இரவில் எல்லா ரத்தமும் கறுப்பே 2021 க்கான புக்கர்
விருது பெற்ற நாவல்!

2021ம் ஆண்டுக்கான சர்வதேச புக்கர் விருது நேற்று அறிவிக்கப்பட்டது. ‘இரவில் எல்லா ரத்தமும் கறுப்பே’ என்னும் இந்த நாவல் செனகல் நாட்டு எழுத்தாளர் டவிட் டையோப் எழுதியது.

ஃப்ரெஞ்சிலிருந்து மொழிபெயர்ப்பு செய்தவர் அன்னா மொஸ்கோவகிஸ்.

இதுவரை நாம் அதிகம் கேள்விப்படாத, முதல் உலகப் போரில் பிரான்சுக்காக மேற்கு முனையில் போராடிய செனகல் நாட்டு வீரர்கள் பற்றிய கதை.

‘இரவில் எல்லா ரத்தமும் கறுப்பே’ என்னும் இந்த நாவல் பித்தநிலையை நோக்கி வெகுவேகமாக ஈர்க்கப்படும் ஒரு இளைஞனைப் பற்றியது.

மாபெரும் யுத்தம் எனப்படும் முதல் உலகப் போரில், ஃபிரெஞ்சுக் கொடியின் கீழ் போராடும் இரண்டு இளைஞர்கள் ஆல்ஃபா ன்டியயே & மடெம்பா டையோப்.

ஒரே பதுங்கு குழியில் சகோதரர்களாக இருந்த இவர்கள் கேப்டன் அர்மாண்ட் விசிலடிக்கும் போதெல்லாம் பதுங்கு குழியைவிட்டு வெளியே வந்து நீலக்கண் எதிரிகளோடு போராடுகிறார்கள்.

ஒரு நாள் டையோப் மரணமடையும் அளவுக்கு காயமடைகிறார். தான் அறிந்த, நேசிக்கிற எல்லாவற்றிடமிருந்து வெகுதொலைவில், மிருகத்தன்மை கொண்ட பதுங்குகுழியில் தனித்திருக்க முடியாமல் தவிக்கிறான் ஆல்ஃபா. போரில் வெறி கொண்டு போராடுகிறான்.

வீரத்திற்கும் பித்தநிலைக்கும் இடையில் உருவாகும் ஆன்மீகமத்தில் நாவல் உயர்கிறது.
“இந்த நாவல் ‘பிரெஞ்சு வரலாற்று நூல்களில் இல்லாத ஒரு துயரக் கதையைக் கூறுகிறது.” என்று ஏஞ்சலிக் கிறிசாபிஸ் கார்டியனில் எழுதியிருக்கிறார்.

1966ல் பாரிஸ்சில் பிறந்த ‘டவிட் டையோப்’ செனகல் நாட்டில் வளர்ந்தவர். பாவ் பல்கலைக் கழகத்தில் 18ம் நூற்றாண்டு இலக்கியம் போதிக்கும் இவரது இரண்டாவது நாவல் இது.
ஏற்கனவே பல பரிசுகளைப் பெற்றிருக்கும் இந்த நாவல் 13 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

புக்கர் விருது என்பது 50,000 ஸ்டெர்லிங் பவுண்டுகள். இந்தியப் பணத்தில் அரைக்கோடி. (ரூபாய் 51,63,145.00) எழுத்தாளருக்கும் மொழிபெயர்ப்பாளருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

விருது பெற்ற எழுத்தாளர் டவிட் டையோப், மொழிபெயர்ப்பாளர் அன்னா மொஸ்கோவகிஸ் இருவருக்கும் வாழ்த்துகள்.

நன்றி :  முகநூல் பதிவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *