கணவரிடம் ஊருக்கு போவதாக கூறி இன்னொரு திருமணம் செய்துக் கொண்ட மனைவி!

கணவரிடம் ஊருக்கு போவதாக சொல்லி இன்னொரு திருமணம் செய்துக் கொண்ட மனைவியை நண்பன் மூலம் கண்டுபிடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

சீனாவின் இன்னர் மங்கோலியா பகுதிக்குட்பட்ட பையன்னூர் நகரைச் சேர்ந்தவர் யின் செங். 35 வயதான இவருக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்த அவரது பெற்றோர்கள்,  மகனுக்காக நீண்டநாட்களாகவே வரன் தேடி வந்தார்கள். ஆனால், சீனாவில் பெண்களை விட, ஆண்கள் அதிகம் என்பதால், பெண் கிடைப்பது அரிய விஷயமாக இருந்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் தேடியும் பெண் கிடைக்காத நிலையில், யின் செங், திருமண வரன் பார்க்கும், லீ என்பவரின் உதவியை நாடியுள்ளார். அப்போது லீ ஏற்கனவே திருமணம் ஆன நானா என்ற பெண் ஒருவர் இருப்பதாகக் கூறியுள்ளார். அவர் நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும், நல்ல குணமுடைய பெண் என்றும், சில காரணங்களால் முதல் திருமணம் தோல்வியில் முடிந்ததாகவும் கூறியுள்ளார்.

இதை எல்லாம் கேட்ட யின் செங், திருமணத்திற்குப் பெண் தேடியே வெறுத்துப் போன நிலையில், லீ சொன்ன நானா திருமணம் ஆன பெண்ணாக இருந்தாலும் பரவாயில்லை, திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு யின் செங் வந்துள்ளார். அதன் பின் நானாவை பார்த்த யின் செங் மற்றும் அவரது பெற்றோருக்கும் அவரை பிடித்துவிட, நானாவின் பெற்றோரைச் சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால், மணமகளின் ஊரில் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்றுவருவதால் அவரது பெற்றோரை தற்போது சந்திக்க முடியாது. பாலம் கட்டும் நிறுவனம் நிலங்களுக்கு குடும்ப உறுப்பினர்களை அடிப்படையாகக் கொண்டு இழப்பீடு வழங்கிக்கொண்டு இருப்பதாகவும், திருமணம் செய்துகொண்டால் இழப்பீடு பெற முடியாது என்றும் கூறியுள்ளார். இதனை நம்பிய யின் செங்யின் குடும்பம் அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இதையடுத்து, அவர்கள் இருவருக்கும் எளிய முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது, நானாவுக்கு வரதட்சணையாக 17 லட்சம் ரூபாயும், நகைகள் மற்றும் திருமண பரிசுகள் போன்றவை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இவர்களின் திருமணம் பதிவு செய்யப்படவில்லை. இந்நிலையில், திருமணம் செய்து கொண்ட நானா, பெற்றோரைப் பார்ப்பதற்காகச் செல்வதாகக் கூறி சென்றுள்ளார்.

ஆனால் அதன் பின்னர் அவர் யின் செங்கை தொடர்பு கொள்ளவும் இல்லை. நானா சென்ற நீண்ட நாட்கள் ஆன நிலையில் அவர் மீண்டும் திரும்பி வரவும் இல்லை. யின் செங் பலமுறை மொபைலில் அழைக்க முயன்றும் நானா அவரது அழைப்பையும் ஏற்கவில்லை. இதனால் யின் செங் மிகுந்த வேதனையிலிருந்த நிலையில், ஒரு நாள் தனது நண்பருடன் அமர்ந்து சமூகவலைத்தளத்தில் வீடியோகளை பார்த்துக் கொண்டு இருந்துள்ளார்.

அப்போது ஒரு திருமண வீடியோ ஒன்றைப் பார்த்த அவரது நண்பர், இது உன்னுடைய மனைவி போல இருக்கிறார் என அந்த வீடியோவை காட்டியுள்ளார். அந்த வீடியோவை பார்த்த யின் செங் இது எனது மனைவியே தான் என அதிர்ச்சியில் உறைந்து போனார். இதையடுத்து ஜிக்சியாவோவுக்கு சென்று விசாரித்தப்போது வீடியோவில் இருப்பது நானாதான் என்பது உறுதியானது. அதன்பின்னர் யின் செங் காவல்நிலையத்தில் புகார் அளித்த பின்னர் தான் தனது மனைவி குறித்து பல்வேறு தகவல்கள் தெரிய வந்தது. அதில் நானாவும் லீயும் இணைந்து திருமணம் செய்துகொள்ள விரும்பும் ஆண்களை குறிவைத்து மிகப் பெரிய மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

மோசடி கும்பலில் உள்ள 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், இது போன்ற திருமண மோசடி மூலம் இரண்டரை கோடி ரூபாய் வரை சுருட்டியுள்ளது தெரியவந்தது. இதனால் அவர்களிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *