கொரோனாவும், சித்த வைத்திய மரபும்!

கொரோனாப் பரவல், பொதுமுடக்கம், பரவலான பொருளாதாரச் சரிவு எல்லாம் எல்லாம் துவங்கி ஓராண்டைக் கடந்துள்ளது.

உலக அளவில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகம் எடுத்திருக்கிறது. இந்தியாவிலும் டெல்லி, கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் கொரோனா பரவல் நின்ற மிகத்தீவிரமாக பரவி வருகிறது.
இந்தநிலையில் தமிழக பாரம்பரிய சித்த மருத்துவ மரபைப் பற்றியும் அதன் மூலம் நோயை கட்டுப்படுத்தும் விதத்தைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்.

அமெரிக்கா போன்று ஆங்கில மருத்துவம் செழித்த நாடுகளில் ஏன் இந்த அளவுக்குப் பாதிப்பும், உயிரிழப்புகளும்? அங்கு ஏன் நோய்த் தடுப்பாற்றல் பரவலாக இல்லை?

சீனா ,இலங்கை போன்ற நாடுகளிலும், வேறு சில நாடுகளிலும் கொரோனா பாதிப்பிலிருந்து ஓரளவு பாதுகாக்க முடிந்ததற்கு என்ன காரணம்?
இலங்கையில் கொரோனா பரவலை ஆரம்பத்தில் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு முக்கிய காரணம் பாரம்பரிய மருத்துவ மரபுதான் பின்னர்  அலட்சியத்தால் மீண்டும் பரவதொடங்கியுள்ளது
எல்லாம் அந்தந்த நாடுகளில் இருந்த பாரம்பரியமான மருத்துவ மரபு தான்.
கொரோனா பரவலுக்குக் காரணமாகச் சொல்லப்பட்ட சீனாவில் பாதிப்பிலிருந்து வெளியே வந்ததற்கு முக்கியக் காரணம் – சீனா தன்னுடைய பாரம்பரிய மருத்துவ முறைக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்தது தான்.

அலோபதி மருத்துவ முறையின் சில அம்சங்களை அவர்கள் கணக்கில் எடுத்துக் கொண்டாலும், அது அவர்களுக்கு இரண்டாம் பட்சம் தான்.

இந்தியாவில் கொரோனா முதலில் கண்டுரணப்பட்ட மாநிலமான கேரளாவில் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது ஆயுர்வேத முறையில் தான். அதோடு கேரளாவுக்கே உரித்தான மருத்துவ மரபும் கையாளப்பட்டது.

தமிழகத்தின் மருத்துவ மரபு நீண்ட பாரம்பரிய மரபு கொண்டது. சித்தர்கள் துவங்கி மீக நீண்ட மரபில் செழித்த மருத்துவ முறை தான் சித்த வைத்தியம்.

சங்க இலக்கியத்திலேயே சித்த மருத்துவ மரபைப் பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. உணவைப் பற்றிய துல்லியமான பகுப்பாய்வு இங்கு நடந்திருக்கிறது.

“உணவெனப்படுவது நிலத்தோடு நீரே’’ என்கிறது புறநானூறு.

“வளி முதலா எண்ணிய மூன்றே’’ என்கிறது திருக்குறள்.

வாதம், பித்தம், நீர் என்று மூன்றாக உடலைப் பிரித்து அதற்கேற்ப உணவும் , மருந்தும் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. உள் மருந்தாக 32-ம், வெளி மருந்தாக 32-ம் சொல்லப்பட்டிருக்கின்றன.

காலத்தை வெவ்வேறு மண்டலமாகப் பிரித்து மருந்தை எடுத்துக் கொள்வதைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள்.

எதை எந்தக் காலத்தில் சாப்பிடுவது, எதைச் சாப்பிடுவதைத் தவிர்ப்பது என்கிற இரண்டையுமே சொல்கிறது சித்த மருத்துவம்.
ஸ்டெத்தாஸ்கோப் கண்டுபிடிப்பதற்குச் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாடி பார்த்து உடலுக்கு வந்திருக்கும் பாதிப்பைத் துல்லியமாக உணர்கிற மரபைக் கொண்டிருந்திருக்கிறது சித்த வைத்தியம்.
கையில் மணிக்கட்டுக்கு ஓர் அங்குலம் மேலே மூன்று விரல்களால் அழுத்தி எவ்வளவு விநாடிகள் பார்க்க வேண்டும் என்பது கூட உணர்த்தப்பட்டிருக்கிறது.

பல மூலிகைகள் வெவ்வேறு பாதிப்புக்குப் பரிந்துரைக்கப் பட்டிருக்கின்றன. உடலின் வர்மப் புள்ளிகளைக் குறிப்பிட்டு வர்ம முறைகளும் கையாளப்பட்டிருக்கின்றன.
அதே சமயம் சித்த வைத்தியம் ஏடுகள் எழுதி வைக்கப்பட்டு அடுத்த தலைமுறைகளுக்கு வந்தடைந்தாலும், அவை சித்த வைத்தியர்களிடம் ரகசியமாகவும் பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறது.

ஒவ்வொரு கிராமத்திலும் சித்த வைத்தியம் பார்க்க இருந்து வந்த வைத்தியர்கள் தற்போது காணாமல் போயிருக்கிறார்கள் அல்லது பின்தங்கிப் போக வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இது தவிர ஒவ்வொரு வீட்டிலும் ‘பாட்டி வைத்தியம்’ என்பது எளிய சிகிச்சையாக தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

மிளகு, பூண்டு, சீரகம், இஞ்சி, மஞ்சள், எலுமிச்சை, தூதுவளை, தேன், கீழா நெல்லி, ஆடா தொடை, கற்றாழைச் சாறு, துளசி போன்று பல்வேறு இயற்கையான தமிழ் மண் சார்ந்தவை உணவின் ஒரு அங்கமாகவே இருந்தன அல்லது சிகிச்சையில் முக்கியத்துவம் பெற்றன.

சின்னப் பாதிப்புக்குக் கூட உடனே அலோபதியைக் கையாளாமல் எளிய வைத்தியம் வீட்டிலேயே மூத்தவர்களால் பரிந்துரைக்கப்பட்டு வந்தது.

பிரசவத்தில் துவங்கி, வாயுப் பிடிப்பு, மூட்டு வலி உட்பட பலவற்றிற்கு எளிமையான தீர்வுகள் வீட்டுக்குள்ளேயே சொல்லப்பட்டன. அவற்றிற்கு நல்ல விளைவுகளும் இருந்தன.
வீடு, கிராமம் தாண்டி வேறு ஏதேனும் சிக்கல் வந்தால் தான் வேறு வைத்தியர்களைத் தேடிப் போவது என்பது தான் இங்குள்ளவர்களின் பொது இயல்பாக இருந்தது.

பிரிட்டிஷாரின் ஆட்சி இந்தியாவுக்கு வந்தபோது, அவர்கள் தங்கள் நாட்டின் மருத்துவ முறையான அலோபதியை இங்கு கொண்டு வந்தார்கள். ஊசி போட்டால் உடனே சரியாகி விடும் என்கிற மயக்கம் இங்கு பரப்பப்பட்டது.

அலோபதி பரிந்துரைத்த மருந்துகள் கவர்ச்சிகரமாகத் தெரிந்தன. அலோபதி சிகிச்சை மட்டுமே காலத்திற்கேற்ப ‘அப்டேட்’ பண்ணப்பட்ட வைத்தியமுறையாகப் பலருடைய மனங்களில் பதிய வைக்கப்பட்டது.
மொழி சார்ந்து ஆங்கில மொழிப் பயன்பாடு ஒருபுறம் பிரிட்டிஷார் ஆட்சியின் விளைவாக இங்கு திணிக்கப்பட்டு, மிக நீண்ட நெடிய மரபு கொண்ட தமிழ் மொழியை அறிந்தவர்களைப் பின்னுக்குத் தள்ளியதைப் போலவே, அலோபதி முறையிலும் நடந்தது.

காலத்திற்கேற்ற நவீன மாற்றத்தோடு அலோபதி இருப்பதாக நம்ப வைக்கப்பட்டு, நமது பாரம்பரியாமான வைத்திய முறை பின்னுக்குத் தள்ளப்பட்டது.

ஏதோ ரகசிய நோய்களுக்கும், ஆண்மை விருத்தி போன்றவற்றிற்கு மட்டுமே சித்த மருத்துவம் பயன்படுத்தப்படுவதைப் போன்ற பிரமை விளம்பரங்களால் ஏற்படுத்தப்பட்டது.

பிரமாண்டமான அளவில் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் இணைந்த ஒன்றாக அலோபதி மருத்துவமுறை கவர்ச்சிகரமாகவும், அதிகப் பணம் ஈட்டுகிற ஒன்றாகவும் மாறி நிற்க, நம் நாட்டில் எந்தையும், தாயும், முன்னோர்களும் கடைப்பிடித்த சித்த வைத்திய முறை பின்னுக்குத் தள்ளப்பட்டு,

அதைப் பற்றிப் பேசுகிறவர்கள் கேலி செய்யப்பட்டார்கள். அவதூறுக்கு ஆளானார்கள்.

குண்டர்கள் சட்டத்தில் போடுமளவுக்கு அவர்கள் நடத்தப்பட்டார்கள்.

அது பற்றிப் பொதுவெளியில் பேசியவர்கள் அதிகாரப் பின்புலத்தில் வாயடைக்கப் பட்டார்கள்.

கொரோனா காலத்திற்கு முன்பு டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் இங்கு பரவியபோது, சித்த வைத்திய மரபின் கூறான நிலவேம்பு நீர் பரிந்துரை செய்யப்பட்டது. அரசின் உதவியோடு நாடு முழுக்கச் சென்றடைய முடிந்தது.

அதேமாதிரி கொரோனா பரவியபோது, நோய்த் தடுப்புக்காக கபசுரக்குடிநீர், கபவாதக் குடிநீர் போன்றவை பரிந்துரைக்கப்பட்டாலும், அரசின் ஆதரவு கபசுரக் குடிநீருக்குக் கிடைத்து ஏராளமானவரகளைச் சென்றடைந்தது.

இஞ்சி, பூண்டு, சீரகம், மிளகு போன்றவற்றின் உபயோகம் தமிழகத்தில் அதிகரித்தது. அவை கலந்த கசாயங்கள் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டன.

இயற்கையான பொருட்கள் கலந்து கொதிக்க வைத்த நீரில் ஆவி பிடிப்பது இயல்பான அம்சமாகப் பரவியது. யோகாவின் ஓர் அம்சமான மூச்சுப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

சித்த வைத்திய சிகிச்சையை மேற்கொண்ட கொரோனா நோயாளிகள் மிக விரைவில் பெரும்பணத்தைச் செலவழிக்காமல் பாதிப்பிலிருந்து நலம் பெற்றுக் குணம் அடைய முடிந்தது. உயிரிழப்பிலிருந்தும் தங்களைத் தற்காத்துக் கொள்ள முடிந்தது.

சென்னை மட்டுமல்லாமல், தமிழகத்திலுள்ள பல நகரங்களில் இத்தகைய சித்த வைத்திய சிகிச்சைகள் நடந்தாலும், அலோபதி முறை வைத்தியத்திற்குக் கிடைத்த விளம்பரங்கள் இதற்குக் கிடைக்கவில்லை.

காரணம், கொரோனா காலத்திலும் பெரும் வணிகத்திற்கான சந்தர்ப்பம் உருவானதைப் போல, கூடுதலான பணத்தை அலோபதி மருத்துவமனைகள் வசூலித்தன.

இம்மாதிரியான நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வழிகாட்டச் சரியான திசை கிடைக்கவில்லை.

இதனால் தான் உருவான மண்ணிலேயே சித்த வைத்தியம் முடங்கிப் போனதைப் போல ஆனது. தற்போது மிக அண்மையில் உலக சுகாதார நிறுவனம் பாரம்பரிய மருத்துவ மரபைப் பேணுவதற்கான மையத்தை இந்தியாவில் உருவாக்கப் போவதாக அறிவித்திருக்கிறது.

கேரளாவில் மலைவாழ் மக்களின் பாரம்பரியமான மருத்துவ முறையை அதன் இயல்பு மாறாமல் அடுத்த தலைமுறைக்குப் பயன்படும் விதத்தில் அதற்கான சிகிச்சை மையங்கள் இருக்கின்றன.

அவற்றைக் கடல் கடந்து வந்து நம்பிக்கையுடன் பயன்படுத்துகிறவர்கள் இருக்கிறார்கள்.

அந்த விதமான மதிப்பு ஏன் காலத்தால் முதுமை கொண்ட சித்த வைத்தியத்திற்கு ஏன் இன்னும் கிடைக்கவில்லை அல்லது ஏன் உரிய முறையில் நிறுவன மயப்படுத்தப்படவில்லை?
ஏற்கனவே மத்திய அரசின் ‘ஆயுஷ்’ போன்ற நிறுவனங்கள் இருந்தும், சித்த மருத்துவம் பின்னொதுக்கப்பட்டதற்கு என்ன காரணம்? அதன் வலிமையை நாம் சரிவர உணராததும், மத்திய, மாநில அரசுகள் அதற்குரிய மதிப்பைத் தரத் தவறியதும் தான்.

“இருக்கும் இடத்தை விட்டு, இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றாய் ஞானத் தங்கமே’’ என்ற பாடல் வரிகள் தான் நினைவில் அலையடிக்கின்றன.

என்ன செய்வது? காலத்தின் கண்ணாடிக்கு முன் நம் சொந்த முகத்தைப் பார்க்கத் தவறிக் கொண்டிருக்கிறோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *