2019 நவம்பர் மாதம் வுஹான் ஆய்வகத்தில் பணியாற்றிய 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அதிர்ச்சி தகவல் வெளியானது!

ஒரு வருடத்திற்கு மேலாக உலகை மிக மோசமாக அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் எப்படி எங்கிருந்து தோன்றியது என்ற மர்மம் இன்னும் நீங்காத நிலையில், இதுதொடர்பில் அமெரிக்காவின் பிரபல செய்திதாள் பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

2019 டிசம்பர் மாதம் சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்னமும் உலகை அச்சுறுத்தி வருகிறது. முன்னதாக இந்த வைரஸ் வுஹான் நகரில் உள்ள ஆய்வகத்திலிருந்து பரவியிருக்கக்கூடும் என நிபுணர்கள் சந்தேகித்தனர்.

பலர் இது வௌவாலிடமிருந்து வேறறொரு விலங்கு மூலம் மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என தெரிவித்தனர்.

இதுகுறித்து சீனாவின் வுஹானுக்கு சென்று விசாரணை மேற்கொண்ட உலக சுகாதார அமைப்பின் சிறப்பு குழு, வைரஸ் ஆய்வகத்திலிருந்து பரவியதற்கான எந்த ஆதராமும் கிடைக்கவில்லை என குறிப்பிட்டது, எனினும் இது தொடர்பான விசாரணை தொடரும் எனவும் கூறியது.

இந்நிலையில், முன்னர் வெளியிடப்பட்ட அமெரிக்க உளவுத்துறை அறிக்கையை மேற்கோள் காட்டி வுஹான் ஆய்வகம் தொடர்வில் அமெரிக்காவின் பிரபல செய்தித்தாளான Wall Street Journal பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், சீனா கொரோனா தொற்று நோயை வெளிப்படுத்துவதற்கு சில மாதங்களுக்கு முன், அதாவது 2019 நவம்பர் மாதம் வுஹான் ஆய்வகத்தில் பணியாற்றும் 3 ஆய்வாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட ஆய்வாளர்களின் விவரம், அவர்கள் பாதிக்கப்பட்டிருந்த காலம் மற்றும் மருத்துவமனைக்கு சென்ற விவரங்கள் கிடைத்தால், வுஹான் ஆய்வகத்திலிருந்து வைரஸ் பரவியதா என்பது குறித்து பெரிய அளவிலான விசாரணைக்கு அழைப்பு விடுக்க கூடுதல் பலமாக இருக்கும் என Wall Street Journal குறிப்பிட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் கொரோனா தொடர்பிலான முடிவெடுக்கும் குழுவின் கூட்டத்திற்கு முன்னதாக Wall Street Journal-ன் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

உலக சுகாதார அமைப்பின் கொரோனா தொடர்பிலான முடிவெடுக்கும் குழு, கொரோனாவின் தோற்றம் குறித்த விசாரணையின் அடுத்த கட்டத்தைப் பற்றி விவாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *