Port City சீனாவிற்க்கு முட்டை இடும் தங்கவாத்து!

இலங்கை முகாமிற்குள் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் மூலம் தலையை நுழைத்த சீன ஒட்டகம் இப்போது துறைமுக நகரத்தில் நிரந்தரப் படுக்கை அமைத்துவிட்டது. ராஜபக்சக்களுக்கும், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வாழ்த்துக்கள். இதை இவ்வளவு இலகுவில் சாத்தியமாக்கிய 69,000 சிங்கள மக்கள், சிங்கள, தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள், முப்படைகள், இந்தியா, மேற்கு நாடுகள் அத்தனை பேருக்கும் அனுதாபம்.

இந்நாளுக்கான திட்டம் பல வருடங்களுக்கு முன்னரே, இலங்கைக்கு வெளியே தீட்டப்பட்டது என்பதில் சந்தேகப்பட இடமில்லை. உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பின் பின்னால், ராஜபக்சக்கள் மட்டும்தான் இருக்கிறார்கள் என நம்பத் தேவையில்லை. நன்றாகத் திட்டமிட்டு, செவ்வனே முடிக்கப்பட்ட இத் திட்டத்திற்கான ஒட்டுமொத்தமான ‘ஸ்கிறிப்டும்’ இலங்கையில் எழுதப்படவில்லை. இத நடைமுறைச் சாத்தியமாக்கியது மட்டுமே இலங்கை.

ராஜபக்சக்களின் மீளமர்த்தலுக்கு அப்பால் நடைபெற்ற மிக முக்கிய நிகழ்வு, 20 வது திருத்தம். இப்படியொரு அரசியலமைப்பு திருத்தத்தை, அதுவும் சில நாட்களுக்குள் உருவாக்க, தற்போதுள்ள ராஜபக்ச முகாமில் எவருமில்லை. அது யாரால் உருவாக்கப்பட்டது என்பதை நீதியமைச்சர் அலி சப்றி பாராளுமன்றத்தில் கூற மறுத்துவிட்டிருந்தார். தற்போது வரையப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ள துறைமுகநகரச் சட்ட வரைவு வெளிநாட்டு நிறுவனம் ஒன்றினால் தயாரிக்கப்பட்டது என்கிறார்கள். இச் சட்டமூலத்தில் சுமார் இருபத்தைந்து அரசியலமைப்பு முரண்பாடுகள் இருக்கிறது என்பதைக்கூட, உலகப் புகழ் பெற்ற சட்டப் பேராசிரியர் ஜி.எல்.பீரீஸ் கூட் பார்க்கவில்லை என்றால் – do as you are told- கட்டளை அவ்வளவு பலமாக இருந்திருக்க வேண்டும் அல்லது முதுகெலும்புகள் அதி பலவீனமாக இருந்திருக்க வேண்டும்.

நிறைவேறி விட்டது. சீனாவில் பட்டாசுகள் வெடித்துக்கொண்டிருக்கும். விரைவில் துறைமுக நகரத்தில் சீனக் கொடி பட்டொளி வீசிப் பறக்கப் போகிறது. சீனம், சிங்களம், ஆங்கில மொழிகளில் வீதிப் பதாகைகள் பிரமாண்டமாக எழுப்பப்படப் போகின்றன. மதத் தலைவர்களைச் சமாதானமாக்க துறைமுகத்திலேயே அதி உயரமான புத்த விகாரையும், ஆயிரம் கால் புத்த கலாச்சார மண்டபமும் கண் விழித்து மூடுவதற்குள் நிர்மாணிக்கப்பட்டுவிடும்.

துறைமுக நகரத்தால் தமிழருக்கு நேரடியாக எந்தவித இலாப நட்டமுமில்லை. சிங்களவர்களைப் போலவே அவர்களும் அங்கு வெளிநாட்டுக்காரர் தான். 99 வருடங்களுக்குள் சீனர் இலங்கையின் இரண்டாவது பெரும்பான்மை இனமாக வந்துவிடுவர். அதி முக்கிய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சொர்க்கம் அவர்களுக்கு தங்கத் தட்டில் வைத்துப் பரிசளிக்கப்பட்டிருக்கிறது. அதன் பிரதியுபககாரமாக ராஜபக்ச பரம்பரையினருக்கு துறைமுக நகரத்தில் மாட மாளிகைகள் பரிசாகக் கிடைக்கலாம். ஒரு காலத்தில் (உயிரோடு இருந்தால்) ராஜபக்சக்கள் மக்களின் கல்லெறிகளிலிருந்து தப்பி வாழ அது அடைக்கலத்தையும் வழங்கலாம். ராஜபக்சக்களின் எடுபிடிகளுக்கு ஓரமாக நின்று தெரு வியாபாரம் செய்ய சீனா இடமொதுக்கிக் கொடுக்கலாம். அங்கு முக்கிய தெருவியாபாரிகள் சீனராகவே இருப்பர்.

கடந்த சில மாதங்களாக, குறிப்பாக 20 வது திருத்தம் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி தனது சர்வ வல்லமையை மீளப்பெற்ற பின்னர், இராணுவத் தளபதிகளின் அமைதி ஒரு விடயத்தைச் சொல்கிறது. சிங்கள கடுந்தேசியவாதிகளின் இரைச்சல் பெரும்பாலும் இல்லையென்றாகிவிட்டது. மதத் தலைவர்கள் தாங்கள் விட்ட மகா தவறை நினைத்து மண்டையில் குத்திக்கொள்கிறார்கள்.

சிங்கராஜா வன அழிப்பை நேரில் சென்று பார்த்த பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்தின சொன்ன விடயம் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியது. அரசாங்கத்தின் சூழல் கட்டுப்பாடுகளையும் மீறி வன அழிப்பை ஏவி விடுவது அரசியல்வாதிகள் தான், என அவர் தனது இயலாமையை வெளிக்காட்டியிருந்தார். அதன் பிறகு அவரது வழமையான ‘தேசிய பாதுகாப்பு’ கர்ச்சிப்புகள் குறைந்துவிட்டன. காரணம் அக் குறிப்பிட்ட வன அழிப்பு, அம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சீன தொழிற்பேட்டைக்கு நீர், மின் வழங்கலுக்காக இரண்டு பாரிய நீர்த் தேக்கங்களை அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது அவருக்குத் தெரிந்துவிட்டது. அவர் சிங்களத் தேசியவாதி, சீனத் தேசியவாதி அல்ல.

இதர விடயங்களில் போல, சீனா எவ்விடயத்தையும் கால தாமதப்படுத்துவதில்லை. அவர்களது தேவைகளை ராஜப்கசக்கள் துரிதமாகச் செய்துகொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். துறைமுக நகரத்தில் இராணுவத்துக்கு எந்தவித அக்கறையுமில்லை; அதனால் இலாபமுமில்லை. மியன்மாரில் போல அதிகாரத்தைக் கைப்பற்றும் முனைப்புகள் அவர்களிடமில்லை. துறைமுக நகரம், அம்பாந்தோட்டை என சீன இராணுவம் குடிவந்த பின்னர் தான் அவர்கள் விழித்துக்கொள்வார்கள்.

துறைமுக நகரத்தை ஒரு துபாய், சிங்கப்பூர் எனப் படம் காட்டி ராஜபக்ச தரப்பு விற்றிருக்கிறது. இதில் கொள்ளை கொள்ளையாகப் பணம் சம்பாதிக்கப் போகிறவர்கள் ராஜபக்ச குடும்பத்தினர். அவர்கள் தமது இலக்கிலிருந்து மாறவில்லை. சேசெல்ஸ் போன்ற நாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகளின் பணத்தையும், நாட்டை விற்றதற்காக சீனா கொடுத்த ‘கமிசன்’ பணத்தையும் பக்கத்தில் கொண்டுவந்து வைத்திர்ப்பதே அவர்களது திட்டம். அதில் அவர்கள் குடும்பமாக, சகோதரர்களாக வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

துறைமுக நகரம், மகாபாரதத்தில் வரும் ஒரு அரக்கு மாளிகை மட்டும்தான். அது தனவந்தரின் விளையாட்டுத் தளமாகவே இருக்கும். அது சகல தரப்பினரும் வந்து குடித்து, கூத்தியாடி, சூதாடிச் செல்ல களமமைத்துக் கொடுக்கும் சொர்க்கம். லொஸ் ஏஞ்சலிஸ் எப்படி அமைதியாக அரேபிய முடிக்குரியவர்களை அழைத்து அவர்களின் பணத்தைப் பிடுங்குகிறதோ அப்படியான ஒன்றாகவே இதுவும் இருக்குமென நம்பலாம். அங்குள்ள கண்ணாடி மாளிகைகளின் குடியிர்ப்பாளர்களில் பலர் கவர்ச்சியான சீன, கொரிய பெண்களாக இருக்கலாம். இங்கு கிடைக்கும் இலாபம் ராஜபக்சக்கள் சொலவதைப் போலவோ அல்லது கூசா தூக்கும் கப்ரால், பீரிஸ் போன்றோர் சொல்வதைப் போலவோ இலங்கையின் பொருளாதாரத்துக்கு அள்ளிக் கொட்டும் என எதிர்பார்க்கத் தேவையில்லை.

துறைமுக நகரத்தின் நாணயம் சீனாவின் யுவானாக இருக்குமென ஆரம்பத்தில் கூறப்பட்டது. பின்னர் அது ‘டொலராக’ மாற்றப்பட்டது என்கிறார்கள். திருவாளர் ‘ஹிட்லர்’ அமுனுகம கூறியதைப் போல பசில் ராஜபக்ச ‘நாட்டின் நன்மைக்காகவே திடீரென அமெரிக்கா செல்ல வேண்டி வந்தது’ என்பது துறைமுக நகரத்தால் ‘பயப்பட எதுவுமில்லை’ என அமெரிக்காவைத் தாஜா பண்ணுவதற்காகவாக இருக்கலாம். எனவே அமெரிக்காவைக் குஷிப் படுத்த ஏதாவது விட்டுக்கொடுப்புகளுடன் அவர் நாடு திரும்பலாம்.

துறைமுக நகரத்தை ஒரு front ஆக மட்டுமே சீனா பாவிக்கும். அதன் நிர்வாகத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் அங்கு முதலீட்டாளர்களைக் கொண்டு வருவதற்கு அதை ஒரு ‘சிங்கப்பூராகக்’ காட்டியே ஆக வேண்டும். ஹொங்க் கொங் போல இறுக்கமாக அங்கு இருக்க முடியாது. கொழும்பு துறைமுக நகரம் சீனாவின் பொன் முட்டை தரும் வாத்து. அதை எப்படி வளர்த்துப் பெருக்குவதென்று சீனாவுக்குத் தெரியும். இவ் விடயத்தில் இந்தியாவின் வழமையான நெளிவுகளை (சுளிவுகள் அல்ல!!) அது தனக்குச் சாதகமாகப் பாவிக்கும். அதே வேளை சீனாவின் military-industrial complex அம்பாந்தோட்டை தான். அங்கு நீண்டகாலக் குடியிருப்பிற்கு சீனா தயாராகிவிட்டது. அதுதான் சீனாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கோட்டை. அவுஸ்திரேலியாவில் இருக்கும் அமெரிக்காவின் இரகசிய பிரதேசமான அலிஸ் ஸ்பிறிங்ஸ் போலவே சீனாவுக்கு அம்பாந்தோட்டை என்பது மட்டும் இப்போதைக்குப் போதுமானது.

இந்தியா பல தடவைகளில் பல அணில்களை ஏறவிட்டுப் அண்ணாந்து பார்த்து வீணி வடித்திருக்கிறது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும்படி இலங்கை முதலில் இந்தியாவிடம் தான் கேட்டிருந்தது. இந்தியா அதற்கு இணக்கம் தெரிவிக்காமல், கிழக்கு கொள்கலன் முனையத்தில் மட்டும் தன் கண்களை வைத்திருந்து இறுதியில் அந்த அணிலும் ஏமாற்றிவிட்டது. இப்போது துறைமுக நகரத்தில் இவ்வளவும் நடக்கிறது ஆனால் அது கும்பமேளாவில் cowமியக் கோஷ்டிகளுக்குக் களமமைத்துக்கொடுத்துக் கொண்டிருக்கிறது. வாரணாசி உறுப்பினராகிவிட்ட மோடி வெண்தாடியுடன் தன்னை ஒரு சிவனாகவே நினைத்துப் பரவச நிலைக்குச் சென்றுவிட்டார். இலங்கை நிரந்தரமாகவே இந்தியாவின் கைகளிலிருந்து விடுபட்டுப் போய்க்கொண்டிருக்கிறது.

மேற்கு நாடுகளைப் பொறுத்த வரையில், பைடன் நிர்வாகம் பலத்த ஏமாற்றத்தைத் தருகிறது. உலகத்தில் அமெரிக்கா என்றொரு நாட்ட இறைவன் படைத்தது இஸ்ரேலைக் காப்பாற்றுவதற்காக மட்டுமே என அவர் தீர்க்கமாக நம்புகிறார். பாலஸ்தீனத்தில் எண்ணற்ற குழந்தைகள் கொல்லப்பட்ட்போது இரங்கமுடியாத இப் பிறவிக்கு விமோசனமில்லை. கைவிட்ட கேஸ். ஒபாமா காலத்தில் கோதாபயவுடன் ‘டீல்’ போட்டு தமிழர்களைக் கொன்றொழித்ததில் அவர் கைகளிலும் இரத்தக் கறையுண்டு. எனவே துறைமுக நகரத்தில் வானத்தைத் தொடும் ஒரு அழகான கண்ணாடி மாளிகையில் அமெரிக்காவின் கொடியொன்றையும் சீனா பறக்க விடும். அதோடு அவர் மனக்குளிர்ந்து விடுவார்.

இவையெல்லாவற்றுக்கும் மாறாக, எனக்கும் கனவு காண உரிமையுண்டு என்ற வகையில் – இந்தியாவிலும், அமெரிக்காவிலும் கொஞ்சம் முதுகெலும்புள்ள தலைமைகள் வந்தால், அவர்கள் துறைமுக நகரத்தின்மீது பொருளாதாரத் தடை விதித்தால் (economic sanctions) – அங்கு வணிகம் செய்பவர்களும், முதலீடு செய்பவர்களும் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடிவிடுவார்கள். இதனால் அங்கு சீனாவும், சீனாவின் நண்பர்களும் மட்டுமே வியாபாரம் செய்யலாம். சீனா உலகின் தொழிற்சாலையாக மட்டுமே இருக்க முடியுமே தவிர நுகர்வோராகவும் இருக்க முடியாது. உலக வர்த்தகம் இன்றி அதனால் சீவிக்க முடியாது. எனவே துறைமுக நகரம் அதன் சுடுகாடாக அமைய வாய்ப்புண்டு.

போர்களை விட உலகில் அதிக அழிவுகளைக் கொண்டுவருவது பொருளாதாரத்தடை. ஈரான், ஈராக், வெனிசுவேலா என்று எண்ணற்ற நாடுகள் சமகாலத்தில் மண்டியிட்டமைக்கு வானத்திலிருந்து பொழிந்த குண்டுகள் காரணமல்ல, வயிறுகள் வெந்தமையே காரணம். மக்கள்தான் இத் துன்பங்களை அனுபவிக்கப் போகிறவர்கள். துறைமுக நகரத்தின் மக்கள் சாதாரண மக்களல்ல என்ற வகையில் – who cares?.

எனவே எனது எதிர்ப்பார்ப்பு? ஜே.வி.பி. தலைமையிலான மூன்றாவது புரட்சி – அரிவாளையும் சுத்தியலையும் எறிந்துவிட்டு, யதார்த்தமான உண்மையான, கற்பனைகளுடன் கூடாத அணுகுமுறைகளுடன் கூடிய மூன்றாவது எழுச்சி, மக்கள் சக்தியாக உருவெடுக்கும். இலங்கையில் ஜனநாயகம் தப்பிப் பிழைக்குமானால், புத்த மகாசங்கங்களின் அனுசரணையுடன், ஆச்சரியப்படத்தக்க வகையில் இராணுவத்தின் அனுசரணையுடன், மக்கள் சக்தி ஆட்சியமைக்கும். புலிகளை வென்ற கதையும், தமிழர்களை வென்ற கதையும் இன்னும் சில தசாப்தங்களுக்கு எடுபடவும் முடியாது; எடுக்கப்படவும் கூடாது.

தமிழர்களைப் பொறுத்தவரையிலும், தீவிர தமிழ்த் தேசியம் தற்காலிகமாகவேனும் கிடப்பில் போடப்பட்டு உள்ளூர் உற்பத்தியான ஒரு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றுக்குத் தயாராக இருக்க வேண்டும். அனுரகுமார திசநாயக்கா அமரவன்ச அல்ல. அவரது தலைமையில் ஜே.வி.பி. பல நிதர்சனங்களை உணர்ந்திருக்கிறது. அவரோடு கற்றவர்களும், பண்புள்ளவர்களும் நிற்கிறார்கள். சஜித் பிரேமதாசவுக்கும், சரத் பொன்சேகாவுக்கும் வாக்களித்த தமிழ் மக்கள் ஒரு முறை அநுரகுமாரவிலும் காசைக் கட்டிப் பார்க்கலாம். குதிரை வெல்லும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

வெளிநாடுகள் மூலம் தமிழருக்குத் தீர்வு? பைடனோடு அந்த நம்பிக்கை அறவே இல்லாமற் போய்விட்டது. ஐ.நா. நல்லதொரு தடிதான் ஆனால் அதை யார் வைத்திருப்பது என்பதைப் பொறுத்தே பலன் அமையும். நமக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை.

தலைப்பு ‘தி ஐலண்ட்’ பத்திரிகையில் லூசியன் ராஜகருணாநாயக்கவின் கட்டுரையிலிருந்து : Courtesy: The Island / Lucien Rajakarunanaya

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *