இலங்கையின் கடற்பரப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாரிய பாதிப்பு!

கொழும்பு துறைமுகத்துக்கு அருகாமையில் நங்கூரமிடப் பட்டிருந்த தீ விபத்துக்குள்ளான கப்பலிலிருந்து கடலில் கலந்துள்ள பொருட்களைத் தொட்டவர்களுக்கு பல்வேறு நோய், உபாதைகள் காணப்படுவதாக சமுத்திரவியல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.

கரையொதுங்கும் பொருட்களை சேகரிப்பது மிகவும் ஆபத்தானவை என்றும் அவர் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்தகைய பொருட்கள் தொடர்பில் 1981 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு தகவல்களை தெரிவிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அவ்வாறு கடலில் மிதக்கும் மற்றும் கரையொதுங்கும் பொருட்களை முறைப்படி அகற்றுவதற்கான நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனரென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வெள்ளவத்தை முதல் சிலாபம் வரையிலான கடற்கரையோரங்களில் பல்வேறு பொருட்கள் ஒதுக்கியுள்ளன. நீர்கொழும்பிலேயே அதிகளவு பொருட்கள் ஒதுங்கியுள்ளன. இங்கு மூடை மூடையாக இரசாயனப் பொருடகள் என சந்தேகிக்கப்படும் பொருட்கள் ஒதுக்கியிருந்தன. அவற்றை அப்பகுதி மக்கள் எடுத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கப்பலிலிருந்து கடலில் மிதக்கும் பொருட்கள் கொழும்பு வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி மற்றும் தெகிவளை பகுதிகளில் நேற்று கரையொதுங்கியதால் கடற்படையினர் அதனை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இப்பொருட்கள் கொழும்பிலிருந்து நீர்கொழும்பு வரையிலான கடற்பரப்பில் கரையொதுங்குகின்றன. அவற்றில் பிளாஸ்டிக், கடதாசி உள்ளிட்ட பல்வேறு பதார்த்தங்கள் உள்ளடங்கிய பொதிகளும் காணப்படுவதாகவும் அவற்றை அகற்றும் நடவடிக்கைகளில் 250 கடற்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் சரக்குக் கப்பலின் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் கடற்படையினர், விமானப்படையினர் மற்றும் இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் இணைந்து மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். கப்பல் முழுவதும் தீ பரவியுள்ளதால் தீ இன்னமும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படவில்லை. நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக எத்தகைய எச்சரிக்கை மிகுந்த விளைவுகளையும் எதிர்நோக்க நேரிடலாம்.
கப்பலின் எரிபொருள் களஞ்சியப்படுத்தும் தாங்கிகளில் 278 மெட்ரிக் தொன் எரிபொருள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன. அந்த களஞ்சிய பகுதியில் தீ பரவினால் ஆபத்துக்கள் அதிகரிக்கலாம். தற்போதைய சூழ்நிலையில் கப்பல் இரண்டாக உடைந்தால் எரிபொருள் கடலில் கலக்கும் நிலையும் ஏற்படலாம்.

தற்போது எரிபொருள் கசிவு ஏற்பட்டுள்ளதால், அது களனி கங்கை உள்ளிட்ட சில பிரதேசங்களில் பரவக்கூடிய நிலையும் காணப்படுகிறது. கப்பல் முழுமையாக உடைந்து அல்லது சேதமாகும் பட்சத்தில் எமது நாட்டின் கடற்பரப்பு மற்றும் சுற்றுச் சூழலுக்கு பாரிய பாதிப்பு ஏற்படலாமெனவும் மத்திய சுற்றாடல் அதிகார சபை எச்சரித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *