தெற்காசிய நாடுகளில் கொரோனா தொற்று 30 மில்லியனைத் தாண்டியது!

தெற்காசிய பிராந்தியத்தில் கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் நேற்று 30 மில்லியனைத் தாண்டியதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தரவுகள் காட்டுகின்றன. இரண்டாவது அலை தாக்கத்தை சமாளிக்க இந்தியா போராடி வருவதோடு பிராந்தியம் எங்கும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

உலகின் இரண்டாவது பெரும் மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில் கொரோனா தொற்று ஆரம்பமானது தொடக்கம் இல்லாத அளவு இந்த மாதத்தில் அதிக உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், பூட்டான், நேபாளம், மாலைதீவு மற்றும் இலங்கை ஆகிய தெற்காசிய பிராந்தியத்தில் உலக நோய்த் தொற்று சம்பவங்களில் 18 வீதம் பதிவாகி இருப்பதோடு உலகளாவிய உயிரிழப்பில் 10 வீதம் இந்த பிராந்தியத்தில் பதிவாகியுள்ளது. எனினும் நோய்த் தொற்று மற்றும் உயிரிழப்பின் உண்மையான எண்ணிக்கை உத்தியோகபூர்வ கணக்கெடுப்பில் இடம்பெறுவதில்லை என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.

18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை இந்தியா இந்த மாதம் ஆரம்பித்தது. எவ்வாறாயினும் அதன் தேவையை உலகின் தடுப்பு மருந்து உற்பத்தியாளர்களால் பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை வரை இந்தியாவில் சுமார் 27.6 மில்லியன் நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 318,895 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஒக்டோபர் தொடக்கம் பிரதான தடுப்பூசி ஏற்றுமதிகள் தடைப்பட்டிருக்கும் நிலையில் நேபாளம் மற்றும் பங்களாதேஷ் போன்ற தெற்காசிய நாடுகள் தமது தடுப்பூசி திட்டங்களை முன்னெடுக்க இராஜதந்திர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

பாகிஸ்தானுக்கு சீனாவிடம் அன்பளிப்பாகவும் கொள்வனவாகவும் தடுப்பூசிகள் கிடைத்திருப்பதோடு உலக சுகாதார அமைப்பின் ஒதுக்கீட்டிலும் தடுப்பூசி பெற்றிருப்பதால் அந்த நாடு தற்போது 18 மில்லியனுக்கும் அதிகமான டோஸ்களை பெற்றுள்ளது. 19 அல்லது அதற்கு மேற்பட்ட அனைவருக்குமான தடுப்பூசி திட்டத்தை அந்த நாடு கடந்த புதன்கிழமை தொடக்கம் அரம்பித்தது.

ரோய்ட்டர்ஸ் நிறுவனத்தின் சர்வதேச தரவுகள் அடிப்படையில் நேற்று வெள்ளிக்கிழமை வரை தெற்காசியாவில் குறைந்தது 219.17 மில்லியன் தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *