தொடர்ந்து எரியும் கப்பல் அமில மழை பெய்யக் கூடும் என எச்சரிக்கை!

கொழும்பு கடற்பரப்பில் கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் MV X பேர்ல் கப்பலின் தீயை அணைக்க தொடர்ந்து முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ஆறு நிபுணர்கள் அடங்கிய நெதர்லாந்து குழுவொன்று கொழும்பு நோக்கி விரைந்துள்ளதாக இலங்கையின் அமைச்சர் ரொகித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

தீப்பற்றி எரிந்த கப்பலால் அமில மழை பெய்யும் ஆபத்து

கொழும்பு துறைமுகத்தில் தீப்பற்றி எரியும் எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பல் முழுமையாக அழிந்தால் இலங்கையில் அமில மழை பெய்யும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

தற்போது இலங்கையின் மேற்கு பிராந்தியத்தில் மழையுடனான காலநிலை நிலவி வருகிறது. இதனால் மழையுடன் அமில மழை பெய்யும் ஆபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் இலங்கை கடல் கட்டமைப்பு உட்பட முழு சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப்படக்கூடும் என்று மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கப்பலில் உள்ள இரசாயனங்களினால் நீண்டகால பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என ஆணையத்தின் தலைவர் எஸ்.அமரசிங்க தெரிவித்துள்ளார்.

கப்பலில் 1,487 கொள்கலன்கள் உள்ள நிலையில் அவை 74,000 டன் நிறைகளை கொண்டுள்ளன. இவற்றில் நைட்ரிக் எசிட் 25 டன் உள்ளன.

தீப்பற்றிய கப்பலில் இருந்து கரையொதுங்கிய பொருட்கள் சேகரித்த 8 பேர் கைது

கொழும்பு துறைமுகத்தில் தீ விபத்தினால் எரிந்து வரும் எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பலில் இருந்து கரை ஒதுங்கி பொருட்களை சேகரித்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் சிலர் கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பொலிஸார் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் இணைந்து, முனுகமுவ, துன்கல்பிட்டிய, நீர்கொழும்பு மற்றும் கொச்சிக்கடை ஆகிய பிரதேசங்களில் கடற்கரைக்கு அருகில் உள்ள பிரதேசங்களில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொளள்ப்பட்டுள்ளது.

கரை ஒதுங்கிய பொருட்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றையும் பொலிஸார் தங்கள் பொறுப்பில் எடுத்து சென்றுள்ளனர்.

கரை ஒதுங்கும் பொருட்கள் இரசாயனம் மிக்கதென்பதனால் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என மக்களுக்கு எச்சரிக்கப்பட்ட நிலையிலும் அங்கிருந்தவர்கள் இதனை கொண்டு சென்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *