்க்கெட் திறப்பு டெல்லியில் தளர்வு
டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்ததைத் தொடர்ந்து 2ம் கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, நாளை முதல் சந்தைகள், வணிக வளாகங்கள் ஒற்றப்படை- இரட்டைப்படை எண்கள் அடிப்படையில் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில்கள் 50 சதவீத பயணிகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தனியார் அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம் என அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

* தனியாருக்கு தடுப்பூசி விற்ற பஞ்சாப் அரசு
மாநில அரசுகள், தனியார் மருத்துவமனைகள் நேரடியாக மருந்து நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசி கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளது. இதன்படி, ரூ.400 விலையில் 1.40 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளை வாங்கிய பஞ்சாப் மாநில அரசு, அதை ரூ.1000, ரூ.1500 என்ற விலைகளில் தனியார் மருத்துவமனைகளுக்கு விற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்த நிலையில், பஞ்சாப் அரசு உடனடியாக தடுப்பூசிகளை திரும்ப பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

* பித்து பிடித்த மத்திய அரசால் கொரோனா கோரதாண்டவம்
நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணரான அமர்த்தியா சென் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘‘இந்தியா தனது மருந்து உற்பத்தி வலிமையாலும், அதிக நோய் எதிர்ப்பு சக்தியாலும் கொரோனா பெருந்தொற்றை எதிர்த்து செயல்படுவதில் சிறந்த இடத்தில் இருந்தது. ஆனால், குழப்பமான மத்திய அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தாமல், தனது செய்கைகளுக்கு நல்ல பெயரை தேடுவதில் கவனம் செலுத்தியது. உலகம் முழுக்க தனது இமேஜை உயர்த்துவதிலேயே கவனம் செலுத்திய பித்து பிடித்த அரசாங்கம், சொந்த நாட்டு மக்களை காப்பாற்றத் தவறி விட்டது. அதனால்தான் கொரோனா கோரதாண்டவமாடி உள்ளது,’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *