அமெரிக்க ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவியதாக சீனா தெரிவிப்பு!

உலகத்தை ஆட்டிப்படைக்கும் கொரோனாவின் பிறப்பிடம் சீனா என்று கூறப்படுவதால், அதுதொடர்பான விசாரணை அறிக்கையை 90 நாளில் கொடுக்க அமெரிக்க உளவுத்துறைக்கு அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார். ஆனால், அதற்கு சீனா கேலியும், கிண்டலுமாக பதிலை தயாரித்து வைத்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹானில் இருந்து பரவிய கொரோனா  தொற்று, இன்று உலகம் முழுவதும் இதுவரை 35 லட்சத்துக்கு மேற்பட்ட மக்களை  கொன்றுள்ளது. காரணம், வூஹான் வைராலஜி ஆய்வகத்தில் பணியாற்றிய ஆய்வாளா–்கள்,  அதே 2019, நவம்பரில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா் என்று அமெரிக்க உளவுத் துறை அறிக்கை கூறுகிறது. ஆனால், இதற்கு  மறுப்பு தெரிவித்த சீனா, ‘அமெரிக்க ஆய்வகங்களில் இருந்தும்கூட கொரோனா பரவி  இருக்கலாம்’ என்று நக்கலாக பதிலளித்தது.

இதற்கிடையே கொரோனாவின் பிறப்பிடம் குறித்து ஆய்வு நடத்திய உலக சுகாதார அமைப்பு, ‘வவ்வால்கள் மூலம் தொற்று  பரவியதற்கான காரணங்கள் குறைவு; ஆய்வகத்தில் இருந்து பரவியதா? என்பதை உறுதியாக கூறமுடியாது’ என்று தெரிவித்தது. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன்  உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. உலக சுகாதார அமைப்பின் ஆய்வில்  17 சீன ஆராய்ச்சியாளா–்கள் இடம்பெற்றிருந்ததால், அவர்களுக்கு சாதகமாக முடிவு அறிவிக்கப்பட்டதாக பலநாடுகளும் குற்றம்சாட்டின. நிலைமை இவ்வாறு இருக்க, அமெரிக்க அதிபராக வந்துள்ள ஜோ பிடன் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்ட அறிக்கையில், ‘கொரோனா தொற்று எங்கிருந்து, எப்படி பரவியது என்ற இறுதி முடிவுக்கு வரும் வகையில், அமெரிக்க உளவுத்துறை விசாரணையை துரிதப்படுத்த வேண்டும்.

விசாரணைக்கு உதவியாக அமெரிக்காவின் தேசிய ஆய்வகங்களையும் சோ்த்துக் கொள்ள வேண்டும். சீனாவை இந்த விசாரணையில் முழுமையாக ஈடுபடுத்தவும், வெளிப்படையாக தன்னிடம் உள்ள தகவல்கள், ஆதாரங்களை அளிக்க வலியுறுத்தவும் சா்வதேச நாடுகளுடன் அமெரிக்கா இணைந்து பணியாற்றும். கொரோனா பிறப்பிடம் குறித்த ஆய்வில் தாமதப்படுத்தினால் விசாரணை தோல்வியில்தான் முடியும். மே மாதம் எனக்கு கிடைத்த விசாரணை அறிக்கையில் கொரோனா பிறப்பிடம் இரண்டு சூழலில்தான் நடந்திருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே, விரிவாக விசாரணை நடத்தி 90 நாள்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுளேன்’ என்று தெரிவித்துள்ளாா். ஜோ பிடனின் அறிக்கையை பலநாடுகள் வரவேற்றிருந்தாலும்கூட, இதனை சீனா கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை. போதாக்குறைக்கு அமெரிக்காவை சகட்டுமேனிக்கு கிண்டலடித்துள்ளது.

இதுதொடர்பாக, அந்நாட்டு அரசின் ஊதுகுழலாக உள்ள ‘குளோபல் டைம்ஸ்’ பத்திரிகையில் வெளியான கட்டுரையில் அறியமுடிகிறது. அந்த கட்டுரையில் கூறியிருப்பதாவது: சீனா மற்றுமின்றி வெளிநாடுகளில் உள்ள பிரபலமான தொற்றுநோயியல் நிபுணர்கள்  மற்றும் விஞ்ஞானிகள், ‘கொரோனாவின் பிறப்பிடத்தை கண்டறிய அமெரிக்கா உளவுத்துறை அமைப்புகளை இறக்கிவிடுவது, முழு  முட்டாள்தனம். ஆய்கவத்தில் இருந்து கொரோனா வைரஸ் கசிவதற்கு  வாய்ப்பில்லை’ என்கிறார்கள். அமெரிக்கா தனது உளவு அமைப்புகளை  வைரசின் பிறப்பிடம் குறித்து கண்டறிய 90 நாள் கெடு விதித்துள்ளது. விஞ்ஞானிகளால் ஆராய்ச்சி செய்து கண்டறியப்பட வேலையை, உளவுத்துறை அமைப்புகளிடம் ஒப்படைத்து இருப்பது மிகவும் நகைப்புக்குரியதாக உள்ளதாக முன்னாள்  சீன சிடிசி தலைமை தொற்றுநோயியல் நிபுணர் ஜெங் குவாங் குறிப்பிடுகிறார்.

தொற்றுநோயை  எதிர்த்து போராடுவதில் மேற்கத்திய நாடுகள் தோல்வியடைந்த நிலையில், அதன் பழியை சீனாவின் மீது போடுவது அபத்தமானது. வைரஸ் பரவியது முதல் மேற்கத்திய  அரசியல்வாதிகள் மற்றுமின்றி ஊடகங்களும், சீனாவிற்கு எதிராக வைரஸ் ‘லீக்’ செய்திகளை வெளியிடுகின்றன. ஆய்வகத்திலிருந்து வைரஸ்  கசிந்ததற்கான வாய்ப்புள்ளதாக கருதும் மேற்கத்திய உளவுத்துறை, அதற்கான எந்த ஆதாரத்தையும் குறிப்பிடப்படவில்லை. விஞ்ஞானபூர்வமான கேள்வியில், அரசியலை கலந்து அமெரிக்கா தரப்பில் இருந்து சீனாவுக்கு அழுத்தம்  கொடுக்கப்படுகிறது. கொரோனாவின் தோற்றம் – தடமறிதல் விளையாட்டை தொடங்கிய அமெரிக்காவுக்கு மற்றுமின்றி, சர்வதேச விஞ்ஞானிகளுக்கும் இது மிகவும் சவாலான  தருணம். தொற்றுநோயை எதிர்த்து போராட வேண்டிய இந்த நேரத்தில், சில நாடுகள் அதற்கு தடை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்கின்றன.

கடந்த மே 14ம் தேதி, 18 ஆராய்ச்சியாளர்கள் ஒன்றுசேர்ந்து பத்திரிகை ஒன்றில் கடிதத்தை வெளியிட்டனர். அதில், ‘சீன ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ்  (SARS-CoV-2) கசிந்தது என்பதை ஆழமாக ஆராய வேண்டும். இதுதொடர்பாக முறையான விசாரணை நடத்த வேண்டும்’ என்று கூறியது. அதேபோல், உலக சுகாதார நிறுவனமும், ஆய்வகத்திலிருந்து வைரஸ் கசிந்தது என்பதற்கான வாய்ப்பை நிராகரித்தது. உணவு சந்தை மூலமாக விலங்குகள் மற்றும்  மனிதர்களிடையே தொற்று பரவியதற்கான சாத்தியமான கூறுகள் உள்ளதாக தெரிவித்தது. விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு தொற்று பரவியதை கண்டுபிடிக்க முடியும் போது, ஆய்வகத்தில் இருந்து கசிந்தது என்பதை எப்படி கண்டுபிடிக்க முடியாமல் போகும்? ஏனெனில் ஆய்வகத்தின் ‘ஸ்பில்ஓவர்’கள் மூலம் அதற்கான ஆதாரங்கள்  எஞ்சியிருக்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக, பாதிக்கப்பட்ட ஊழியர்கள் அல்லது  அசுத்தமான சூழல்கள் ஆய்வகத்தில் இருந்து மீட்கப்பட்டிருக்க வேண்டும். உலக சுகாதார அமைப்பின் வல்லுநர்கள் வூஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜிக்கு வந்தபோது, மேற்கூறிய அனைத்து வாய்ப்புகளையும் மதிப்பீடு செய்தனர். ஆனால், அவர்களுக்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. எனவே, கொரோனா ஆய்வகத்தில் இருந்துதான் கொரோனா பரவியது என்பதற்கான கதை எங்களை பொறுத்தமட்டில் முடிந்துவிட்டது என்றே சீன விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதுதொடர்பாக, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின்  அளித்த பேட்டியில், ‘உளவுத்துறை ஊழியர்களைக் காட்டிலும், விஞ்ஞானிகள் தான் கொரோனாவின் பிறப்பிடத்தை கண்டறிய முடியும். இரண்டு முறை உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் சீனாவிற்கு வந்து ஆய்வு செய்துவிட்டு சென்றுள்ளனர்’ என்றார்.

சீன  விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகள், உலக சுகாதார அமைப்பை சீனாவிற்குள் அனுமதித்தது போலவே, அமெரிக்காவும் உலக சுகாதாரக் குழுவை  வரவேற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அமெரிக்காவில் 2019ம் ஆண்டு தொடக்கத்தில் தோன்றி பரவிய தொற்று நோய் தொடர்பான கேள்விகளுக்கு அவர்கள் பதிலளிக்க  வேண்டும். உலக சுகாதார நிறுவனம் அளித்த ஆய்வறிக்கையில் இருந்து, அமெரிக்க அதிபர் அறிவியலைப் சரியாக புரிந்துகொண்டுள்ளாரா? ஜூலை 2019ல் வடக்கு  வர்ஜீனியா மற்றும் விஸ்கான்சினில் தொற்று பரவயது குறித்த ஆதாரங்களை அமெரிக்கா வெளியிட வேண்டும். அமெரிக்கா தனது சொந்த ஆய்வகங்களில் ஏற்பட்டுள்ள ஓட்டைகள் குறித்து அச்சம் கொண்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிப்பை சந்தித்த அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, பிரேசில், துருக்கி, ரஷ்யா போன்ற நாடுகள், சீனாவின் அறிவியல் ஆராய்ச்சி கூடங்களில் நடக்கும் திட்டங்கள் (?) சர்வதேச அளவில் எதிர்காலத்தில் எந்தமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கவலையில் உள்ளன. இதில், ஐக்கிய நாட்டு சபையும் அடங்கும். கொரோனா விஷயத்தில் சீனாவின் வெளிப்படையற்ற தன்மை, இன்று உலகையே நிலைகுலைய செய்துள்ளது.

எதிரி தாக்கும் முன் தாக்கிவிடு!
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், ‘வூஹான் வைரஸ்’ மற்றும் ‘சீனா வைரஸ்’ என்று சீனாவை கடுமையாக விமர்சித்தார். அதிபர் தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிட்டு வென்ற ஜோ பிடனும், அவர் கூறிய வார்த்தைகளை பயன்படுத்தாமல், டிரம்ப் பயன்படுத்திய வரியை மட்டும் பின்பற்றுகிறார். கொரோனாவின் பிறப்பிடம் தொடர்பாக, கேம்பிரிட்ஜ் யுனிவர்சிட்டி பிரஸ்ஸின் பயோபிசிக்ஸ் தனது காலாண்டு மதிப்பாய்வு கட்டுரையை விரைவில் வெளியிட உள்ளது. அமெரிக்க உளவுத்துறை ஒருபக்கம் வேலை செய்து கொண்டிருந்தாலும், கேம்பிரிட்ஜ் அறிக்கை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

எப்படியாகிலும், சார்ஸ் -2 மற்றும் கோவிட் -19 தொற்றுநோயின் பிறப்பிடம் குறித்து குறித்து சீனாவிடம் நிறைய தகவல்கள் உள்ளன. ஆனால் அந்நாடு முந்திக் கொண்டு தனக்கே உரிய பாணியல், ‘எதிரி தாக்கும் முன் நாம் தாக்கிவிடுவது தான் சிறந்த பாதுகாப்பு’ என்ற தந்திரத்தை பின்பற்றி வருகிறது என்கின்றனர் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.

வவ்வாலா? ஆய்வகமா?
வூஹானில் இருந்துதான் கொரோனா பரவியது என்று உலகமே கோஷமிட்டாலும் கூட, சீனா அதைப்பற்றி கண்டுகொள்ளவே இல்லை. இந்தாண்டு ஜனவரியில் வூஹானுக்கு உலக சுகாதார அமைப்பின் குழுவினர் சென்ற போது, அந்நாட்டு விஞ்ஞானிகளில் மிகவும் பிரபலமான சீனாவின் ‘பேட் பெண்’ என்று அழைக்கப்படும் வைராலஜிஸ்ட் ஷி ஜெங்லி மேற்கொண்ட ஆராய்ச்சி தொடர்பான கோப்புகளைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. கடைசியாக இந்த ஆய்வகத்திலிருந்து SARS-CoV-2 அல்லது Sars-2 கசிந்தது என்பதற்கான ஆதாரமில்லை உலக சுகாதார அமைப்பும் கூறிவிட்டது. இருப்பினும், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் சொல்வது என்னவென்றால்,

கொரோனா இயற்கையாக தோன்றியது என்றால், அறிவியல் சான்றுகளில் அதற்கான அடிப்படை இல்லை என்கின்றனர். அதை உறுதிப்படுத்தும் வகையில், பிரிட்டிஷ் பேராசிரியர் அங்கஸ் டால்லீஷ் மற்றும் நார்வே டாக்டர் பிர்கர் சோரன்சென் ஆகியோர், ‘சார்ஸ் -2 வைரஸ் சீன ஆய்வகத்தில் இருந்துதான் தோன்றியது. சீன ஆராய்ச்சியாளர்கள் தங்களிடம் உள்ள ரகசியங்களை மறைக்கின்றனர். சார்ஸ் -2 வைரஸ் வவ்வால்களில் இருந்து இயற்கையாக பரவியதாக ஆதாரங்களை திரட்டுகின்றனர்’ என்று அவர்கள் மேற்கோள் காட்டி உள்ளனர்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *