விமானம் தரையிறங்கும் போது எதற்காக ஜன்னலை திறக்க வேண்டும்?

விமானம் டேக்-ஆஃப் மற்றும் லேண்ட் ஆகும்போது ஏன் ஜன்னலை திறந்து வைக்க வேண்டும்? என்பதற்கான காரணங்கள் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

விமானத்தில் பயணிக்கும் போது, குறிப்பாக விமானம் டேக்-ஆஃப் செய்யப்படும்போதும், லேண்ட் ஆகும்போதும் ஜன்னல் மறைப்பை திறந்து வைக்கும்படி பணிப்பெண்கள் அறிவுறுத்துவார்கள்.

முதலில் பயணிகளின் பாதுகாப்பிற்காகவே தான் முதல் காரணம் ஆகும். விமான பயணத்திலேயே டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங் ஆகிய இரண்டும் தான் மிகவும் ஆபத்தானது என்பது நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

இத்தருணங்களில் ஜன்னலை திறந்து வைப்பதன் மூலம், பகல் அல்லது இரவு என்று எந்த நேரமானாலும், விமானத்திற்கு வெளியே உள்ள வெளிச்சத்திற்கு உங்கள் கண்கள் பழகி விடும். எனவே ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், உங்களால் விரைவாக செயலாற்ற முடியும்.

ஜன்னலை திறந்து வைப்பதற்கு மற்றொரு காரணம், விமான இறக்கைகள் போன்ற பகுதிகளில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால், விமான ஊழியர்களால் மிக எளிதாக பார்க்க முடியும் என்பதுதான்.

ஒருவேளை விமானத்தில் இருந்து அனைவரும் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டால், அனைவரும் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு எந்த பக்கம் பாதுகாப்பானது என்பதையும் இதன் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

மேலும் மற்றொரு காரணம் என்னவெனில், ஜன்னல்கள் மூடப்பட்டிருந்தால், விமானத்திற்கு உள்ளே என்ன நடக்கிறது? என்பதை வெளியே இருப்பவர்களால் காண முடியாது.

கேபினில் தீ எரிந்து கொண்டிருந்தாலும் அல்லது புகை வந்து கொண்டிருந்தாலும், ஜன்னல் மூடப்பட்டிருந்தால் வெளியே இருப்பவர்களால் காண முடியாது. ஆனால் ஜன்னல் திறந்திருந்தால், உள்ளே நடப்பதை தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.

எனவே விமானத்தில் பயணிக்கும்போது ஜன்னலை திறந்து வைக்க மறக்க வேண்டாம். இதில், உங்களுடைய பாதுகாப்பு மட்டுமின்றி மற்ற பயணிகளின் பாதுகாப்பும் அடங்கியுள்ளது என்பது மனதில் கொள்ளுங்கள்.

அதே நேரத்தில் ஜன்னலை திறந்து வைப்பதால் உங்களுக்கு நல்லதொரு அனுபவம் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *