கொரோனாவால் 70 வருட லக்கேஜ் நிறுவனமான WITCO மூடப்படுகிறது!

இந்தியாவின் முன்னணி பேக் மற்றும் லக்கேஜ் தயாரிப்பு நிறுவனமான விட்கோ, கொரோனா தொற்று மூலம் அதிகளவிலான வர்த்தகத்தை இழந்துள்ளது. குறிப்பாகச் சர்வதேச போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளதால் தன்னால் வர்த்தகத்தைத் தொடர முடியாது என்று தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

வர்த்தகத்தை மூடுவது என்பது சாதாரண விஷயமில்லை, ஆனால் கொரோனா மூலம் வர்த்தகத்தைத் தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளோம். இதனாலேயே வர்த்தகத்தை முழுமையாக மூட முடிவு செய்துள்ளோம். எங்கள் நிறுவனத்திற்கு 65 ஆண்டுக் காலமாக உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி என விட்கோ (WITCO) தெரிவித்துள்ளது.

விட்கோ நிறுவனம்
விட்கோ நிறுவனம் சென்னையில் 10 கடைகளையும், திருச்சி, கோழிக்கோடு, பெங்களூர், கொச்சி ஆகிய நகரங்களில் தனது வர்த்தகத்தைச் செய்து வருகிறது. பேக் மற்றும் லக்கேஜ் விற்பனையில் சிறந்து விளங்கும் இந்நிறுவனம் சென்னையில் சுமார் 65 ஆண்டுக் காலம் இயங்கி வருகிறது.

விட்கோ ஆதிக்கம்
ஒரு காலத்தில் சென்னையில் மொத்த பேக் விற்பனை சந்தையில் சுமார் 60 சதவீதத்தைத் தனது ஆதிக்கத்தில் வைத்திருந்த விட்கோ 1950ல் சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியில் துவங்கப்பட்டது. ஆரம்பக்கட்டத்தில் ஆடம்பர பேக் பிரிவில் கொடிகட்டிப் பறந்த நிறுவனம் இது.

1950 முதல் சென்னையில்
1950ல் இந்நிறுவனத்தை உருவாக்கும் போது West India Plastic Trading Co. என்ற பெயரில் துவங்கப்பட்டு, காலப்போக்கில் விட்கோ (WITCO) பெயர் சுருக்கமானது. இந்நிறுவனம் பிளாஸ்டிக், பயணத்திற்குத் தேவையான பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்து வருகிறது.

முன்னணி பிராண்ட் உடன் கூட்டணி
மேலும் காலத்திற்கு ஏற்ப டிராவல் பேக், லேப்டாப் பேக், ஸ்கூல் பேக், ஹேண்ட் பேக் ஆகியவற்றை விற்பனை செய்கிறது. இதுமட்டும் அல்லாமல் இந்நிறுவனம் சாம்சோனைட், டெல்சே, அமெரிக்கன் டூரிஸ்டர், கேஸ் லாஜிக், நைக், பூமா, விஐபி, ஸ்கைபேக்ஸ், பேக்இட், ஹைய்டிசைன், வைல்டுகிராப்ட் ஆகிய நிறுவன தயாரிப்புகளையும் விற்பனை செய்கிறது.

ஈகாமர்ஸ் விற்பனை
இதுமட்டும் அல்லாமல் அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஈகாமர்ஸ் தளத்துடன் இணைந்து அனைத்து விதமான போக்குகளை விற்பனை செய்து வருகிறது. டிவிட்டரில் பலர் இந்நிறுவனம் மூடுவதைக் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளனர். பலர் தங்களது பழைய நினைவுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

கொரோனாவும்.. சென்னையும்..
பிரிட்டனில் கொரோனா தொற்றுக் காரணமாக வர்த்தக இழப்பைச் சமாளிக்க முடியாமல் பல பழமையான நிறுவனங்கள் மூடப்பட்டதைப் போல் தற்போது இந்தியாவில், அதுவும் நம்முடைய சென்னையில் உருவான ஒரு நிறுவனம் 65 வருடங்களுக்குப் பின் மூடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *